டி.என்.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
8 அணிகள் பங்கேற்ற 10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. கடந்த 15-ஆம் தேதியுடன் திண்டுக்கலில் போட்டிகள் நிறைவுற்ற நிலையில், 2-ஆம் கட்ட போட்டிகள் சென்னையில் நடக்கின்றன.
கடந்த 18-ஆம் தேதியில் இருந்து நடப்பு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிக்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் புள்ளிகள் பட்டியல் அடிப்படையில், மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
மழையால் ஆட்டம் பாதிப்பு:
கடந்த 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடந்த முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோத இருந்தன. எனினும், தொடர் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. இதேபோல், ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடக்க இருந்த கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்பட்டது.
இதனால், மதுரை பாந்தர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற கோவை கிங்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் கோவை கிங்ஸ் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டி.என்.பி.எல். இறுதிப் போட்டி:
அதன்படி, டி.என்.பி.எல். தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஆகஸ்ட் 28) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்றைய இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் நோக்கில் களமிறங்குகிறது. முன்னதாக 2018-ஆம் ஆண்டில் நடந்த டி.என்.பி.எல். தொடரில் மதுரை அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கோவை கிங்ஸ் அணி நான்காவது முறையாக டி.என்.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
நடப்பு டி.என்.பி.எல். தொடரிலேயே கோவை கிங்ஸ் அணி தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால், இந்த அணியும் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த வகையில் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.