பட மூலாதாரம், Kamesh Srinivasan
கொலை செய்யப்பட்ட டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் வீடு குருகிராமில் அமைந்துள்ளது. அவர் கொலை செய்யப்பட்டதற்கு ஒரு நாள் கழித்து அங்கே நிசப்தம் குடி கொண்டிருந்தது. சிலர் அவர் வீட்டின் முன்பு அமர்ந்திருந்தனர்.
அனைவரும் ஆண்களே. அனைவரும் அமைதியாகவும் இருந்தனர். ஏதாவது பேசினாலும் கூட சத்தம் வெளியே வராத வகையில் முனுமுனுத்தனர். செய்தியாளர்களிடம் பேசுபவர்களும் கூட தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த தயக்கம் காட்டினார்கள்.
டெல்லியை ஒட்டியிருக்கும் ஹரியாணாவின் குருகிராமைச் சேர்ந்தவர் ராதிகா. செக்டர் 57-ல் வசித்து வந்த அவர் ஜூலை 10 அன்று காலை கொல்லப்பட்டார். கொலையை அவருடைய அப்பா செய்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குருகிராம் காவல்துறையினர் வழங்கிய தகவலின் படி, ராதிகாவின் பின்புறம் நின்ற வண்ணம் ராதிகாவை நோக்கி சுட்டதில் மூன்று குண்டுகள் உடலை துளைத்துள்ளன. அவருடைய தந்தை, அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ராதிகாவின் உறவினர் குல்தீப் யாதவ் கொடுத்த புகாரின் அடிப்படையில் குருகிராம் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ராதிகாவின் அப்பா, தீபக் யாதவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது குருகிராம் நீதிமன்றம்.
இந்த அசம்பாவிதம் நடந்து ஒரு நாள் கழித்து ஜூலை 11 அன்று பிபிசி ஹிந்தி களத்திற்குச் சென்று இந்த கொலைக்கான பின்னணியை அறிய முற்பட்டது. அங்கே நாங்கள் பார்த்தது என்ன? மக்கள் எங்களிடம் கூறியது என்ன? முழு விவரம் இந்த கட்டுரையில்.
அதிர்ச்சியில் உறவினர்கள்
ராதிகாவின் உறவினரான ராஜ் குமார் பிபிசியிடம் பேசும் போது, “ஏதோ தவறு நடந்திருக்கிறது. எங்கள் அனைவரையும் இந்த சம்பவம் உலுக்கியுள்ளது. தன்னுடைய மகள் மீது உயிராக இருந்தார் அவர். ஆனால் தற்போது இப்படி ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. அவர்களுக்கு இடையே என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை,” என்று கூறினார்.
ராதிகாவின் மற்றொரு நெருங்கிய உறவினர் ஒருவரை நாங்கள் அங்கே சந்தித்தோம். தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அவர், காவல்துறையினர் அவரிடம் என்ன கூறினார்கள் என்பதை பிபிசியிடம் விவரித்தார்.
“ஒரு குடும்பத்தில் ஒரு பெண் இவ்வளவு சம்பாதிக்கிறார் என்றால் யார் கவலை அடையப் போகிறார்கள்? ராதிகா டென்னிஸ் அகாதெமி நடத்தி வந்தார். அதனால் அவருடைய தந்தை கேலிக்கு ஆளானார். அதனால் அவர் மிகவும் கோபமாக இருந்தார். அவருடைய மகளை சுட்டுவிட்டார். நடந்த சம்பவம் மிகவும் சோகமானது. ஆனால் தற்போது நாம் என்ன செய்துவிட முடியும்?” என்று கேட்கிறார் அவர்.
காவல்துறை விசாரணையின் போது தான் இந்த வழக்கில் பல உண்மைகள் புலப்படும். ஆனால் ராதிகாவின் தந்தை காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், ராதிகாவின் டென்னிஸ் அகாதெமியால் மக்கள் அவரை கேலி செய்ததாக தெரிவித்தார். இது ஒரு சமூகத்தின் மன நலனையே பிரதிபலிக்கிறது.
முன்பு தேசிய மற்றும் சர்வதேச அளவில் டென்னிஸ் விளையாட்டுகளில் பங்கேற்ற ராதிகாவின் மரணம் தற்போது பல்வேறு மட்டங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. நாங்கள் ராதிகாவின் வீட்டிற்கு சென்று சூழலை அறிந்து கொள்ள முற்பட்டோம்.
ராதிகாவின் வீட்டிற்கு நாங்கள் சென்ற போது, மூன்று அடுக்குகளைக் கொண்ட அவரின் வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. அவரின் குடும்பத்தினர் இரண்டாவது மாடியில் வசித்து வந்தனர். ஊடகத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தனர்.
அநேக உறவினர்கள் இது குறித்து பேச தயார் நிலையில் இல்லை. பேசியவர்களும் மிகவும் குறைவான தகவல்களையே வழங்கினார்கள். பலரும் ராதிகாவின் மரண செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் இருந்தனர்.
நடந்தது என்ன?
காவல்துறையின் தகவலின் படி, இந்த கொலை ஜூலை 10 அன்று காலை 10.30 மணி அளவில் நடந்தது. முதல் தகவல் அறிக்கையின் படி, தீபக் யாதவ் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
காவல்துறையின் தகவல்படி, தீபக் யாதவ் பின்வருமாறு கூறியுள்ளார்: “என்னுடைய மகள் தேசிய அளவில் விளையாடிய வீராங்கனை. தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடர்ந்து விளையாடவில்லை. டென்னிஸ் அகாதெமி ஒன்றை துவங்கினார். நான் பால் வாங்குவதற்காக என்னுடைய சொந்த கிராமமான வாஸிர்பாதுக்கு செல்லும் போது அங்குள்ள உறவினர்கள் என்னை கேலி செய்தனர். “மகளின் சம்பாத்தியத்தில் வாழ்கிறாய்,” என்று அவர்கள் கூறியது என்னுடைய சுய மரியாதையை காயப்படுத்தியது. எனக்கு அது பிடிக்கவில்லை. அகாதெமியை மூடும்படி நான் அவளிடம் கூறினேன். ஆனால் அவள் என் சொல் பேச்சு கேட்கவில்லை. எனவே நான் அவளை சுட்டேன்.”
தீபக் அவருடைய மகளை நோக்கி மூன்று தோட்டாக்களை சுட்டுள்ளார். அதன் குண்டுகள் அவரை தாக்கியதால் ராதிகா உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தீபக்கால் மக்கள் கேலி செய்வதை தாங்கிக் கொள்ள இயலவில்லை என்று காவல்துறையிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் ஊடகங்களும் ராதிகாவின் குடும்பத்தினரும் வேறு பல காரணங்களையும் தெரிவிக்கின்றனர்.
அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினரான ஒருவர் பிபிசியிடம் பேசிய போது, “ராதிகா விளையாடுவதற்கு தீபக் ஒரு போதும் மறுப்பு கூறியதில்லை. உண்மையில் ராதிகா விளையாடுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் உருவாக்க லட்சக்கணக்கில் பணம் செலவிட்டிருக்கிறார் தீபக். அவர் மிகவும் அமைதியான நபர். நாங்கள் அனைவரும் ஆச்சர்யம் அடைந்துள்ளோம். இது ஏன் நடந்தது என்பதை எங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை,” என்று குறிப்பிட்டார்.
ராதிகாவின் அம்மா மஞ்சு எழுத்துப்பூர்வமாக எந்த வாக்குமூலத்தையும் தரவில்லை என்று குறிப்பிடும் காவல்துறை, இந்த சம்பவம் நடந்த போது அவர் பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறுகிறார் என்று தெரிவிக்கிறது.
“என் மகள் மிகவும் நல்லவள். அவளை ஏன் தீபக் கொன்றார் என்று எனக்கு புரியவில்லை,” என்று காவல்துறையிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெற்ற போது ராதிகாவின் சகோதரர் தீரஜ் யாதவ் வீட்டில் இல்லை.
அகாதெமியை மூடவில்லை என்பதால் தீபக் ராதிகாவை கொன்றதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் மற்றொருபுறம், ராதிகாவின் உறவினர்கள், தீபக் ராதிகாவுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கினார் என்று கூறுகின்றனர்.
இந்த கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது விசாரணைக்குப் பிறகே தெரியவரும். மேலும் பல தகவல்களுக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ராதிகாவின் டென்னிஸ் அகாதெமி எப்படி செயல்பட்டது?
சில மாதங்களுக்கு முன்பு ராதிகா செக்டர் 61-ல் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்தார். அங்கே தான் டென்னிஸ் அகாதெமியை அமைத்தார்.
டென்னிஸ் அகாதெமியை பராமரிக்கும் தனு இது குறித்து பேசும் போது, “ராதிகா இங்கு தினமும் காலையிலும் மாலையிலும் வருவார். ஒரு மாதத்திற்கு முன்பு தான் வகுப்புகளை துவங்கினார். இரண்டு மூன்று குழந்தைகள் டென்னிஸ் கற்றுக் கொள்ள வருவார்கள். அவர்களுக்கு மிகவும் ஆர்வத்துடன் டென்னிஸ் கற்றுக் கொடுத்தார். அவ்வளவு தான் எங்களுக்குத் தெரியும்,” என்று குறிப்பிட்டார்.
ராதிகாவின் டென்னிஸ் பயணம்
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் (ITF) தகவலின், அக்கூட்டமைப்பின் கீழ் படி ராதிகா 36 முறை ஒற்றையர் பிரிவிலும் 7 முறை இரட்டையர் பிரிவிலும் விளையாடியுள்ளார்.
ஒற்றையர் பிரிவில் தன்னுடைய கடைசி ஆட்டத்தை 2024 மார்ச் மாதமும், இரட்டையர் பிரிவில் கடைசி ஆட்டத்தை 2023 ஜூன் மாதமும் ஆடினார். அதன் பிறகு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் குருகிராமில் டென்னிஸ் அகாதெமியை துவங்கினார்.
பல தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார் ராதிகா யாதவ். 2024-ஆம் ஆண்டு ஐ.டி.எஃப். இரட்டையர் தரவரிசையில் 113-வது இடத்தைப் பிடித்தார் அவர். ராதிகாவின் மரணத்தைத் தொடர்ந்து பல விளையாட்டு வீரர்களும் தங்களின் இரங்கல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் சௌஜன்யா பவிஷெட்டி, “மனதை நொறுக்கும் செய்தி. ஒரு போட்டியில் அவரை சந்தித்தேன். அவர் சிரிக்கும் போது மிகவும் அழகாக இருப்பார். அவருடைய அப்பாவால் இப்படி ஒரு குற்றத்தை செய்ய முடியும் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. “மக்கள் என்ன சொல்வார்கள்” என்ற ஒரு முட்டாள் தனமான எண்ணத்தின் விளைவாக அவர் உயிரிழந்துள்ளார்,” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
“இந்த செய்தி வருத்தமளிக்கிறது மேலும் தொந்தரவு அளிக்கும் வகையில் உள்ளது,” டென்னிஸ் வீராங்கனை ஷர்மதா பாலு பதிவிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Kamesh Srinivasan
காவல்துறை கூறுவது என்ன?
குருகிராம் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் சந்தீப் குமார் அளித்த தகவலின் படி, “தீபக் வீடுகளை வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறார். அவருடைய மகள் நடத்தி வரும் அகாதெமியில் அவருக்கு பெரும் உடன்பாடு இல்லை. அவரின் நிதி சூழல் சிறப்பாக இருப்பதால் மகள் வேலைக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை என்று அவர் உணர்ந்தார். எனவே அகாதெமியை மூடும்படி மகளிடம் தெரிவித்தார். ”
மேற்கொண்டு பேசிய சந்தீப், “ராதிகா இதனை செய்ய மறுத்துவிட்டார். இருவருக்கும் இடையே இதனால் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. தீபக் உரிமம் பெற்றிருந்த தன்னுடைய துப்பாக்கியைக் கொண்டு ராதிகாவை சுட்டுக் கொன்றார். குற்றஞ்சாட்டப்பட்ட நபரை கைது செய்து அவர் பயன்படுத்திய ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளோம்,” என்று தெரிவித்தார்.
ரீல்ஸ் வீடியோ இதற்குக் காரணமா?
ராதிகாவின் மரணத்தைத் தொடர்ந்து, ஓராண்டுக்கு முன்பு ராதிகா பதிவிட்ட ரீல்ஸ் அல்லது மியூசிக் வீடியோ தான் இந்த கொலைக்குக் காரணம் என்று வந்ததிகள் பரவி வருகிறது. ஆனால் காவல்துறை இதனை மறுத்துள்ளது.
எங்களின் விசாரணையில் இதுவரை கொலைக்கும் மியூசிக் வீடியோவுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. இது வெறும் வதந்தி மட்டுமே, என்று சந்தீப் குமார் கூறுகிறார்.
பட மூலாதாரம், Kamesh Srinivasan
வேறு கோணத்தை இந்த விவகாரத்தில் புகுத்த வேண்டாம்
ராதிகாவின் மரணத்தைத் தொடர்ந்து விவாதமாகும் மியூசிக் வீடியோ எடுத்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. இந்த வீடியோவில் இணைந்து பணியாற்றிய இனாம் – உல் ஹக் என்ற நபர் தற்போது துபையில் வசித்து வருகிறார்.
பிபிசியிடம் பேசிய போது, “இந்த பாடலுக்கான படப்பிடிப்பு மொத்தமாக நான்கைந்து மணி நேரம் நடைபெற்றது. இந்த பாடலை நாங்கள் நொய்டாவில் படமாக்கினோம். சூட்டிங்கின் போது அவருடைய அம்மா எங்களுடன் தான் இருந்தார். அவருடைய அப்பாவுக்கும் அந்த பாடல் பிடித்திருந்தது என்று ராதிகா என்னிடம் கூறினார்,” என்று தெரிவித்தார்.
“படபிடிப்பின் போது நிறைய பேர் உடன் இருந்தனர். அவருடனான என்னுடைய பழக்கம் தொழில்முறை சார்ந்தது மட்டுமே. நான் ராதிகாவை முதன்முறையாக பார்த்த போது, என்னுடைய குழுவினரிடம் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்தார் ராதிகா,” என்றும் விளக்குகிறார் இனாம்.
“சூட்டிங்கிற்குப் பிறகும் நாங்கள் பேசினோம். ஆனால் சந்திக்கவில்லை. அந்த பாடலை சமூக வலைதளங்களில் ப்ரோமோட் கூட செய்யவில்லை அவர். சமூக வலைதள கணக்குகளை ‘ஆக்டிவேட்’ செய்வது ‘டீஆக்டிவேட்’ செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் நண்பர்கள் நம்மிடையே இருப்பதைப் போன்று ராதிகாவும் தன்னுடைய சமூக வலைதள கணக்கை மூன்று முறை டெலிட் செய்திருக்கிறார்.
“அந்த பாடல் நான் நினைத்தது போல் வரவில்லை. எனவே அதனை சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கலாம் என்று நினைத்திருந்தேன். நான் அதில் நடித்திருந்தேன். ஆனால் என்னுடைய தோற்றம் அதில் சிறப்பாக இல்லை. இந்த சம்பவம் மட்டும் (ராதிகாவின் கொலை) நடக்கவில்லை என்றால் நான் அந்த வீடியோவை நீக்கியிருப்பேன். இப்போது நீக்கினால் சரியாக இருக்காது.”
“குருகிராம் காவல் நிலையத்தில் இருந்து எந்த தொலைபேசி அழைப்பும் எனக்கு வரவில்லை. அப்படி யாராவது அழைத்தால் நான் அவர்களிடம் அனைத்தையும் கூறுவேன். ஒரு சக மனிதனாக ராதிகாவின் மரண செய்தியைக் கேட்டு நான் கவலை அடைந்துள்ளேன். பிபிசியிடம் பேசிய என்னுடைய கருத்துகள் என்னுடைய உண்மை. இந்த கொலைக்கு வேறொரு கோணத்தை தர வேண்டாம் என்பதே என் வேண்டுகோள். ஒருவரின் மதம் பார்த்து யாரும் ஒன்றாக வேலை செய்வதில்லை,” என்றும் இனாம் பிபிசியிடம் தெரிவித்தார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு