0
அமெரிக்க தாக்குதலில் சேதமடைந்த 3 அணுசக்தி நிலையத்தை சீரமைக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம், சேதமடைந்த அணு நிலையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் ஈரான் மும்முரமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூன் 29ஆம் திகதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களில், அமெரிக்காவின் பதுங்கு குழிகளை தகர்க்கும் குண்டுகளால் சேதமடைந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீதிகளில் ஆழ்துளை இயந்திரங்கள் மற்றும் கிரேன்கள் இயங்கும் காட்சிகள் தெரிகின்றன. ஒரு புல்டோசரும் ஒரு லொரியும் மலையிலிருந்து கீழே இறங்கும் காட்சியும் அந்தப் படங்களில் பதிவாகியுள்ளன.
அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ள 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்த அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.