• Sun. Sep 29th, 2024

24×7 Live News

Apdin News

சொத்து வரி உயர்வு: சென்னை மாநகராட்சி தீர்மானத்துக்கு தலைவர்கள் கண்டனம் | Property Tax Hike: Leaders Condemn Chennai Corporation’s Decision

Byadmin

Sep 29, 2024


சென்னை: ஆண்டுதோறும் சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தும் அரசின் உத்தரவை செயல்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட, ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் மயானபூமி அமைக்க தனியாருக்கு அனுமதி வழங்குவது ஆகிய இரு தீர்மானங்கள், மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாக பணத்தை பிடுங்கும் வகையில் இருப்பது கண்டனத்துக்குரியது. ஆண்டுக்கு 6 சதவீதம் சொத்து வரி உயர்வை அறிவித்து, மாநகர மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது. இதன் மூலம் குடிநீர் வரி, கழிவு நீர் அகற்றல் வரியும் தானாக உயர்ந்துவிடும். வியாபார நோக்கில் மயானத்தை தனியார்மயமாக்கல் என்பதை அதிமுக கடுமையாக எதிர்க்கும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 3 முறை மின்கட்டண உயர்வு, 100 சதவீதம் சொத்து வரி உயர்வு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு கட்டணங்கள், அரசு சேவை கட்டணங்கள் பல மடங்கு உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை உயர்வு என்று மக்கள் கடுமையான காலகட்டத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் சொத்து வரி உயர்வு என்பது மக்களை கடுமையாக பாதிக்கும். எனவே, சென்னை மாநகராட்சியின் ஆண்டுதோறும் 6 சதவீதம் சொத்து வரி உயர்வையும், மயான பூமியை தனியார்மயமாக்கும் தீர்மானத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மக்களை பாதிக்கும் வகையிலான சொத்துவரி உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது. மக்களை முட்டாள்களாக நினைத்து இவ்வளவு சுமைகளை சுமத்துவதை அனுமதிக்க முடியாது. திமுகவுக்கு வாக்களித்ததை தவிர தமிழக மக்கள் ஒரு பாவமும் செய்யவில்லை. அதற்காக இவ்வளவு அதிக தண்டனை தேவையில்லை.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மாநில அரசு சார்பில் மாநகராட்சி பணிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் சொத்துவரி உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வருமானத்தை மீறிய செலவுகளுக்கும், விலைவாசி உயர்வுக்கும் தமிழக அரசின் வரி உயர்வும் காரணம் என்கின்றனர் நடுத்தர வர்க்கத்தினர். தமிழக மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றும் நடவடிக்கைகளில் அரசு இனியும் ஈடுபட வேண்டாம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சென்னை மாநகராட்சியின் செயல்பாடு கடும் கண்டனத்துக்குரியது. திமுக அரசால் போடப்பட்ட வரிகளாலும், உயர்த்தப்பட்ட கட்டணங்களாலும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் மக்களின் மீது சொத்துவரி எனும் பெயரில் கூடுதல் சுமையை ஏற்றுவது திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்த வேண்டிய அரசு, சொத்து வரியை உயர்த்துவதால் மக்களின் எதிர்ப்பை தான் பெற முடியும். சொத்துவரி உயர்வு எந்த வகையிலும் மக்களுக்கு பயன் அளிக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



By admin