படக்குறிப்பு, டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான க்ரீத்திவாசன்கட்டுரை தகவல்
30 வயதான கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த 9 ஆண்டுகளாக மென்பொறியாளராக உள்ளார். ஒரு வார இறுதி நாளில், அவரின் அலுவலக நண்பரிடமிருந்து ஒரு செய்தி வருகிறது. அந்த செய்தி தான் வார இறுதி விடுமுறை ரசித்து கொண்டிருந்த முகேஷைப் போன்ற பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நடப்பு நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை பணியிலிருந்து விடுவிக்கப் போகிறது என்பதே அந்த செய்தி.
இந்த தகவலை அதன் டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரான க்ரீத்திவாசன் மணிகண்ட்ரோல் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் உறுதிபடுத்தினார்.
பணிநீக்கம் பற்றி க்ரீத்திவாசன் கூறியது என்ன?
“நாங்கள் வேலை செய்யும் முறை உட்பட அனைத்தும் மாறி வருகிறது. சாத்தியப்படுகிற இடங்களில் நாங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம். இந்த பணிநீக்கத்தால் எங்கள் ஊழியர்களில் 2% பேர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எங்கள் ஊழியர்களுக்கு திறன்களை வளர்க்க தேவையான பயிற்சி உள்ளிட்ட அனைத்தையும் வழங்கி வருகிறோம். வேறு எங்குமே பணியமர்த்த முடியவில்லை என்கிற நிலையில் உள்ளவர்கள் தான் இதன் மூலம் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்” என்று க்ரீத்திவாசன் தெரிவித்திருந்தார்.
பிபிசி தமிழிடம் இதுகுறித்துப் பேசிய கார்த்திக், டிசிஎஸ் நிறுவனத்தில் தான் கடந்த இரண்டு வருடங்களாகப் பணி புரிந்து வருகிறார். “எங்கள் நிறுவனத்தில் இது தொடர்பாக எந்த அறிவிப்பும் இல்லை. செய்தியில் பார்த்து தான் நாங்களே தெரிந்து கொண்டோம். ஆனால் முழு நேர ப்ராஜக்டில் இருப்பவர்கள் யாரையும் இந்த அறிவிப்பு பெரிதாக பாதிக்கவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர் எண்ணிக்கை 4,48,464 ஆக இருந்தது. இது 2025-ல் 6,07,979 ஆக உயர்ந்தது. இதில் 2% என வைத்துக் கொண்டால் 12,160 ஊழியர்கள் அடங்குவர். கடந்த ஆண்டு மட்டும் டிசிஎஸ் நிறுவனத்தில் 42,000 ஃப்ரெஷர்கள் வேலையில் சேர்க்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை கூறுகிறது.
ஐடி நிறுவனங்களைப் பொருத்தவரை ஒரு ப்ராஜக்ட் என எடுத்துக் கொண்டால் அதில் டெவலப்பிங், டெஸ்டிங், குவாலிட்டி, டேட்டாபேஸ் மேஜேன்மெண்ட், சப்போர்ட், டிப்ளாய்மெண்ட், ஆர் அண்ட் டி, பிசிசஸ் அனலிஸ்ட் எனப் பல பிரிவுகள் உள்ளன என்கிறார் ரஞ்சனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஐடி துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் உள்ள இவர் ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் மேலாளர் நிலையில் வேலை செய்து வருகிறார்.
ஐடி நிறுவனங்களைப் பொருத்தவரை ஊழியர்கள் ஜூனியர், மிடில், சீனியர் என அனுபவத்தைப் பொருத்து மூன்று படிநிலைகளில் வகைப்படுத்தப்படுகின்றனர்.
“5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் ஜூனியர் பிரிவிலும், 20 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் மிடில் பிரிவிலும், அதற்கும் மேல் அனுபவம் உள்ளவர்கள் சீனியர் பிரிவிலும் இருப்பார்கள்” என்கிறார் ரஞ்சனி.
டிசிஎஸ் நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்பில் பெரும்பாலும் மிடில் மற்றும் சீனியர் நிலையில் இருப்பவர்கள் தான் இடம்பெறுவார்கள் என க்ரீத்திவாசன் தனது பேட்டியில் அறிவித்திருந்தார்.
“ஜூனியர் நிலையில் இருப்பவர்களுக்கு பாதிப்பு இருக்காது எனச் சொல்ல முடியாது. நீண்ட காலமாக யாராவது பெஞ்சில் இருந்தால் அவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
டிசிஎஸ் பணிநீக்க அறிவிப்பு யாரை பாதிக்கும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மென்பொறியாளர்கள் (கோப்புப்படம்)
ஐடி நிறுவனங்கள் ஒரு ப்ராஜக்டிலிருந்து ஒருவரை விடுவிக்க வேண்டுமென்றால் வழக்கமாக அவர்களை பெஞ்சுக்கு அனுப்பும். அவர்களுக்கு வேலை எதுவும் இருக்காது, 35 நாட்கள் அவகாசம் கிடைக்கும், ஊதியமும் பயிற்சியும் கூட வழங்கப்படும். அதற்குள் அவர்கள் வேறு ப்ராஜக்டில் இணைய முடியவில்லையென்றால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். இந்த காலகட்டம் பெஞ்ச் பீரியட் என அழைக்கப்படுகிறது.
“பல ப்ராஜக்டுகளை கையாளும் ஒரு பெரும் ஐடி நிறுவனத்தில் ஊழியர்கள் பெஞ்சிற்குச் சென்று வேறு ப்ராஜக்டிற்கு மாறுவது என்பது தொடர்ச்சியான நடைமுறை தான். ஆனால் பெஞ்ச் பீரியட் அவகாசத்தை ஐடி நிறுவனங்கள் பரவலாக குறைத்துவிட்டன. ப்ராஜக்டில் இருப்பவர்களை நிறுவனங்கள் அவ்வளவு எளிதாக வேலையைவிட்டு அனுப்ப மாட்டார்கள். எனவே பெஞ்சில் இருப்பவர்கள் தான் இதனால் முதலில் பாதிக்கப்படுவார்கள்” என்கிறார் ரஞ்சனி.
இந்த கட்டுரைக்காக பிபிசி தமிழ் பேசிய நிபுணர்கள் அனைவருமே செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்பது ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறது எனத் தெரிவிக்கின்றனர்.
ஐடி துறையில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?
ஐடி வேலைகளைப் பொருத்தவரை வெவ்வேறு நிலைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதாகக் கூறுகிறார் கார்த்திக்.
“ஒரு டெவலப்பர் தனிப்பட்ட முறையில் ஏதாவதொரு செயற்கை நுண்ணறிவு கருவியை அவரின் கோடிங் தேவைகளுக்காக சந்தா செலுத்தி பயன்படுத்தலாம். சில நிறுவனங்கள் மொத்தமாக செயற்கை நுண்ணறிவு பயன்பாடு சந்தா வாங்கி ஒவ்வொரு குழுவிற்கும் பிரித்து வழங்குகின்றன. சில நிறுவனங்கள் அவர்கள் தேவைக்கேற்ற செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்குகின்றன. இதில் முதல் இரண்டு வகைகள் பரவலாக உள்ளன” என்றார் கார்த்திக்.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டுக்கும் ஹிட்டன் காஸ்ட் என்கிற அதனை உருவாக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வருகிற மறைமுக செலவு இருக்கும் எனக் கூறும் அவர், ஐடி நிறுவனங்கள் அவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் முடிவுகளை எடுக்கின்றன என்று தெரிவித்தார்.
ரஞ்சனியின் நிறுவனத்தில் அவர் தற்போது மேற்பார்வை செய்து வரும் ப்ராஜக்டில் 10% பணிகளை ஆப்டிமைஸ் செய்ய வேண்டும் என அவருக்கு கூறப்பட்டுள்ளது.
“ஆப்டிமைஸ் என்பதன் மறு அர்த்தம் ஆட்டோமேட் என்பது தான். அப்படியென்றால் பணியாட்கள் குறைப்பு என்பது தவிர்க்க முடியாதது. வாடிக்கையாளர் (Client) தரப்பிலும் சரி, நிறுவனத்தின் தரப்பிலும் சரி ‘முதலீட்டின் மீதான வருமானம் (Return on investment) என்பதை கணக்கிட்டு தான் ஆட்டோமேஷனுக்கான தேவையும் இருக்கும். சில வாடிக்கையாளர்கள் வெளிப்படையாகவே செயற்கை நுண்ணறிவு பயன்பாடு கூடாது என்கிறார்கள். வேறு சிலருக்கு அது பொருட்டாக இருப்பதில்லை. எனவே செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்பது துறை சார்ந்து, ப்ராஜக்ட் சார்ந்து, வாடிக்கையாளர் சார்ந்து மாறுபடும். தற்போது அனைத்துமே ஆரம்பக் கட்டத்தில் தான் உள்ளன” என்றார் அவர்.
“இரண்டாம் நிலை நகரங்கள் அதிகம் பாதிக்கப்படும்”
மறுபணியமர்த்துவதில் (redeployment) ஒருவர் எங்கு வேலை செய்கிறார் என்பதும் முக்கியப் பங்கு வகிக்கும் என்கிறார் ரஞ்சனி.
“பெங்களூரு, ஹைதராபாத், சென்னை போன்ற பெருநகரங்களில் அதிக அளவில் ப்ராஜக்ட்கள் இருக்கும். ஆனால் ஓசூர், கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள அலுவலங்களில் ப்ராஜக்ட்கள் குறைவாக இருக்கும். அங்குள்ளவர்களுக்கு உடனடியாக மாற்று ப்ராஜக்ட் கிடைப்பது கடினம்.”
“வேறு ஊர்களில் கிடைத்தால் உடனடியாக இடம்பெயர்வதும் கடினமாக இருக்கும். எனவே இது போன்ற சூழ்நிலைகளில் அவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். பொறியாளர்கள் தொடர்ந்து திறன்களை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டிய தேவையுள்ளது” என்று தெரிவித்தார்.
படக்குறிப்பு, ஏஐ பயன்பாட்டால் ஐடி துறையில் செயல்திறன் மேம்படுகிறது என்கிறார் ராஜராம் வெங்கட்ராமன்.
செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டால் ஐடி துறையில் செயல்திறன் மேம்படுகிறது என்கிறார் எஃப்ஐசிசிஐ அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ராஜராம் வெங்கட்ராமன்.
மேலும் அவர் “இந்தியாவின் ஐடி உற்பத்தி உள்ளூர் சந்தையைவிட பெரும்பான்மை சர்வதேச சந்தைக்கானது. அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு சார்ந்து ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இந்தியாவிலும் எதிரொலிக்கும். ஐடி நிறுவனங்கள் ஓராண்டுக்கு முன்பாகவே அடுத்த ஆண்டிற்கான வேலைகள் மற்றும் நிதி நிலைமையை முன்னறிவிப்பு செய்வார்கள். ஆனால் தற்போது ஒரு காலாண்டிற்குக் கூட செய்ய முடியாத நிலை உள்ளது” என்கிறார்.
இதே கருத்தை ரஞ்சனி முன்வைக்கிறார். அவரின் பணிகளில் பிரதானமானது அடுத்தடுத்த அரையாண்டிற்கான ஊழியர்களின் தேவையை கணித்து நிறுவனத்தின் மனித வள பிரிவிற்கு (ஹெச்.ஆர்) வழங்குவது தான். புதிய ஊழியர்களை பணிக்குச் சேர்ப்பது அந்த பிரிவின் வேலை.
“நடப்பாண்டிற்கான தேவை குறித்த பட்டியலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே வழங்கிவிட்டோம். ஆனாலும் தற்போது வரை ஒரு பேட்ச் கூட அவரின் நிறுவனத்தில் பணியில் புதிதாக சேர்க்கப்படவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் இது போன்றதொரு நிலை இருக்கவில்லை” என்று ரஞ்சனி தெரிவித்தார்.
படக்குறிப்பு, ஏஐ அறிமுகத்தால் பீபிஓ போன்ற ஐடி சார்ந்த பணிகள் தான் முதலில் காலியாகின்றன என்கிறார் வெல்கின்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அறிமுகத்தால் பீபிஓ போன்ற ஐடி சார்ந்த பணிகள் தான் முதலில் காலியாகின்றன என்கிறார் ஐடி மற்றும் ஐடி சார்ந்த ஊழியர்களின் சங்கமான யுனைட்டின் பொதுச் செயலாளர் அழகுநம்பி வெல்கின்.
“தமிழ்நாட்டில் ஐடி வேலைகள் என்று எடுத்துக் கொண்டால் 30% பணிகள் பீபிஓ போன்ற ஐடி சார்ந்தவையாகத் உள்ளன. அடுத்த சில வருடங்களில் இவை செயற்கை நுண்ணறிவு மயமாகிவிடும்” என்றார்.
ஐடி நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பணிநீக்கம் செய்வது சட்டப்படி சாத்தியமா என்கிற கேள்வியையும் அவர் முன்வைக்கிறார்.
“ஐடி நிறுவனங்களில் பணிநீக்கம் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒன்று. ஆனால் பெருநிறுவனங்கள் 100 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் பணி நீக்கம் செய்வதாக இருந்தால் சட்டப்படி அரசிடம் தெரிவிக்க வேண்டும். எந்த பணிநீக்கமும் தன்னிச்சையாக நடக்கக் கூடாது என்பதற்காக இந்தப் பிரிவுகள் உள்ளன. எனவே இது நடைமுறையில் எவ்வாறு சாத்தியமாகும் என்பது சந்தேகமே” என்று தெரிவித்தார்.