தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. சுமார் 11.18 லட்சம் பேர் தேர்வை எழுதி உள்ளனர். எத்தனை தேர்வு மையங்கள், எத்தனை ஆயிரம் பணியாளர்கள், எத்தனை லட்சம் தேர்வர்கள்.. அனைவரையும் ஒருங்கிணைத்து மிகுந்த கவனத்துடன் தேர்வாணையம் செயல்பட்டு இருக்கிறது. ஆணையத்துக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து பல குற்றச்சாட்டுகள், விமர்சனங்களை பலர் எழுப்பலாம். அதன் உண்மைத் தன்மைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், தேர்வுக்கான ஏற்பாடுகளைப் பொருத்தமட்டில் பெரிதாகக் குறையேதும் இல்லை என்பதே உண்மை. தேர்வு எழுதிய பல இளைஞர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்ததில், எல்லாத் தேர்வு மையங்களிலும் ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவே கூறினார்கள். இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் திட்டமிடல், உழைப்பு,அர்ப்பணிப்பு பாராட்டுக்கு உரியது.
இனி… வினாத்தாள்!
தமிழ், பொது அறிவு என இரண்டு பிரிவுகள்; ஒவ்வொன்றிலும் 100 வினாக்கள்; ஒவ்வொன்றுக்கும் ஒன்றரை மதிப்பெண்கள்; இரு பிரிவுகளும் சேர்த்து 300 மதிப்பெண்கள். ஆமாம். அது என்ன ஒன்றரை மதிப்பெண்? ஒவ்வொரு விடைக்கும் ஒரு மதிப்பெண் என்று இருக்கலாமே. அது என்ன ஒன்றரை? இது என்ன ‘லாஜிக்’? ஆணையம் சற்றே விளக்கினால் நலமாய் இருக்கும்.
இரண்டு பகுதிகளிலுமே பழகிய பாதையில், பழகிய வினாக்கள். அதிலும், தமிழ் மொழிப் பிரிவு, இளம் தேர்வர்களைப் பல பத்தாண்டுகளுக்குப் பின்னுக்கு இழுக்கிறது. நாளுக்கு நாள் வெகு வேகமாக மாறிவரும் அறிவியல் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் திறன், மிக நிச்சயமாக, நம் தமிழுக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘இலக்கணம்’ என்கிற குடுவைக்குள் இளம் தலைமுறையின் தாய்மொழி அறிவை அடைக்க முயற்சிப்பது ஏன்?
அரசு நிர்வாகத்தில் பங்கேற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இளம் பணியாளர்களுக்கு, வினாத்தாள் எதிர்பார்க்கும் அறிவு, எந்த வகையில் பயன் உள்ளதாக இருக்கும்? தமிழ்ப் பிரிவு வினாக்களில் காணப்படும் கடும் வறட்சி, நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. முனைமம், நீடனுபோகம், ஓலக்கம், கக்கல் கரிசல், அணிகம், அநிகம், அனிகம், செற்றம், முரல், வருவி, வாளை, வியாளம்.. இவற்றையெல்லாம் மீட்டெடுக்கும் முயற்சியில் தவறில்லை. ஆனால் அதற்கான களம் இதுவல்ல. இதனை ஏனோ ஆணையம் உணர்ந்து கொள்ள மறுக்கிறது.
இதற்கு அப்பால், இப்பிரிவில் அறிவார்ந்த வினாக்களும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ‘தகுதியான் வென்று விடல்’ எனும் குறளில், ‘தகுதியான்’ என்பதன் பொருள் என்ன? ‘வேளைப்பிசகு’ என்றால் என்ன? ‘அழக்கொண்ட எல்லாம் அழப் போம்’ என்பதற்கு இணையான பழமொழி யாது?
‘மண்ணோடு இயைந்த மரத்தனையர்’ என்று குறள், யாரைச் சுட்டுகிறது? தோழர் என்னும் பொருள் தரும் ‘காம்ரேட்’ எனும் சொல் எந்த மொழியைச் சேர்ந்தது? உள்ளிட்ட வினாக்கள், உண்மையில் தரமானவைதாம்.
பொதுவாக, மொழிப் பிரிவில் சுவாரசியமான கேள்வி எதுவும் எதிர்பார்க்க இயலாதுதான். ஆனால் ஓர் இன்ப அதிர்ச்சியாக அப்படியொரு வினா கட்டுரை நிறைவில் பார்ப்போம். அரைப் புள்ளி, கால் புள்ளி இடுதல், அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்தல், உவமைகளை விளக்குதல், ஆங்கில கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் கண்டறிதல் ஏற்புடையதாகவே இருந்தன. ஆனாலும், காலத்துக்கு ஒவ்வாத, நிகழ் வாழ்வுக்குத் தேவைப்படாத பொருத்தமற்ற அம்சங்கள், விரவிக் கிடக்கின்றன. இளம் தலைமுறைக்கு இவ்வகைக் கேள்விகள் பெரும் சவாலாக இருந்திருக்கக் கூடும். கட்டாயம் தவிர்த்து இருக்கலாம்.
அடுத்து, பொது அறிவு. வினாத்தாள் இதனை, ‘மனக்கணக்கு நுண்ணறிவு’ என்கிறது! பஞ்சமி நிலங்கள், தமிழகத்தின் முந்தைய நிதி அமைச்சர்கள், ‘கால வரிசைப்படி’ விருதுகள், தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம், அகழ்வாராய்ச்சி நடைபெற்ற ஊர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனம், பஞ்சாயத்து ராஜ் குழுக்கள், நெல் சாகுபடி, மதுரை மில் வேலை நிறுத்தம், பணவீக்கக் காரணம், புற்றுநோய் சிகிச்சை தொடர்பான வினாக்கள், பாராட்டும்படி இருந்தன.
நில அளவைப் புத்தகத்தில் உள்ளபடி ஒரு பதிவைத் தந்து, நிலத்தின் பரப்பளவு என்ன? என்கிற கேள்வி – அசத்தல்! தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் இலவச அழைப்பு எண்.. பயனுள்ள கேள்வி. தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதர் என்று சாதிய அடையாளம் இன்றி விளித்ததைப் பாராட்டலாம். ஆனால் இதே வினாத்தாளில், டாக்டர் நடேச முதலியார், பகவான் பகதூர் பவானந்தம் பிள்ளை என இடம்பெற்று இருப்பதை ஆணையம் சற்றே கவனித்துத் திருத்தி இருக்கலாம்.
இல்லம் தேடிக் கல்வி, விடியல் பயணம் மற்றும் வழக்கமான ‘கொள்கை சார்’ கேள்விகள்… ‘இப்படித்தான் இருக்கும்’ என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள வேண்டியதுதான். குடியரசு நாள் விழாவில் பங்கேற்ற அயல் நாட்டுத் தலைவர்கள், வெவ்வேறு சட்டங்கள் இயற்றப்பட்ட ஆண்டுகள், வட, தென், கிழக்கு, நடு திராவிட மொழிகள் போன்ற வினாக்கள், சிலருக்குக் கடினமாக இருந்திருக்கலாம். அதேநேரம், இராமலிங்க அடிகளார், கட்ட
பொம்மன், வெற்றிவேற்கை நன்னெறி நல்வழி நீதிநெறி விளக்கம் நூலாசிரியர்கள், தனி வட்டி, கூட்டு வட்டி தொடர்பான வினாக்கள் எல்லோருக்கும் மிகுந்த மன ஆறுதல் தந்திருக்கும்.
சிந்து நாகரிகம், ஜாலியன் வாலாபாக் சம்பவம், பிரம்ம ஞான சபை, பல்லவர் குடைவரைக் கோயில்கள், மக்கள் தொகைப் பெருக்கம், வறுமை ஒழிப்புத் திட்டங்கள், நோய்கள் – பாதிப்புகள், ஜிஎஸ்டி நோக்கம், பொதுக்கணிதக் கேள்விகள்.. ‘இவ்வளவுதானா? இதற்கு மேல் எதுவும் இல்லையா?’ என்று யோசிக்க வைக்கிறது.
மொத்தத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 வினாத்தாள், ‘புதுமை’ ஏதும் இன்றி முற்றிலும் பழைய, பழகிய பாதையிலேயே பயணித்து, தேர்வர்களைச் சோர்வடையச் செய்துள்ளது. வினாத்தாள் தயாரிப்பில், ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டுவர ஆணையம் பரிசீலித்தல், மிக நல்லது.
நிறைவாக, இரண்டு – சுவாரஸ்யமான வினாக்கள்:
திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர் யார்?
பொருந்தா இணையைக் கண்டறிக. ஏ-எ; த-ந; ஐ-அ; ற-ன.
கண்டுபிடித்து விட்டீர்களா..? சபாஷ்!