பட மூலாதாரம், Getty Images
2006 ஆம் ஆண்டு மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 19 ஆண்டுகளும், விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி 10 ஆண்டுகளும் கழிந்துவிட்டன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 12 பேர் தண்டிக்கப்பட்டு ஒருவர் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் வழக்கின் மேல்முறையீட்டில் நேற்று தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்றம், தண்டிக்கப்பட்ட 12 பேரையும் விடுதலை செய்துள்ளது. ஆனால் பல கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமல் உள்ளது.
ஜூலை 11 2006 அன்று மும்பை புறநகர் ரயில்களில் ஏழு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த விபத்துகள் ஏழு வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்தன.
இதில் 189 பேர் உயிரிழந்த நிலையில் 824 பேர் காயமடைந்தனர். மும்பையில் நிகழ்ந்த மிகத் தீவிரமான தாக்குதலாக கருதப்படும் இது ‘7/11 குண்டுவெடிப்பு’ என பரவலாக அழைக்கப்படுகிறது.
இந்த வழக்கில் 2015 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்த நிலையில் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. தற்போது மும்பை உயர்நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்துள்ளது. குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவரால கமல் அன்சாரி 2021-இல் உயிரிழந்தார்.
இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் அணில் கிலோர் மற்றும் ஷ்யாம் சந்தக் அமர்வு, “அரசு தரப்பு இந்த வழக்கை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது” எனக் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீர்ப்பு குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் குடும்பங்களுக்கும் விடுவிக்கப்பட்ட 13வது சந்தேக நபரான அப்துல் வாஹித்திற்கும் நிம்மதி அளித்துள்ளது.
“இது மிகப்பெரிய நிம்மதியாக உள்ளது, நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். பல வருடங்களாக நான் மட்டுமல்ல, மற்றவர்களும் நிரபராதிகள் தான் எனக் கூறி வருகிறோம்” என அப்துல் வாஹித் தெரிவித்துள்ளார்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்பது இன்னும் மிக தொலைவில் தான் உள்ளது.
இந்த விபத்தில் தனது இடது கையை இழந்த மகேந்திர பிடாலே மிகவும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைவதாக தெரிவித்துள்ளார்.
“19 ஆண்டுகள் கழித்து அனைவரும் விடுவிக்கப்பட்டால், பல கேள்விகள் எழுகின்றன” என்று கூறும் அவர்,
“விசாரணை அதிகாரிகள் இத்தனை வருடங்களாக என்ன செய்து கொண்டிருந்தனர்? எங்கே தவறு நடந்தது? உண்மையான குற்றவாளிகள் யார்? அவர்கள் ஏன் இன்னும் பிடிபடவில்லை? நமக்கு எப்போதாவது பதில் கிடைக்குமா? உண்மையான குற்றவாளிகள் தற்போது கைது செய்யப்பட்டாலும் இதில் அடுத்த முடிவு வருவதற்கு 19 வருடங்கள் ஆகிவிடும்” என்றும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
மும்பை ஸ்தம்பித்த தருணம்
ஜூலை 11, 2006, ஒரு சாதாரண நாளாக மும்பையில் விடிந்தது.
மகேந்திர பிடாலே அன்றைய தினம் வைல் பார்லேவில் தனது அலுவலகத்தில் இருந்தார்.
ஒரு கண்ணாடி ஸ்டுடியோவில் வடிவமைப்பாளராக வேலை செய்து வந்த அவர், தினமும் புறநகர் ரயிலில் பயணித்து வந்தார்.
“நான் வழக்கமாக 7.30 மணி ரயிலில் தான் செல்வேன். ஆனால் அன்றைய தினம் சற்று முன்னரே கிளம்பி 6.10 மணி ரயிலில் சென்றேன்” என்கிறார் பிடாலே.
மாலை 6:24 மணிக்கு, ரயில் ஜோகேஸ்வரி நிலையத்திலிருந்து புறப்படும்போது, குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அன்று மாலை நடந்த ஏழு குண்டுவெடிப்புகளில் இதுவும் ஒன்று.
மகேந்திராவின் உயிர் காப்பாற்றப்பட்டாலும், அவர் தனது இடது கையை இழந்தார். 19 ஆண்டுகளுக்குப் பிறகும், முழுமையான நீதி இன்னும் கிடைக்கவில்லை என்று மகேந்திரா உணர்கிறார்.
விசாரணை எப்படி நடந்தது?
குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, மும்பை காவல்துறை ஏடிஸ்(பயங்கரவாத எதிர்ப்புப் படை) 13 பேரை கைது செய்தது. இந்த வழக்கில் 15 குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தனர்.
‘பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகள்’ பிரஷர் குக்கரில் குண்டுகளை வைத்ததாக ஏடிஸ் கூறியது.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் தளபதி அசாம் சீமாவின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த குற்றப்பத்திரிகை 10,667 பக்கங்கள் கொண்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் லஷ்கர்-இ-தொய்பாவுடனும், சிலர் சிமியுடனும் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டுகளை மறுத்து, வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினர்.
எம்சிஓசிஏ (மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கட்டுப்பாட்டுச் சட்டம் ) சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், தீர்ப்பு வர ஒன்பது ஆண்டுகள் ஆனது.
எம்சிஓசிஏ சட்டத்தின் கீழ், காவல் கண்காணிப்பாளருக்கு மேல் பதவியில் உள்ள ஒரு காவல் அதிகாரி முன் அளிக்கப்படும் வாக்குமூலத்தை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளலாம்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் எம்சிஓசிஏவின் அங்கீகாரத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினர், அதைத் தொடர்ந்து நீதிமன்றம் விசாரணையை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் வழக்கறிஞர் ஷாஹித் ஆஸ்மி, 2010 ஆம் ஆண்டு குர்லாவில் உள்ள அவரது அலுவலகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கிடையில், 2008 ஆம் ஆண்டில், மும்பை குற்றப்பிரிவு காவல்துறை இந்திய அரசாங்கத்தால் ‘பயங்கரவாத அமைப்பாக’ பட்டியலிடப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் (IM) உடன் தொடர்பு வைத்திருந்ததற்காக ஐந்து பேரை கைது செய்தபோது விசாரணை எதிர்பாராத திருப்பத்தை அடைந்தது.
உள்ளூர் ரயில்களில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு இந்திய முஜாஹித முஸ்லிம் அமைப்புதான் காரணம் என்று குற்றப்பிரிவு கூறியது.
ஆனால், இது ஏடிஎஸ் -இன் கூற்றுகளுக்கு முரணானது.
2013 ஆம் ஆண்டில், இந்திய முஜாஹித முஸ்லிம் அமைப்பின் இணை நிறுவனர் யாசின் பட்கல் கூட இந்த குண்டுவெடிப்புகளுக்கு தனது அமைப்புதான் காரணம் என்று கூறியிருந்தார்.
ஆகஸ்ட் 2014 இல் விசாரணை முடிவடைந்தாலும், உத்தரவு வருவதற்கு அதிக நேரம் எடுத்தது.
செப்டம்பர் 30, 2015 அன்று, 13 குற்றவாளிகளில் ஐந்து பேருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 13வது குற்றவாளி அப்துல் வாஹித் விடுவிக்கப்பட்டார்.
கீழ் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்படும்போது, வழக்கு தானாகவே உயர் நீதிமன்றத்திற்குச் செல்கிறது.
மற்ற குற்றவாளிகளும் தங்கள் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.
அதனையடுத்து இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்குச் சென்றது, தீர்ப்பு வருவதற்கு மேலும் 10 ஆண்டுகள் ஆனது.
பட மூலாதாரம், Getty Images
உயர் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
அதன் பின்னர் பத்தாண்டுகள் கடந்துவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் தண்டனைகள் மற்றும் மேல்முறையீட்டு விசாரணைகள் ஜனவரி 31, 2025 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் முடிவடைந்தன.
நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் நீதிபதி ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, ஆறு மாதங்களுக்கும் மேலாக தினசரி மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்தது.
மாநிலத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த விசாரணையில் பங்கேற்றனர்.
ஒடிசா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ். முரளிதர் மற்றும் கேரள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ். நாகமுத்து உட்பட பல மூத்த வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக வாதங்களை முன்வைத்தனர்.
பாதுகாப்பு வாதம்
சித்திரவதைக்கு உள்ளான நிலையில், தங்கள் கட்சிக்காரர்கள் குற்றத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக பிரதிவாதி வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால் குண்டுகளை தயாரித்தது யார் என்பதும், வெடிபொருட்களை வாங்க உதவியவர்கள் யார் என்பதும், ரயில்களில் அவற்றை வைத்தது யார் என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர்கள் கூறினர்.
சிறப்பு அரசு வழக்கறிஞர்களான ராஜா தாக்கரே மற்றும் ஏ. சிமல்கர் ஆகியோர் ஐந்து குற்றவாளிகளின் மரண தண்டனையை உறுதி செய்ய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மேலும் ஏழு பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை தொடர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
விசாரணை ஜனவரி 31, 2025 அன்று முடிவடைந்தது.
அதனையடுத்து, கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 21, 2025 அன்று, “வேறு எந்த வழக்கிலும் தேடப்படாவிட்டால், 12 குற்றவாளிகளும் உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்” என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
19 வருடப் போராட்டம்
2006 ஆம் ஆண்டில், அப்துல் வாஹித் சிமி உறுப்பினராக இருந்து ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் இந்த வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
“நான் அப்படிப்பட்ட எந்த அமைப்பிலும் உறுப்பினராக இல்லை. நான் ஒரு ஆசிரியராக இருந்தேன். இதன் காரணமாக எனக்கு பலருடன் தொடர்புகள் இருந்தன. மக்கள் என்னை நிகழ்ச்சிகளுக்கு அழைத்துக் கொண்டே இருந்தார்கள்”என்கிறார் அவர்.
இந்தக் காரணங்களால், 2001 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் தனது பெயர் சேர்க்கப்பட்டதாகவும், இதன் காரணமாகவே 2006 ஆம் ஆண்டு காவல்துறையினர் தன்னைக் கைது செய்ததாகவும் அவர் கூறினார்.
“2001 ஆம் ஆண்டு நடந்த வழக்கில் நான் 2013 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டேன். இந்த நபருக்கு சிமியுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் நீதிபதி கூறினார். இதற்கு காவல்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை. அந்த முடிவை யாரும் சவால் செய்யவில்லை” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
முன்பு விக்ரோலியில் வசித்து வந்த அப்துல் வாஹித், 2006 ஆம் ஆண்டு முதல் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மும்ப்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினார்.
தினமும் உள்ளூர் ரயிலில் பைகுல்லாவில் உள்ள ஒரு பள்ளிக்குச் செல்வார் அப்துல் வாஹித்.
“ஜூலை 11, 2006 அன்று, நான் வழக்கம் போல் பள்ளிக்கு ரயிலில் புறப்பட்டு மதியம் வீடு திரும்பினேன். மாலையில், என் பக்கத்து வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது, ரயில் குண்டுவெடிப்பு பற்றிய முக்கிய செய்திகள் வரத் தொடங்கின. இதைப் பார்த்து நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். நான் வீட்டிற்கு வந்து, சாப்பிட்டுவிட்டு தூங்கினேன். மறுநாள் ரயில்கள் நின்றதால், என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அன்றே என் சகோதரர் போன் செய்து, காவல்துறையினர் என்னைத் தேடுவதாகச் சொன்னார்” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
பின்னர் வாஹித் தனது சொந்த விருப்பத்தின் பேரில் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் ஏடிஎஸ் நள்ளிரவில் அவரது வீட்டைச் சோதனையிட்டு அவரைக் காவலில் எடுத்ததாகக் கூறப்படுகிறது.
“அன்று தொடங்கிய தொடர்கதை இன்றும் முடிவடையவில்லை” என்று அவர் கூறுகிறார்.
சிறையில் இருந்தபோது, அப்துல் வாஹித் தனது சட்டப் பட்டப்படிப்பை முடித்து, ‘பெகுனா கைதி’ என்ற தலைப்பில் விசாரணை செயல்முறை குறித்த ஒரு புத்தகத்தை எழுதினார், அது பின்னர் ஆங்கிலத்தில் ‘இன்னசென்ட் ப்ரிசனர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
7/11 குண்டுவெடிப்பு வழக்கில் தனது ஒப்புதல் வாக்குமூலம் கட்டாயப்படுத்தப்பட்டு பெறப்பட்டது என்று அப்துல் கூறுகிறார், ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது அரசு தரப்பு இந்தக் கூற்றை நிராகரித்தது.
“குற்றம் சாட்டப்பட்டவர் UAPA-வின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளார் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது” என்று நீதிமன்றம் கூறியது.
“புத்தகத்தில் நான் குறிப்பிட்டுள்ள எந்த அதிகாரியும் நான் எழுதியது உண்மையல்ல எனக் கூறவில்லை” என்கிறார் வாஹித் .
இந்த வழக்கில் தொடர்புடைய சில அதிகாரிகளை பிபிசி தொடர்பு கொள்ள முயன்றது, அவர்களின் பெயர்கள் அப்துல்லின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆனால், தற்போது வரை, அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
“விசாரணை அதிகாரிக்கு நல்ல நோக்கம் இருந்தால், அவரது செயல்களில் தீய எண்ணம் இல்லையென்றால், சட்டம் அவரைப் பாதுகாக்கும். அவர் அதிகாரபூர்வ கடமையின் போது தவறு செய்தாலும், அதனால் தீமையான விஷயங்கள் எதுவும் இல்லையென்றால் அவர் பாதுகாக்கப்படுகிறார்.
பயங்கரவாத வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தீவிரவாதக் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள் என்று பெரும்பாலும் கருதப்படுகிறது. இத்தகைய வழக்குகளில், புலனாய்வாளர்களை தவறாக வழிநடத்தவும், காவல்துறைக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தவும், குழப்பத்தை ஏற்படுத்தவும் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி வழிநடத்தப்படுகிறார்கள்”
என்று அப்போதைய ஏடிஎஸ் தலைவர் கே.பி. ரகுவன்ஷி, கடந்த மாதம் தி நியூஸ் மினிட்டிடம் தெரிவித்திருந்தார்.
“நான் இதை முழுப் பொறுப்போடு சொல்கிறேன். உண்மையான குற்றவாளிகள் பிடிபட்டிருந்திருந்தால், இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்திருக்கும்” என்று அப்துல் விசாரணையைப் பற்றி கூறுகிறார்.
சிறை உரிமைகளுக்கான முனைவர் பட்டமும் பணியும்
பட மூலாதாரம், Getty Images
விடுதலையான பிறகு, அப்துல் வாஹித் சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சிறை உரிமைகள் குறித்து முனைவர் பட்டம் பெற்று, ஒரு ஆர்வலராக தீவிரமாக செயல்பட்டார்.
“நான் விடுதலை செய்யப்பட்டேன், ஆனால் காவல்துறையும் பிற நிறுவனங்களும் எங்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதால் அது உண்மையில் அப்படித் தெரியவில்லை. எனவே இந்த சித்திரவதை இன்னும் தொடர்கிறது” என்று அவர் பகிர்ந்துகொள்கிறார்.
காவல்துறையினரிடமிருந்தும், அவரது வீட்டு வாசலுக்கு வந்த ஏஜென்சிகளிடமிருந்தும் திடீரென வந்த தொலைபேசி அழைப்பு அவரது நெருங்கியவர்களையும் பாதித்தது.
“சில உறவினர்களும் இஸ்லாமிய சமூகத்தினரும் என்னுடன் இருப்பதாகச் சொல்கிறார்கள், ஆனால் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேச அவர்கள் பயப்படுகிறார்கள். இஸ்லாமிய இளைஞர்களிடையே காவல்துறையின் பிம்பம் நன்றாக இல்லை, ஏனெனில் அவர்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை வில்லன்களாகவே பார்க்கிறார்கள்” என்று அவர் கூறுகிறார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பு, “நான் செய்யாத ஒரு குற்றத்தில் என் இளமைக் காலத்தின் பல ஆண்டுகளை வீணடித்தேன். ஆனால் நீதித்துறையை நாம் நம்பவில்லை என்றால், நமக்கு வேறு என்ன வழி இருக்கிறது?” என்று அப்துல் வாஹித் கூறியிருந்தார்.
குண்டுவெடிப்புக்குப் பிறகு, மகேந்திரா வேலை செய்யும் நிலையில் இல்லை. ஆனால் மேற்கு ரயில்வே அவருக்கு வேலைவாய்ப்பை அளித்தது.
இப்போது செயற்கை மூட்டுகளின் ஆராய்ச்சி மற்றும் சோதனையிலும் உதவும் அவர், 7/11 பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் மாஹிமில் நடைபெறும் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
மகேந்திரா, இன்னும் தினமும் ரயிலில் பயணம் செய்கிறார்.
“நிலைமை மாறியிருக்கிறது. ஆனால் இன்னும் கவலைகள் உள்ளன. தாக்குதல் சம்பவங்களின் வருடாந்திர நினைவுநாளையொட்டி காவல்துறை பாதுகாப்பை அதிகரிக்கிறது. ஆனால் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்பதால், பயம் இன்னும் நீங்கவில்லை” என்று கூறுகிறார் மகேந்திரா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு