• Sat. Aug 22nd, 2026

24×7 Live News

Apdin News

சௌகார் ஜானகி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி – இன்று மாலை இறுதிச்சடங்கு

Byadmin

Aug 22, 2026


தமிழ் திரையுலகில் ஒரு தலைமுறையின் அடையாளமாகவும், தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமையாகவும் திகழ்ந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவு, தமிழ் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

சங்கரமஞ்சி ஜானகி

70 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது கலைப்பயணத்தில், கதாநாயகி, குணச்சித்திர நடிகை, நாடகக் கலைஞர் என பல பரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியவர் அவர்.

சௌகார் ஜானகியின் இயற்பெயர் சங்கரமஞ்சி ஜானகி. 1931-ம் ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஆந்திராவின் ராஜமுந்திரியில் பிறந்த சௌகார் ஜானகி, இளம் வயதிலேயே கலை மீது ஆர்வம் கொண்டிருந்தார். வானொலி கலைஞராகவும், நாடகக் கலைஞராகவும் தனது திறமையை வளர்த்துக் கொண்டார்.

சௌகார் ஜானகி

சௌகார் ஜானகியின் வாழ்க்கையில் வானொலிக்கும் முக்கிய இடம் உண்டு. இளமையிலேயே அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். வானொலியில் அவரது ஏற்ற-இறக்கமான பேச்சை கண்டு மகிழ்ந்த ஒரு தயாரிப்பாளர், ஒரு புதிய படத்தில் நடிக்க அணுகினார். ஆனால் அவரது குடும்பத்தார் சம்மதிக்காததால், அந்த படம் கைவிட்டு போனது. இதற்கிடையில் திருமணமும் நடைபெற்றது. அன்றைய காலகட்டத்தில் ஜானகி என்ற பெயரில் மற்றொரு நடிகை இருந்ததாலும், ‘சௌகார்’ படத்தில் அறிமுகமானதாலும் சங்கரமஞ்சி ஜானகி, ‘சௌகார்’ ஜானகியாக ஆனார்.

சினிமா வாய்ப்பு

பின்னர் குடும்ப சூழலால் கைக்குழந்தையுடன் சினிமா வாய்ப்புகளை தேடினார், ஜானகி. அதன்பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்பும் கைகூடியது. 1950-ம் ஆண்டில் எல்.வி.பிரசாத் இயக்கத்தில் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

வளையாபதி திரைப்படம்

அதன்பிறகு 1952-ம் ஆண்டு வெளியான ‘வளையாபதி’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் கால் பதித்தார் சௌகார் ஜானகி. அந்த காலகட்டத்தில் தமிழ் மொழியில் சரளமாக பேச முடியாத நிலையிலும், வசனங்களை மனப்பாடம் செய்து, அதை ஏற்ற-இறக்கத்துடன் பேசி நடித்து பாராட்டு பெற்றார்.

1950 மற்றும் 1960-களில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக சௌகார் ஜானகி உயர்ந்தார். தமிழ் சினிமாவிலும் அவர் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார்.

நீண்ட திரைப்பயணம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்த அவர், வெறும் கதாநாயகியாக மட்டுமே தன்னை நிலைநிறுத்திக் கொள்ளாமல், கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறமையால் தனி முத்திரை பதித்தார்.

தமிழில் ‘குமுதம்’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘உயர்ந்த மனிதன்’, ‘பாபு’. ‘புதிய பறவை’, ‘என் கடமை’, ‘ஒளிவிளக்கு’, ‘மாலையிட்ட மங்கை’, ‘காவியத்தலைவி’, ‘இருகோடுகள்’, ‘நீர்க்குமிழி’, ‘எதிர்நீச்சல்’, ‘பாமாவிஜயம்’, ‘பார்த்தால் பசி தீரும், ‘பாலும் பழமும்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லு முல்லு’. ‘வெற்றி விழா’ உள்ளிட்ட பல திரைப்படங்கள் அவரது நீண்ட திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்கவை.

புதிய பறவை

சௌகார் ஜானகி என்றதும் ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘பார்த்த ஞாபகம் இல்லையோ…’ என்ற பாடல் வரிகளே முதலில் நினைவுக்கு வரும். அந்த பாடலில் அவரது உதடுகள் தாண்டி கண்களும் காதலை கொட்டியது. சினிமாவில் வயது மற்றும் கால மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தன்னை புதுப்பித்துக் கொண்டது சௌகார் ஜானகியின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று.

கதாநாயகியாக புகழின் உச்சியில் இருந்தவர், பின்னர் குடும்பத் தலைவி, தாய், பாட்டி என பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்தார். நகைச்சுவை வேடங்களையும் சிறப்பாக செய்தார்.

கே.பாலசந்தர் நாடகம்

சௌகார் ஜானகியின் கலைப்பயணம் திரைப்படங்களுடன் முடிந்துவிடவில்லை. வானொலி, மேடை நாடகம், திரைப்படம் என கலைத்துறையின் பல்வேறு தளங்களில் அவர் பயணித்துள்ளார். கே.பாலசந்தரின் நாடகங்களிலும் நடித்துள்ளார். பல ஆண்டுகள் மேடை நாடகங்களிலும் தீவிரமாக பங்கேற்றார். இதன் மூலம் அவர் ஒரு திரைப்பட நடிகை மட்டுமல்ல, முழுமையான மேடை கலைஞர் என்பதையும் நிரூபித்தார்.

பிஸ்கோத் திரைப்படம்

‘தில்லுமுல்லு’, ‘வெற்றி விழா’. ‘ஹே ராம்’ போன்ற திரைப்படங்களில் அவரது அனுபவம் வாய்ந்த நடிப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த ‘ஹே ராம்’ திரைப்படத்திலும் அவர் முக்கியமான குணச்சித்திர வேடத்தில் நடித்தார். அவரது நீண்ட பயணத்தின் இறுதிக்கட்டத்திலும் நடிப்பின் மீதான ஆர்வம் குறையவில்லை.

2020-ம் ஆண்டு வெளியான ‘பிஸ்கோத்’ திரைப்படம் அவரது 400-வது படமாகக் குறிப்பிடப்படுகிறது. இதுவே அவரது தமிழ் சினிமாவின் கடைசி படமும் ஆகும்.

பத்மஸ்ரீ விருது

சௌகார் ஜானகியின் திறமைக்கு பல்வேறு விருதுகள் அங்கீகாரம் அளித்துள்ளன. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, சிறந்த நடிகைக்கான மாநில அரசின் (தமிழ்நாடு, ஆந்திரா) விருதுகளை பெற்றுள்ளார். விருதுகளின் சிகரமான பத்மஸ்ரீ விருது 2022-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு வழங்கி கவுரவித்தது.

70 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் பயணித்து, 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, பல தலைமுறை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சௌகார் ஜானகி மறைந்தாலும், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களும், அவர் விட்டுச் சென்ற கலை மரபும் என்றென்றும் வாழும்.

உடல்நலக்குறைவு

சௌகார் ஜானகிக்கு யக்னா பிரபா கோட்டி, சாச்சி ராவ் என்ற இரு மகள்களும், வெங்கடரமண சங்கரமஞ்சி என்ற மகனும் உள்ளனர். இதில் யக்னா பிரபாவின் மகள் வைஷ்ணவி நடிகை ஆவார். ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

சென்னை தேனாம்பேட்டையில் குடும்பத்தினருடன் வசித்து வந்த சௌகார் ஜானகி, வயோதிகம் காரணமாக வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். அவ்வப்போது ஏற்படும் உடல்நலக்குறைவுக்கு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டும் வந்தார்.

மரணம்

சௌகார் ஜானகிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

சௌகார் ஜானகி உடல்நிலை நேற்று காலை மிகவும் மோசமடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பிற்பகல் மரணம் அடைந்தார்.

முதலமைச்சர் விஜய் இரங்கல்

சௌகார் ஜானகியின் மரணம் திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது மறைவிற்கு முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன், ஜி.கே.வாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்,

தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், முன்னாள் மத்திய மந்திரி திருநாவுக்கரசர் உள்ளிட்ட அரசி யல் தலைவர்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குநர் டி.ராஜேந்தர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அஞ்சலி

தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் சௌகார் ஜானகியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

By admin