ஜந்தர் மந்தர் போராட்டம் தொடர்பாக காக்ரோச் ஜனதா கட்சியின் (சிஜேபி) நிர்வாகிகளான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜின்க்யா ஷிண்டே ஆகியோரை டெல்லி காவல்துறையினர் பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் இன்று கைது செய்துள்ளதாக அக்கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் தெரிவித்துள்ளார்.
ரத்னா சிங் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “அனுமதியின்றி நுழைந்தது, பிணை நிபந்தனைகளை மீறியது, அரசு ஊழியரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. காலையில் அவர்கள் சிறப்பு நிர்வாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்பப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
“நள்ளிரவு வரை அவர்கள் தங்களது வழக்கறிஞர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அதிகாலை 3 மணிக்கு தனியார் வேன் ஒன்றில் அவர்கள் பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் அவர்களது மன உறுதி குறையவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, மூவரும் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “காக்ரோச் கட்சியைச் சேர்ந்த அஜின்க்யா, அசுதோஷ், சௌரவ் தாஸ் ஆகியோர் பார்லிமென்ட் ஸ்ட்ரீட் காவல் நிலையத்தில் உள்ளனர். எதுவும் அவர்களது மன உறுதியை உடைத்துவிட முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், @abhijeet_dipke
காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள், செவ்வாய்க்கிழமை காலை ஜந்தர் மந்தருக்குள் தடுப்புகளை தாண்டிச் சென்றதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டனர்.
ஜந்தர் மந்தர் போராட்டம் நடத்துவதற்கான அதிகாரபூர்வ இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட மறுநாளே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
காக்ரோச் ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ரங்கா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், அவரும் மற்றொரு இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாசும் கட்சியின் தேசியப் பொறுப்பாளர் அஜின்க்யா ஷிண்டேவும் தடுப்புகளை தாண்டி ஜந்தர் மந்தருக்கு செல்வதைக் காண முடிகிறது. அப்போது காவல்துறையினர் அவர்களைக் காவலில் எடுத்தனர்.
திங்களன்று டெல்லி காவல்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், நகரின் வெவ்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்துவதற்கு மூன்று புதிய இடங்கள் அறிவிக்கப்பட்டன. அதே நேரத்தில், முன்பு போராட்டங்கள் நடத்துவதற்கான அதிகாரபூர்வ இடமாக இருந்த ஜந்தர் மந்தருக்கு அந்த அங்கீகாரம் நீக்கப்பட்டது.
குடிமக்களின் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான உரிமையைக் கருத்தில் கொண்டு, தற்போதைய இடத்துக்கு மாற்றாகப் பொருத்தமான இடங்களை அடையாளம் காண மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைத்ததாக அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஜந்தர் மந்தர் போராட்ட இடம் என்ற அங்கீகாரத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலாக ராம்லீலா மைதானம், புராரி மைதானம், ஷாதராவில் உள்ள சிபிடி மைதானம் ஆகிய மூன்று இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.