0
இந்தியாவுக்கு எதிராக மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் நான்காவது அண்டர்சன் – டெண்டுல்கர் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முன்னாள் அணித் தலைவர் ஜோ ரூட் குவித்த அபார சதத்தின் உதவியுடன் பலமான நிலையை அடைந்துள்ள இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்கள் மீதம் இருக்க 186 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது.
போட்டியின் 3ஆம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (25) தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்களை இழந்து 544 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
11 ஓட்டங்களிலிருந்து தனது துடுப்பாட்டத்தைத் தொடர்ந்த ஜோ ரூட் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 248 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகளுடன் 150 ஓட்டங்களைக் குவித்தார்.
தனது 157ஆவது டெஸ்ட போட்டியில் விளையாடும் ஜோ ரூட் 38ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இதனிடையே டெஸ்ட் கிரிக்கெட்டில் சில மைல்கல் சாதனைகளையும் ஜோ ரூட் நிலைநாட்டினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மொத்த எண்ணிக்கையை 13,409 ஓட்டங்களாக உயர்த்தியதன் மூலம் சச்சின் டெண்டுல்காரின் 15,921 ஓட்டங்களுக்கு அடுத்ததாக அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளார்.
இந்தியாவின் ராகுல் ட்ராவிட் (13,288), தென் ஆபிரிக்காவின் யக்ஸ் கல்லிஸ் (13,289), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் (13,378) ஆகியோரை பின்தள்ளியே ஜோ ரூட் இரண்டாம் இடத்தை அடைந்தார்.
அத்துடன் 38ஆவது சதத்தைத் குவித்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கார் (51 சதங்கள்), யக்ஸ் கல்லிஸ் (45), ரிக்கி பொன்டிங் (41) ஆகியோருக்கு அடுத்ததாக குமார் சங்கக்காரவுடன் (38) 5ஆம் இடத்தை ஜோ ரூட் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் ஜோ ரூட் 1128 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த விளையாட்டரங்கில் 1000 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினர். லோர்ட்ஸ் விளையாட்டரங்கிலும் அவர் 1000க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்துள்ளார். அங்கு அவர் 2166 ஓட்டங்களை மொத்தமாக குவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, இந்த டெஸ்ட் போட்டியில் 71 ஓட்டங்களைப் பெற்ற ஒல்லி போப்புடன் 3ஆவது விக்கெட்டில் 144 ஓட்டங்களையும் பென் ஸ்டோக்ஸ் மற்றம் ஜெமி ஸ்மித் ஆகியோருடன் 5ஆவது விக்கெட்டில் 150 ஓட்டங்களையும் பகிர்ந்த பின்னர் ஜோ ரூட் ஆட்டம் இழந்தார். (499 – 5 விக்.)
மொத்த எண்ணிக்கை 491 ஓட்டங்களாக இருந்தபோது பென் ஸ்டோக்ஸின் தொடையில் ஏற்பட்ட தசை இழுப்பு காரணமாக தற்காலிகமாக ஓய்வுபெற்றார். அப்போது அவர் ஜோ ரூட்டுடன் 142 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தார்.
கிறிஸ் வோக்ஸ் 7ஆவதாக ஆட்டம் இழந்த பின்னர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் களம் புகுந்து 66 ஓட்டங்களிலிருந்து துடுப்பாட்டத்தைத் தொடர்ந்து ஆட்ட நேர முடிவில் 77 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
அவருடன் லியாம் டோசன் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.
பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 117 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 358 ஓட்டங்களைப் பெற்றது.
முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இந்தியர்கள சதங்கள் குவித்த போதிலும் இந்த டெஸ்டில் இதுவரை சதம் குவிக்கவில்லை.
ஆயஷஸ்வி ஜய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷாப் பான்ட் (54) ஆகியோர் அரைச் களைப் பூர்த்திசெய்தனர்.
பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 73 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.