• Sat. Jul 5th, 2025

24×7 Live News

Apdin News

செம்மணியில் இன்று 3 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுப்பு (படங்கள் இணைப்பு)

Byadmin

Jul 5, 2025


யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது சிறுவர்களின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் மூன்று என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மேலும் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 42 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் ஒன்பதாம் நாள் அகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது சிறுவர்களின் என்புத் தொகுதி எனச் சந்தேகிக்கப்படும் மூன்று என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 37 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 42 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாளை சனிக்கிழமை 10ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளன.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணிகளான வி.கே.நிரஞ்சன், ஞா. ரனித்தா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றனர்.

இன்று வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சங்கத்தினரின் சட்டத்தரணிகளான வி.மணிவண்ணன் உட்பட இருவர் அகழ்வுப் பணியின்போது முன்னிலையாகி இருந்தனர்.

By admin