படக்குறிப்பு, டைட்டானிக் கப்பலில் பயணம் செய்த, ஆவணப்படுத்தப்பட்ட ஒரே கறுப்பினப் பயணி ஜோசப் லரோச் மட்டுமே.கட்டுரை தகவல்
எழுதியவர், ஜார்ஜி டாக்கர்
பதவி,
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கடந்த 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி, அதுவரை கடலில் பயணம் செய்த கப்பல்களிலேயே தொழில்நுட்பத்தில் மிகவும் மேம்பட்ட கப்பல் சௌத்தாம்ப்டனில் இருந்து தனது முதல் பயணத்தைத் தொடங்கியது. நியூயார்க்கை நோக்கிப் புறப்பட்ட ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலில் 2,201 பேர் இருந்தனர், நான்கு நாட்களுக்குப் பிறகு, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு பனிப்பாறையில் மோதி அது மூழ்கியது.
இந்த சோக நிகழ்வு தற்கால செய்தித்தாள் அறிக்கைகள் முதல் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்த மாபெரும் ஹாலிவுட் திரைப்படம் வரை பல வடிவங்களில் எண்ணற்ற முறை சொல்லப்பட்டுள்ளது.
ஆனால், இதில் இறந்ததாக மதிப்பிடப்பட்ட 1,500 பேரில் ஒருவரின் கதை, ஒரு சமூகவியலாளர் லிவர்பூல் அருங்காட்சியகத்தைப் பார்வையிடும் வரை மறக்கப்பட்ட கதையாகவே இருந்தது. ஜோசப் பிலிப் லெமர்சியர் லரோச் என்பவர்தான் டைட்டானிக் கப்பலின் முதல் பயணத்தில் ஆவணப்படுத்தப்பட்ட ஒரே கறுப்பினப் பயணி.
ஆனால் அவர் யார்? 25 வயதான அவரையும் அவரது குடும்பத்தினரையும் ‘மூழ்கடிக்க முடியாதது’ என்று கருதப்பட்ட ஒயிட் ஸ்டார் லைன் கப்பலுக்கு அழைத்துச் சென்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் என்ன?
பட மூலாதாரம், National Museums Liverpool
படக்குறிப்பு, ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பல் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ஒரு பனிப்பாறையின் மீது மோதி மூழ்கியது.
‘உடல் மீட்கப்படவே இல்லை’
லரோச் 1886இல் ஹைட்டியில் உள்ள கேப்-ஹைட்டியனில் பிறந்தார். பிரெஞ்சு காலனித்துவ ஆட்சிக்கு எதிராக ஹைட்டிய சுதந்திர போரை வழி நடத்தியவரும் அந்நாட்டின் முதல் பேரரசருமான ஜீன்-ஜாக் டெசலைனஸின் கொள்ளுப் பேரன் இவர்.
லரோச் தனது குடும்பத்தின் அந்தஸ்து மற்றும் செல்வச் செழிப்புடன் வளர்ந்தார். 15 வயதில், பொறியியலில் பல்கலைக் கழகக் கல்வியைப் பெறுவதற்காக ஆசிரியர் ஒருவருடன் அவர் பிரான்சுக்கு வந்தார்.
அதிலிருந்து பத்து ஆண்டுகளுக்கும் சற்று கூடுதலான காலத்திற்குப் பிறகு, லரோச் இறந்துவிட்டார் – டைட்டானிக்கில் பயணம் செய்த ஆவணப்படுத்தப்பட்ட ஒரே கறுப்பின நபர் அவர்தான். ஆனால், அவரது உடல் மீட்கப்படவே இல்லை.
பட மூலாதாரம், Public Domain
படக்குறிப்பு, பிரான்சில் 11 ஆண்டுகள் வசித்த பிறகு, லரோச் தனது குடும்பத்துடன் ஹைட்டிக்கு திரும்பும் திட்டத்துடன் டைட்டானிக் கப்பலில் ஏறினார்.
முனைவர் கார்லெட் நார்வுட் என்பவர் லிவர்பூலில் உள்ள கடல்சார் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டபோது அவர் குறித்து அறிந்து கொண்டார். அவர் மூலமாகவே லரோச்சின் கதை ஆராயப்பட்டுள்ளது.
வாஷிங்டன் டிசியில் பிறந்த கார்லெட் நார்வுட், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லரோச் பற்றி ஒரு நாடகத்தை எழுதி இயக்கினார்.
பட மூலாதாரம், Pete Carr
படக்குறிப்பு, ‘லரோச்’ நாடகம் அக்டோபர் 17 அன்று லிவர்பூல் அருங்காட்சியகத்தில் அரங்கேற்றப்படும்.
அந்த நாடகம் அக்டோபர் 17ஆம் தேதி லிவர்பூலில் முதன்முறையாக அரங்கேறவுள்ள நிலையில், ஒரு மனிதரின் வாழ்க்கையில் இடம்பெற்ற சிக்கலான நிகழ்வுகளைப் பற்றி நார்வுட் பிபிசியிடம் பேசினார். ஒரு சிறப்பான தொடக்கத்திலிருந்து துணிச்சலான காதல் கதை வழியாக, இறுதியில் சோகமான முடிவை எட்டிய லரோச்சின் வாழ்க்கை குறித்து அவர் விவரித்தார்.
லரோச் 1901இல் பிரான்சுக்கு வந்தார். பிரெஞ்சு காலனிகளில் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு வெறும் 50 ஆண்டுகளே ஆகியிருந்த காலகட்டம் அது. பாரிஸுக்கு அருகிலுள்ள பியூவாய்ஸில் உள்ள பல்கலைக் கழகத்திற்குச் சென்ற பிறகு அவரால் ஒரு பொறியாளராக முடிந்தது.
“கடந்த 1900களின் முற்பகுதியில் பிரான்சில் ஒரு கறுப்பின மனிதராக இருப்பதென்பது, கடுமையான இனவெறியை எதிர்கொள்வதாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பிரெஞ்சு மக்கள் கறுப்பின மக்களுக்கு வால்கள் இருப்பதாக உண்மையாகவே நம்பினார்கள். அவர் அங்கு நிறைய இனப் பதற்றங்களை எதிர்கொண்டார்,” என்று நார்வுட் கூறினார்.
அந்த நேரத்தில் பிரான்சில் ஒரு கலப்பினத் தம்பதி எதிர்கொள்ளக்கூடிய சவால்கள் இருந்தபோதிலும், லரோச் ஜூலியட் லாஃபார்க் என்ற வெள்ளை பிரெஞ்சு பெண்ணைச் சந்தித்து மணந்தார்.
“அந்தக் காலகட்டத்தில் ஒரு கறுப்பின மனிதருடன் பழகும் அளவுக்கு தைரியம் கொண்ட, ஒரு விதிவிலக்கான பெண்ணாக அவர் இருந்திருக்க வேண்டும். அது மட்டுமின்றி, அவர்கள் லாஃபார்க்கின் தந்தையுடன் வசித்ததால் அவரது குடும்பத்தினரும் அவருக்கு ஆதரவளித்தனர். லரோச் மற்றும் லாஃபார்க் குடும்பத்தால் ஆதரிக்கப்பட்டனர் என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில் லாஃபார்க் அவரைப் பற்றித் தனது தந்தைக்கு எழுதிய ஒரு கடிதம் இன்றும் உள்ளது,” என்று நார்வுட் லாஃபார்க் பற்றி கூறினார்.
அதன்படி, “லாஃபார்க்கின் தந்தை, லரோச்சின் தோலின் நிறத்தை விட அவரது கல்வியைப் பற்றி அதிகம் அக்கறை கொண்டிருந்தார்.”
பட மூலாதாரம், Photo12/Universal Images Group via Getty Images
படக்குறிப்பு, 19ஆம் நூற்றாண்டில் பியூவாய்ஸ்
இந்தத் தம்பதிக்கு முறையே 1909 மற்றும் 1910இல் பிறந்த சிமோன் மேரி அன்னே ஆண்ட்ரீ லரோச் மற்றும் லூயிஸ் லரோச் என்ற இரு மகள்கள் இருந்தனர். அதன் பிறகு, லரோச் தனது குடும்பத்தை மீண்டும் தனது சொந்த நாடான ஹைட்டிக்கு மாற்றத் திட்டமிடுவதற்கு அதிக காலம் ஆகவில்லை.
“லரோச்சால் பட்டத்தைப் பெற முடிந்தது என்றாலும், அவர் வேலையைத் தக்கவைத்துக் கொள்வதில் சிரமப்பட்டார். அவர் வேலை செய்தபோது அடிக்கடி பணிநீக்கம் செய்யப்பட்டார் அல்லது கடுமையான இனவெறி தாக்குதலுக்கு உள்ளானார்,” என்று நார்வுட் கூறினார்.
இந்தக் குடும்பம் 1912ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரான்சை விட்டு வெளியேற திட்டமிட்டிருந்தது – ஆனால் லாஃபார்க் மூன்றாவது முறையாகக் கருத்தரித்திருந்தபோது, அவர்கள் விரைவில் வெளியேறத் திட்டமிட்டனர்.
“அந்தக் குழந்தை பிரான்சில் பிறந்து வளர்வதை அவர் விரும்பவில்லை. அவர் ஹைட்டிக்கு திரும்ப விரும்பினார், அவர் தனது தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார், அவரைப் பிரிந்து மிகவும் வாடினார்,” என்று நார்வுட் விளக்கினார்
பிரான்சில் தனது தந்தையை பிரிந்து செல்வது குறித்து லாஃபார்க் கவலைப்பட்டதாக நார்வுட் கூறினார். பிறகு லரோச்சின் மாமா சின்சின்னாடஸ் லெகோன்டே (அப்போதைய ஹைட்டியின் அதிபர்), லரோச்சிற்கு கணித ஆசிரியராக ஒரு வேலையை ஏற்பாடு செய்தபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பட மூலாதாரம், National Museums Liverpool
படக்குறிப்பு, லரோச் குடும்பத்தினர் 1912 ஏப்ரல் 10 அன்று டைட்டானிக் கப்பலில் இரண்டாம் வகுப்புப் பயணிகளாக ஏறினர்.
‘விதியின் கதை’
ஆனால் அவர்கள் எப்படி டைட்டானிக் கப்பலுக்கு வந்தார்கள்?
பிரான்சில் இருந்து சீக்கிரம் வெளியேற முடிவு செய்தது முதல், மற்றொரு கப்பலில் டிக்கெட் வைத்திருந்தது, புறப்படுவதை ஏறக்குறைய அதைத் தவறவிட்டது வரை பார்க்கையில், “அவர் அந்தக் கப்பலில் இருந்திருக்கக் கூடாது” என்கிறார் நார்வுட்.
“லரோச்சின் தாய் எஸ்எஸ் பிரான்ஸ் என்ற கப்பலில் பயணம் செய்வதற்கான முதல் வகுப்பு டிக்கெட்டுகளை அனுப்பினார்.”
“ஆனால் எஸ்எஸ் பிரான்ஸ் கப்பலில் குழந்தைகள் தங்களுடன் உணவருந்த முடியாது என்பதை அறிந்ததும், அவர்கள் அந்த முதல் வகுப்பு டிக்கெட்டுகளை கொடுத்துவிட்டு டைட்டானிக் கப்பலில் இரண்டாம் வகுப்புப் பயணச் சீட்டுகளைப் பெற்றனர்.”
விதியின் இரண்டாவது திருப்பம், இந்தக் குடும்பம் அந்த துரதிர்ஷ்டவசமான ஒயிட் ஸ்டார் லைன் கப்பலில் ஏற முயன்றபோது ஏற்பட்டது. டைட்டானிக் பிரான்சின் செர்பர்க்கில் நிறுத்தப்படவிருந்தது, ஆனால் அது அந்தத் துறைமுகத்திற்கு மிகப் பெரியதாக இருந்தது.
அதற்குப் பதிலாக, செர்பர்க்கில் ஏறும் பயணிகள் எஸ்எஸ் நோமாடிக் என்ற சிறிய கப்பல் மூலம் டைட்டானிக் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பட மூலாதாரம், Handout
படக்குறிப்பு, டைட்டானிக் கப்பலில் இருந்த 285 இரண்டாம் வகுப்புப் பயணிகளில், உயிரிழந்த 167 பேரில் லரோச்சும் ஒருவர்.
“அவர்கள் கப்பலுக்குச் செல்ல ஒரு படகை எடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் சென்ற படகில் என்ஜின் கோளாறு ஏற்பட்டது, அதனால் அவர்கள் கப்பலில் ஏறுவதையே கிட்டத்தட்ட தவறவிட்டிருப்பார்கள். இது உண்மையிலேயே விதியின் விளையாட்டு,” என்று நார்வுட் கூறினார்.
டைட்டானிக் 1912 ஏப்ரல் 14 அன்றிரவு சுமார் 23:40 மணியளவில் பனிப்பாறையில் மோதியது. லரோச் தனது மனைவியை எழுப்பினார், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை கப்பலின் மேல்தளத்திற்கு தூக்கிச் செல்வதற்கு முன் சில மதிப்புமிக்க பொருட்களைச் சேகரித்தனர்.
கர்ப்பிணியான லாஃபார்க் மற்றும் இரண்டு சிறுமிகளால் ஒரு உயிர் காக்கும் படகில் ஏற முடிந்தது, மேலும் அடுத்த நாள் ஆர்எம்எஸ் கார்பாதியா கப்பலால் அவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர். மறுபுறம், அவர்களை பத்திரமாக அனுப்பி வைத்த ஜோசப் லரோச்சிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
நார்வுட்டை பொறுத்தவரை, லரோச்சின் கதையை “எந்த அலங்காரமுமின்றி” விவரிப்பதன் முக்கியத்துவம், ஒரு தனி நபரின் கடந்த காலத்தை ஆராய்வதையும் தாண்டி விரிவடைகிறது.
பட மூலாதாரம், Carlette Norwood
படக்குறிப்பு, “தங்கள் பாரம்பரியத்தைப் பற்றி அறியாத மக்களிடம் இந்தக் கதையைக் கொண்டு சேர்ப்பது முக்கியம்,” என்கிறார் கார்லெட் நார்வுட்.
“இது அனைவரையும் ஈர்க்கும் ஒரு கதை, ஏனெனில் இது டைட்டானிக் பாரம்பரியத்தின் ஒரு பகுதி. ஆனால் கறுப்பின மக்களாகிய எங்களில் பலருக்கு எங்கள் வரலாறு தெரியாது. அடிமைத்தனத்தின் காரணமாக எவ்வித பதிவுகளும் இல்லை. எங்களது கடந்த காலத்தின் அடையாளம் எங்களிடம் இல்லை,” என்று அவர் கூறினார்.
“லரோச் போன்றவர்களின் கதைகள், அடிமைத்தனத்தையும் தாண்டிய பிரபலமான கறுப்பினக் கதைகள் இருப்பதைக் காட்டுகின்றன” என்கிறார் நார்வுட்.
“செழிப்பாகவும் மிகவும் வெற்றிகரமாகவும் வாழ்ந்த கறுப்பின மக்கள் இருந்தனர் என்பதை இது காட்டுகிறது. இது எங்களைக் கடந்த காலத்துடன் இணைக்கிறது.”
“நாங்கள் ஜோசப் லரோச்சின் உறவினர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் எங்களால் அவரது கதையை உணர்வுபூர்வமாக பொருத்திப் பார்க்க முடிகிறது.”