• Sat. Aug 15th, 2026

24×7 Live News

Apdin News

தன்னில் மலர்ந்த வசந்தம் | சிறுகதை | இரா.கலைச்செல்வி

Byadmin

Aug 15, 2026


சுவரிலிருந்த திருமணப் புகைப்படத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சுசித்ரா. திருமணம் முடிந்து ஐந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால், அவளுக்கும் அரவிந்திற்கும் இடையிலான இடைவெளி மட்டும் குறையவே இல்லை. பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் தான். அரவிந்த் கெட்டவன் அல்ல; ஆனால் அவனுக்கான உலகம் வேறு, சுசித்ராவின் உணர்வுகள் வேறு.

இருவரும் ஒரே கூரையின் கீழ் வாழும் இரு துருவங்களாகவே இருந்தனர். திருமண வாழ்க்கையில் எதிர்பார்த்த அன்பும், பகிர்தலும், மனநிறைவும் கிடைக்காத போது சுசித்ரா தொடக்கத்தில் மிகவும் உடைந்தே போனாள்.

“நமக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?” என்ற ஏக்கம் அவளது இரவுகளைக் கண்ணீரால் நிரப்பியது. வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டதோ என்ற விரக்தி அவளைச் சூழ்ந்தது.

ஒரு நாள் மாலை, தனது பாட்டியிடம் தன் மனக்குமுறலைக் கொட்டினாள். பாட்டி புன்னகையுடன் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னார்.

“சுசி, வாழ்க்கைங்கிறது நாம போடுற தையல் மாதிரி. ஒரு நூல் அறுந்துட்டா மொத்த துணியையும் தூக்கி எறிய மாட்டோம், வேற நூலை வச்சு தைக்க ஆரம்பிப்போம். கணவன் மூலம் கிடைக்கிற அன்பு மட்டும்தான் வாழ்க்கைன்னு நினைச்சா, அது கிடைக்காதப்ப உனக்கு உலகம் இருட்டிடும். உனக்கான சந்தோஷத்தை நீ தான் உருவாக்கணும்.

ஒரு வழி அடைபட்டா, வாழ்க்கை அங்கேயே முடிஞ்சு போறதில்ல சுசி. நமக்குன்னு இன்னும் எத்தனையோ வாசல்கள் திறந்தேதான் இருக்கு. உனக்கான வெளிச்சத்தை தேடி நீதான் முயற்சி எடுக்க வேண்டும்.”

யோசித்துப் பார் சுசி.. உன் வாழ்க்கையிலும் வசந்தம் மலரும். உனக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்து. உன் கணவரின் அன்புக்காக ஏங்குவதை முதலில் நிறுத்து.

பாட்டியின் வார்த்தைகள் சுசித்ராவின் மனதிற்குள் பெரிய வெளிச்சத்தைக் பாய்ச்சின.

அடுத்த நாளிலிருந்தே சுசித்ரா தன் வாழ்க்கைப் பாதையை மாற்றத் தொடங்கினாள். தனக்கு மிகவும் பிடித்தமான ஓவியக் கலையில் மீண்டும் கவனத்தைச் செலுத்தினாள். மாலையில் ஆதரவற்ற குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் சமூகச் சேவையில் தன்னை இணைத்துக் கொண்டாள்.

நாட்கள் நகர நகர, அவளுக்குள் ஒரு புதிய தன்னம்பிக்கை உருவானது. அரவிந்தின் கவனத்திற்காகவோ, அன்பிற்காகவோ ஏங்குவதை நிறுத்தினாள். அவனுடன் சண்டையிடாமல், அமைதியான முறையில் தன் எல்லைகளை வகுத்துக் கொண்டாள். அரவிந்தும் அவளது இந்த மாற்றத்தைக் கவனித்தான். அவளைக் கட்டுப்படுத்தாமல், அவளது சுதந்திரத்தை மதிக்கத் தொடங்கினான்.

அன்பான கணவன் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் சுசித்ராவிடம் இப்போது இல்லை. ஏனெனில், தன்னையே அவள் நேசிக்கத் தொடங்கியிருந்தாள். பிறருக்கு உதவும்போதும், தன் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் போதும் கிடைக்கும் மனநிறைவு, திருமண வாழ்க்கையில் கிடைக்காத குறையை முழுமையாகப் போக்கியது.

வாழ்க்கை என்பது மற்றவர்கள் நமக்குத் தருவதில் இல்லை; நாம் நமக்காகவும், பிறருக்காகவும் அதை எப்படி உருவாக்கிக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது என்பதைச் சுசித்ரா உணர்ந்துகொண்டாள்.

புன்னகையோடு சுவரிலிருந்த தனது திருமண புகைப்படத்தைக் கடந்து, தன் புதிய ஓவியத்தை வரையத் தொடங்கினாள் சுசித்ரா .

 

– இரா.கலைச்செல்வி

 

நன்றி : சிறுகதைகள்.காம்

By admin