• Sat. Jul 5th, 2025

24×7 Live News

Apdin News

செம்மணியில் சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்தெடுப்பு (படங்கள் இணைப்பு)

Byadmin

Jul 4, 2025


மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆடையின் சில பகுதிகள் நேற்று அடையாளம் காணப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள், ரோன் கமெரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்தப் புதிய பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமாகின.

இந்நிலையில் நேற்றைய அகழ்வின்போது ஆடை ஒன்றின் சில பகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அந்த இடத்தில் இன்று இடம்பெற்ற அகழ்வின்போது சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

எனினும், குறித்த பகுதியில் மூன்று நாட்களாக இடம்பெற்ற அகழ்வுகளின்போது எதுவித மனித எச்சங்களும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

By admin