• Fri. Apr 24th, 2026

24×7 Live News

Apdin News

சௌதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பாகிஸ்தான் திட்டமிடுவது ஏன்? ஓர் அலசல்

Byadmin

Apr 24, 2026


சௌதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க பாகிஸ்தான் திட்டமிடுவது ஏன்?

பட மூலாதாரம், FADEL SENNA/AFP via Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி (மையத்தில்), 2025 பிப்ரவரி 22 அன்று துபை சர்வதேச மைதானத்தில் அணி வீரர்களிடம் பேசுகிறார்

சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஒரு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தைக் கட்டுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் சௌதி அரேபிய அதிகாரிகளுக்கும் இடையே ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே நடைபெற்றுள்ளன. ஒரு முறையான ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சௌதி அரேபியாவில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நோக்கம். இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டால், எதிர்காலத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை நடத்துவதற்கும் இந்தப் புதிய மைதானம் பயன்படுத்தப்படலாம்.

பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் ஏற்கெனவே வர்த்தகம் மற்றும் ராஜதந்திரம் போன்ற பல விஷயங்களில் இணைந்து செயல்படுகின்றன. இப்போது, இந்தக் கூட்டாண்மை கிரிக்கெட்டிலும் விரிவடையக்கூடும்.

அங்கு அதிக எண்ணிக்கையிலான ஆசிய மக்கள் வசிப்பதும், அவர்களில் பலர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதுமே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சௌதியில் மைதானம் அமைப்பதற்கான ஒரு முக்கியக் காரணம்.

மற்றொரு முக்கியக் காரணம், சௌதி அரேபியா சமீபத்திய ஆண்டுகளில் விளையாட்டுகளுக்கான ஒரு முக்கிய மையமாக மாறியுள்ளது. அந்நாட்டின் வலுவான பொருளாதார நிலைமை, விளையாட்டுகளில் பெருமளவில் முதலீடு செய்ய வழிவகுக்கிறது. இதன் காரணமாகப் பல சர்வதேச விளையாட்டு அமைப்புகள் இப்போது சௌதியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன.

By admin