படக்குறிப்பு, அந்தப் பெண் சிறையில் இருப்பது தங்களுக்குத் தெரிந்திருந்தாலும், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பது தங்களுக்குத் தெரியாது என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
‘தகாத செயல்’ குற்றச்சாட்டில் செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேச பெண், சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நிறுவனம் மூலம் செளதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். அவர் அங்கு சிறையில் இருப்பது தங்களுக்குத் தெரியும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே, மத்திய கிழக்கு நாடான செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தங்கள் நாட்டைச் சேர்ந்த இருவரின் அடையாளங்களை வெளிநாடு வாழ் வங்கதேசத்தினர் நல அமைச்சகம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.
அந்தப் பெண் செளதி அரேபியாவுக்குச் செல்வதற்காக வங்கதேசத்தின் மனிதவளம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பணியகம் வழங்கிய அடையாள அட்டையும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
அந்தத் தகவலின்படி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண், டாங்காயில் மாவட்டத்தின் மிர்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர்.
செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணின் சொந்த ஊர் மற்றும் அவரது தந்தையின் அடையாளம் குறித்த தகவல்கள் செவ்வாய்க்கிழமைதான் தனக்குக் கிடைத்ததாக டாங்கைல் மாவட்ட துணை ஆணையர் அபு சயீத் பிபிசி வங்க சேவையிடம் கூறினார்,
எனினும், இதுவரை வெளியுறவு அமைச்சகத்திடமிருந்தோ வெளிநாடு வாழ் வங்கதேசத்தினர் நல அமைச்சகத்திடமிருந்தோ தனக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், screengrab
படக்குறிப்பு, பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவே அந்தப் பெண் வேலை தேடி செளதி அரேபியாவுக்குச் சென்றிருந்தார் என குடும்பத்தினர் கூறினர்.
செளதி அரேபியச் சிறையிலிருந்தே குடும்பத்தினருடன் தொடர்பு
வங்கதேச அரசு வழங்கியுள்ள தகவலின்படி, செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இரு வங்கதேசத்தவரும் வேலைக்காக உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே அந்த மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்றுள்ளனர்.
அரசால் பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகமைகள் மூலம், உரிய அரசு நடைமுறைகளைப் பின்பற்றி செளதி அரேபியாவுக்கோ அல்லது பிற வெளிநாடுகளுக்கோ வேலைக்குச் செல்பவர்களுக்கு வங்கதேசத்தின் மனிதவள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பணியகம் அடையாள அட்டைகளை வழங்குகிறது.
செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இந்த இருவருக்கும் அத்தகைய அடையாள அட்டைகள் இருந்தன.
வெளிநாட்டினர் நல அமைச்சகம் செய்தியாளர்களுக்கு வழங்கிய தகவலின்படி, அந்தப் பெண்ணின் கடவுச்சீட்டு 2022 மே மாதம் வழங்கப்பட்டுள்ளது. செளதி அரேபியாவுக்குச் செல்வதற்கான அனுமதியை மனிதவள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பணியகம் 2023 பிப்ரவரியில் அவருக்கு வழங்கியுள்ளது.
அரசின் சின்னம் இடம்பெற்ற அந்த அடையாள அட்டையில், அட்டையை வைத்திருப்பவருக்கு காப்பீட்டுப் பாதுகாப்பும் நலச் சேவைகளும் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் பேசியபோது, அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை கடந்த புதன்கிழமையன்றுதான் தாங்கள் அறிந்ததாக தெரிவித்தனர்.
ஃபேஸ்புக் மூலமாக தனது தங்கைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தியை அறிந்ததாக அவரது மூத்த சகோதரி கூறினார்.
ஐந்து சகோதரிகளில், செளதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அந்தப் பெண் இளையவர் என்றும் அவர் தெரிவித்தார்.
“புதன்கிழமைதான் அந்தச் செய்தியை கேள்விப்பட்டேன். அவளுடைய தோழி எனக்கு ஃபோன் செய்து, ‘அக்கா, இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டீர்களா?’ என்று கேட்டார். நான் இல்லை என்றேன். பிறகு அவர் அந்த வீடியோவை அனுப்பினார். அதன் பிறகுதான் அந்தச் செய்தி ஃபேஸ்புக்கிலும் வந்திருந்ததைப் பார்த்தேன்.”என்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரி கூறினார்.
செளதி அரேபியாவில் இருந்தபோது தனது சகோதரி தொடர்ந்து குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்ததாகவும், சிறையில் இருப்பதையும் குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால், செளதி அரேபியாவில் எந்தக் காரணத்துக்காக அல்லது எந்தக் குற்றத்துக்காகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதை அந்தப் பெண் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.
அவரது மூத்த சகோதரி கூறுகையில், “ஒருமுறை, ‘நாங்கள் ஒரே அறையில் நிறையப் பெண்கள் இருந்தோம். அவர்களில் சிலர் கார் வாங்கியிருந்தார்கள். அதற்காக அவர்களுடைய முதலாளி அனைவரையும் பிடித்துக் கொடுத்துவிட்டார்’ என்று அவள் சொன்னாள். அவ்வளவுதான் சொன்னாள். அதன் பிறகு என்ன நடந்தது என்று எதுவும் தெரிவிக்கவில்லை” என்றார்.
இந்த விவகாரம் குறித்து மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம் என்றும் அந்தப் பெண் தங்களிடம் கூறியதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும், நாடு திரும்பிய பிறகு இந்த விவரங்களை அனைவரிடமும் தெரிவிப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
2023 பிப்ரவரியில் செளதி அரேபியாவுக்குச் சென்ற அந்தப் பெண், ஆறு மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருப்பதாகக் குடும்பத்தினர் அறிந்தனர்.
செளதி அரேபியாவுக்குச் சென்ற ஆரம்பத்தில் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றும் அவரது மூத்த சகோதரி கூறினார். பின்னர், அங்கு வசித்த மற்றொரு நபர் மூலமாக அவர் சிறையில் இருப்பதை அறிந்ததாகவும் தெரிவித்தார்.
“மெக்கா ஷரீஃபில் தூய்மைப் பணிக்காகச் சென்றதாக அவள் கூறியிருந்தாள்” என்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணின் சகோதரி தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது மகளுக்குத் திருமணம் செய்து வைத்ததாக அவரது தந்தை கூறினார். ஆனால், இரண்டு ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் 2023-ஆம் ஆண்டு வேலைக்காக அவர் செளதி அரேபியாவுக்குச் சென்றதாகவும் தெரிவித்தார்.
முன்னாள் கணவருடன் அவருக்குக் குழந்தைகள் இல்லாததால், தனது சகோதரியின் மகளை அவர் வளர்த்து வந்ததாகவும் அந்தப் பெண்ணின் தந்தை கூறினார்.
செளதி அரேபியாவுக்குச் சென்ற முதல் ஆறு மாதங்கள் தனது மகள் தொடர்ந்து பணம் அனுப்பி வந்ததாகவும், அவர் சிறைக்குச் சென்ற பிறகு பணம் அனுப்புவது நின்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணுடன் சேர்த்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த ஆண் குறித்து அவர் ஒருபோதும் குடும்பத்தினரிடம் எதுவும் கூறியதில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணின் சகோதரியின் மகள் பிபிசி வங்க சேவையிடம் கூறுகையில், கடந்த வாரம் புதன்கிழமை செளதி அரேபியச் சிறையிலிருந்தே அவர் ஃபோன் செய்ததாகத் தெரிவித்தார். ஆனால், அன்றைய தினம் தொலைபேசி இணைப்பில் ஏற்பட்ட பிரச்னையால் அவர்களால் பேச முடியவில்லை.
பொதுவாக, 15 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ சிறையிலிருந்து அவர் ஃபோன் செய்து குடும்பத்தினருடன் பேசுவார் என்றும் அவர் கூறினார்.
இதற்கு முந்தைய நாளான செவ்வாய்க்கிழமையன்றுதான் குடும்பத்தினருடன் கடைசியாகப் பேசியிருந்தார். ஆனால், அன்றும் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருப்பது குறித்து குடும்பத்தினருக்கு எதுவும் தெரியவில்லை.
“புதன்கிழமை எங்களால் பேச முடியவில்லை. செவ்வாய்க்கிழமைகூட அவர் ஃபோன் செய்திருந்தார். அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தால், ‘நான் நன்றாக இல்லை; எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று சொல்லியிருப்பாரே” என்று அந்தப் பெண்ணின் சகோதரியின் மகள் கூறினார்.
பட மூலாதாரம், FAYEZ NURELDINE / STAFF Via GETTY IMAGES
நிர்வாகம் கூறுவது என்ன?
வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் ஓர் ஆணுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கடந்த புதன்கிழமை செளதி அரேபிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. எனினும், ஞாயிற்றுக்கிழமை வரை வங்கதேச அரசோ செளதி அரேபிய அரசோ அவர்களின் அடையாளங்களை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
ஐந்து நாட்களுக்குப் பிறகு, திங்கள்கிழமை இரவு வங்கதேசத்தின் வெளிநாடு வாழ் வங்கதேசத்தினர் நல அமைச்சகம் இருவரின் அடையாளங்களையும் அதிகாரபூர்வமாக வெளியிட்டது.
இதற்கிடையே, செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பெண்ணின் உடலை வங்கதேசத்துக்குக் கொண்டுவர அவரது குடும்பத்தினர் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்குத் தகவல் தெரிவித்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டாங்காயில் துணை ஆணையர் அபு சயீத் தெரிவித்துள்ளார்.