பட மூலாதாரம், Reuters
ரஷ்யா குறித்த டொனால்ட் டிரம்பின் தற்போதைய எண்ணங்கள் தொடர்பான எந்தவிதப் பகுப்பாய்வும் விரைவில் காலாவதியாகிவிடும்.
அவரது ஒரு ட்வீட், பதிவு அல்லது தற்போதைய கருத்தை அதிகம் நம்பினால், அடுத்த நாள் வரும் புதிய ட்வீட் அல்லது கருத்து அதற்கு மாறாக இருக்கலாம். இதை நான் அனுபவித்திருக்கிறேன்.
“அமெரிக்க அதிபர் ஒரு நிலையான மனநிலையில் இல்லை. முக்கிய விஷயங்களில் அவர் தனது எண்ணத்தை, காலணிகளை மாற்றுவது போல் எளிதாக மாற்றுகிறார்” என்று கொம்சோமோல்ஸ்காயா பிராவ்தா பத்திரிகை இன்று கூறியிருந்தது.
இருப்பினும், சமீபத்தில் ரஷ்யாவை பொறுத்தவரை, வெள்ளை மாளிகையில் உற்சாகமான உறவுக்குப் பதிலாக பதற்றமான உறவே நிலவுவதாகத் தெரிகிறது.
இது இன்றைய மொஸ்கோவ்ஸ்கி கொம்சோமோலெட்ஸ் பத்திரிகையில் “ரஷ்ய-அமெரிக்க பதற்றம்” என்ற தலைப்பில் வெளியான முதன்மைச் செய்தியை விளக்குகிறது.
ஜூலை 3 அன்று விளாதிமிர் புதினும் டொனால்ட் டிரம்பும் தொலைபேசியில் பேசினர். அவர்கள் இடையே இந்த ஆண்டில் நடந்துள்ள ஆறாவது தொலைபேசி உரையாடல் இது.
ஆனால், யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு “எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை” என்று அதிபர் டிரம்ப் கூறினார். “நான் அதைப் பற்றி மகிழ்ச்சியடையவில்லை,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, ரஷ்யாவை உள்ளடக்கிய நாடுகளின் குழுவான பிரிக்ஸ் உடன் இணைந்த எந்தவொரு நாட்டிற்கும் 10 சதவிகித வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.
செவ்வாய்க்கிழமை, அமைச்சரவைக் கூட்டத்தில் டிரம்ப் தனது விரக்தியை வெளிப்படுத்தினார். “உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், புதின் எங்களை நோக்கி நிறைய பயனற்ற வார்த்தைகளை வீசுகிறார்” என்று இதுவரை அவர் பயன்படுத்தியதிலேயே மிகவும் வலுவான வார்த்தைகளில் டிரம்ப் கூறினார்.
“அவர் எப்போதும் நல்லவர் போலத் தோன்றினாலும், அது பயனற்றது,” என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று கிரெம்ளினின் பதிலைக் கேட்டபோது, “நாங்கள் இந்த விஷயத்தில் அமைதியாக இருக்கிறோம்,” என்று புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், பத்திரிகையாளர்களுக்கான மாநாட்டு அழைப்பில் கூறினார்.
அதோடு, “டிரம்பின் பேச்சு பொதுவாக மிகவும் கடுமையாக இருக்கிறது. எங்கள் உறவில் ஏற்பட்ட பிளவைச் சரிசெய்ய அமெரிக்காவுடன் உரையாடலைத் தொடரத் திட்டமிட்டுள்ளோம். டிரம்பும் அவரது குழுவும் சமாதான முயற்சிகளை மீண்டும் ராஜ்ஜீய வழியில் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தொடர்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
ரஷ்ய அரசு, ராஜ்ஜீய ரீதியாக, குறைந்தபட்சம் டிரம்ப் குறித்து கண்ணியமான முறையில் பேச முயன்றது. ஆனால், ரஷ்ய ஊடகங்கள் அவரை வெளிப்படையாக விமர்சித்தன. கொம்சோமோல்ஸ்காயா பிராவ்தா பத்திரிகையில் பேசியுள்ள ஓர் அரசியல் வல்லுநர் டொனால்ட் டிரம்பை “உலக அரசியலில் எந்தச் சாதனைகளையும் செய்யாதவர்” என்று விமர்சித்தார்.
மொஸ்கோவ்ஸ்கி கொம்சோமோலெட்ஸ் பத்திரிகை, அதிபர் டிரம்பின் “அதிரடியாக மாறும் மனநிலை, திடீர் உணர்ச்சி மாற்றங்கள் மற்றும் குழப்பமான முடிவுகள்” பற்றி எழுதியது. ஆர்க்யுமென்ட்ஸ் அண்ட் ஃபேக்ட்ஸ் இதழின் இந்த வாரப் பதிப்பு, ஈலோன் மஸ்க்கின் புதிய அமெரிக்கா கட்சியை முன்வைத்து டிரம்பை கேலி செய்தது.
“இப்போது அமெரிக்க அதிபர் ‘மேக் அமெரிக்கா கிரேட் எகைன்’ (Make America Great Again) என்று கூறும் ஒவ்வொரு முறையும், கவனக் குறைவாக மஸ்க்கின் கட்சியை விளம்பரப்படுத்துவார்” என்று அந்த நாளிதழ் எழுதியிருந்தது.
ரஷ்ய ஊடகங்களில் டிரம்ப் குறித்து நேர்மறையாகப் பேசப்பட்டு வந்த நிலையில், அதில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றத்தை இது காட்டுகிறது. உதாரணமாக, மார்ச் மாதத்தில், ஓர் அரசியல் நிபுணர் இஸ்வெஸ்டியா நாளிதழிடம் பேசியபோது, அமெரிக்காவின் செயல்பாடுகள் ஐரோப்பா அல்லது யுக்ரேனைவிட ரஷ்யாவையே அதிகம் ஒத்திருப்பதாகக் கூறினார்.
“டொனால்ட் டிரம்பின் நிலைப்பாடு மாஸ்கோவுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வலுப்படுத்த அவர் மறுத்துவிட்டார். ரஷ்யாவுடன் பெரிய அளவில் வர்த்தகத்தை வளர்க்கும் தனது உறுதியை வெளிப்படுத்தினார்” என்று மே மாதத்தில், வணிக நாளிதழான கொம்மர்சாண்ட் கூறியது.
இந்த நம்பிக்கை புரிந்துகொள்ளத்தக்கது. இந்த ஆண்டு தொடக்கத்தில், வெள்ளை மாளிகை யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியை (புதினை அல்ல) பகிரங்கமாக விமர்சித்து, யுக்ரேனுக்கு (ரஷ்யாவுக்கு அல்ல) அழுத்தம் கொடுத்தது.
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் உறவுகளை மேம்படுத்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின. மேலும், டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப், அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்யாவுக்கு அடிக்கடி வருகை தருபவர். அவர்களது சந்திப்புகளில் ஒன்றில், ரஷ்ய அதிபர் டிரம்புக்கு எடுத்துச் செல்ல ஒரு பரிசை வழங்கினார். அது அமெரிக்க அதிபரின் உருவப் படம்.
ரஷ்யாவும் அமெரிக்காவும் புதிய உறவை உருவாக்குவது போலத் தோன்றியது. ஆனால், விட்காஃப்பின் கடைசி வருகை நிகழ்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஜூன் மாதத்தில், தூதரகப் பணிகளை மீட்டெடுக்க நடத்தப்படவிருந்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை அமெரிக்கா ரத்து செய்ததாக ரஷ்யா அறிவித்தது.
இதற்கிடையே, யுக்ரேனில் முழுமையான போர் நிறுத்தத்தைக் கொண்டு வர ரஷ்யா ஒப்புக்கொள்ளாததால் அதிபர் டிரம்ப் விரக்தியடைந்து வருவதாகத் தெரிகிறது.
சமீபத்தில், மொஸ்கோவ்ஸ்கி கொம்சோமோலெட்ஸ் நாளிதழ், “டிரம்ப் தங்களுக்குப் போதுமான பலன்களை வழங்கவில்லை” என்று நினைப்பதாக எழுதியது. எனவே, ரஷ்யாவின் பார்வையில், நீண்ட கால அளவில் அவர்களுக்குப் பயனளிக்காத ஒரு சமாதான ஒப்பந்தத்தை மேற்கொள்வதைவிட தொடர்ந்து வாதிடுவதே நல்லது.
அதாவது, யுக்ரேனை பொறுத்தவரை, டிரம்ப் வழங்கத் தயாராக இருப்பதைவிட, புதின் அதிகமாக எதிர்பார்க்கிறார். யுக்ரேனில் அதிக நிலப்பரப்பு, எதிர்காலத்தில் யுக்ரேனின் ராணுவ அளவைக் குறைப்பது மற்றும் மேற்கத்திய ஆயுத விநியோகங்களைக் குறைப்பது ஆகியவற்றை புதின் எதிர்பார்க்கிறார்.
பட மூலாதாரம், EPA
புதின் தற்போது “வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை” வைத்து இருப்பதாகவும், சிறந்த ஒப்பந்தத்திற்காக காத்திருக்க முடியும் என்றும் நம்புகிறார்.
ஆனால், அவர் சொல்வது சரியா? அல்லது ரஷ்யா தப்புக் கணக்கு போடுகிறதா?
அடுத்தகட்ட நடவடிக்கைகள், அதிபர் டிரம்ப் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்தே இருக்கும்.
குறிப்பாக, யுக்ரேனுக்கு எதிர்காலத்தில் அமெரிக்கா அளிக்கும் ராணுவ உதவியின் அளவு மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை வெள்ளை மாளிகை வலுப்படுத்துமா ஆகிய இரண்டு விஷயங்களில் அவர் என்ன செய்வார் என்பதைப் பொறுத்தது.
ஆனால் நான் முன்பு கூறியதை மறந்துவிடாதீர்கள்.
அதோடு, டொனால்ட் டிரம்ப் காலணிகளை மாற்றுவதைப் போல் தனது நிலைப்பாட்டை மாற்றுவதாக கொம்சோமோல்ஸ்காயா பிராவ்தா நாளிதழ் சித்தரித்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு வாரத்திற்கு முன்பு, யுக்ரேனுக்கு வழங்கப்படும் சில ராணுவ உதவிகளை அமெரிக்கா இடைநிறுத்த முடிவு செய்தபோது ரஷ்ய அரசியல் நிபுணர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
எனவே, ரஷ்யா மற்றும் யுக்ரேன் குறித்து டிரம்ப் என்ன கூறுகிறார் என்பதில் மட்டுமல்ல, அவர் உண்மையில் என்ன செய்கிறார் என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு