• Sat. Sep 28th, 2024

24×7 Live News

Apdin News

“சொத்துவரி உயர்வு திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை” – டிடிவி தினகரன் கண்டனம் | Chennai Corporation property tax hike – TTV Dhinakaran condemns

Byadmin

Sep 28, 2024


சென்னை: “திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக சொத்துவரியை உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, திமுக அரசால் போடப்பட்ட வரிகளாலும், உயர்த்தப்பட்ட கட்டணங்களாலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் மக்களின் மீது சொத்துவரி எனும் பெயரில் கூடுதல் சுமையை ஏற்றுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது,” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “சொத்துவரியை மேலும் 6 சதவிகிதம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது. ஏழை, எளிய மக்களின் மீது சுமையை ஏற்றாமல் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் சொத்துவரியை மேலும் 6 சதவிகிதம் உயர்த்துவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என தமிழகம் முழுவதும் கடந்த 2022-ம் ஆண்டு 150 சதவிகிதம் அளவுக்கு சொத்துவரியை தமிழக அரசு உயர்த்திய நிலையில், தற்போது மேலும் 6 சதவிகிதம் அளவுக்கு உயர்த்த முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த தேர்தல் அறிக்கையில் சொத்துவரியை உயர்த்த மாட்டோம் என வாக்குறுதியளித்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் இரண்டாவது முறையாக சொத்துவரியை உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, திமுக அரசால் போடப்பட்ட வரிகளாலும், உயர்த்தப்பட்ட கட்டணங்களாலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் மக்களின் மீது சொத்துவரி எனும் பெயரில் கூடுதல் சுமையை ஏற்றுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது. எனவே, ஏழை, எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் சொத்துவரி உயர்வுக்கான தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.



By admin