படக்குறிப்பு, மனன் மிஸ்ரா, இந்திய பார் கவுன்சிலின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் உள்ளார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்திய பார் கவுன்சில், ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட தேசிய சட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி அகாடமி (NALSAR) சட்டப் பல்கலைக் கழகத்தின் 2026ஆம் ஆண்டு மாணவர் பிரிவில் பட்டம் பெறும் மாணவர்களின் வழக்கறிஞர் பதிவு (enrolment) செயல்முறையை நிறுத்தி வைத்தது. பின்னர் அந்த முடிவைத் திரும்பப் பெற்றது.
அதன் பின்னர், மனன் மிஸ்ராவும் பிசிஐ-யும் சமூக ஊடகங்களில் விவாதத்தின் மையமாக மாறினர். இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் இந்திய பார் கவுன்சிலை விமர்சித்து, இது “தனக்கும் மாணவர்களுக்கும் இடையிலான விஷயம்” என்று கூறியதுடன், பிசிஐ-யின் “தேவையற்ற தலையீடு” குறித்துக் கண்டனம் தெரிவித்தார்.
மாணவர் பதிவைத் தடை செய்யும் இந்திய பார் கவுன்சிலின் முடிவைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவும் இன்ஸ்டாகிராமில், “மனன் மிஸ்ராவின் ராஜிநாமாவை கோர வேண்டிய நேரம் வந்துவிட்டதா?” என்று பதிவிட்டார்.
இந்த விவகாரத்தின் முழு பின்னணி என்ன? நால்சார் பல்கலைக் கழக சட்ட மாணவர்களின் பதிவை பிசிஐ முதலில் தடை செய்தது ஏன்? பிறகு ஏன் தனது முடிவை மாற்றிக் கொண்டது? காக்ரோச் ஜனதா கட்சியின் எச்சரிக்கை குறித்து மனன் மிஸ்ரா என்ன கூறினார்?
தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியது என்ன?
உச்ச நீதிமன்றம், நால்சார் சட்டப் பல்கலைக் கழக மாணவர்களின் பதிவை (enrolment) நிறுத்துமாறு இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா பிறப்பித்த உத்தரவு குறித்து வெள்ளிக்கிழமை கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, பின்னர் மனன் மிஸ்ரா அந்த உத்தரவுகளைத் திரும்பப் பெற்றார். இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், மாணவர்களுக்கு அமைதியான முறையில் போராட முழு உரிமை உண்டு என்று கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் பிசிஐ தலையிட்டதை அவர் கேள்வி எழுப்பினார்.
பட மூலாதாரம், ANI and Getty
லைவ் லா வெளியிட்ட தகவலின்படி, தலைமை நீதிபதி, “இந்திய பார் கவுன்சில் தேவையற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை குறித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமெனில், அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. மாணவர்கள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கலாம். இது மாணவர்களுக்கும் எனக்கும் இடையிலான விவகாரம். இதில் தேவையின்றி பிரச்னையை எழுப்ப இந்திய பார் கவுன்சில் யார்? இது முற்றிலும் தேவையற்றது. இந்த விஷயத்துடன் பிசிஐ-க்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
தனது மாணவர் வாழ்க்கையை நினைவுகூர்ந்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், தாமும் மாணவர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறினார். மேலும், மாணவர்கள் தங்களது கருத்துகளை அமைதியான முறையில் வெளிப்படுத்தினால், அதற்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதோடு, “அவர்கள் தவறாக இருந்தாலும்கூட, எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. அவர்களை யார் தடுக்க முடியும்? அவர்கள் சட்டத்தின் வரம்புக்குள், அமைதியான முறையில் தங்களது குரலை எழுப்பும் வரை, அவர்களது கருத்துகளைக் கேட்க வேண்டும். இதில் பார் கவுன்சிலோ அல்லது வேறு எந்த அமைப்போ தலையிடுவது ஏன்?”
இதற்கிடையில், சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் இன்ஸ்டாகிராமில், “இப்போது கவனம் பிசிஐ தலைவரின் மீதும், இதுபோன்ற நபர்கள் எவ்வாறு சட்டபூர்வ அமைப்புகளின் உச்சப் பதவிகளுக்கு வருகிறார்கள் என்பதன் மீதும் இருக்க வேண்டும்” என்று பதிவிட்டார்.
பட மூலாதாரம், Nalasar/FB/GettyImages
மனன் மிஸ்ராவை விமர்சித்த சிஜேபி
இந்திய பார் கவுன்சில், அதன் தலைவரான மனன் மிஸ்ரா தலைமையில், வியாழக்கிழமை நால்சாரின் 2026ஆம் ஆண்டு மாணவர் பிரிவில் பட்டம் பெறும் எந்த மாணவரையும் மாநில பார் கவுன்சில்கள் பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.
பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்தை பிரதான விருந்தினராக அழைத்ததற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்திய பார் கவுன்சிலின் இந்த முடிவுக்கு எதிர்வினையாற்றிய காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜீத் தீப்கே, தனது எக்ஸ் பக்கத்தில், “அனைத்து சட்ட ‘கரப்பான் பூச்சிகளும்’ ஒன்றிணைந்தால் என்ன ஆகும்?” என்று பதிவிட்டார்.
அதன்பின் அபிஜீத் தீப்கே, மனன் மிஸ்ரா பதவி விலக வேண்டுமெனக் கோரி மற்றொரு பதிவையும் வெளியிட்டார். சிஜேபி-யின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸும் தீப்கேவின் பதிவைப் பகிர்ந்தார்.
காக்ரோச் ஜனதா கட்சியியின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவித்த மனன் மிஸ்ரா, “இந்திய பார் கவுன்சிலின் நோக்கம் இந்திய இளைஞர்களின் நலன்களைப் பாதுகாப்பதுதான். அபிஜீத் தீப்கே மற்றும் சௌரவ் தாஸுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், அவர்களுடைய நோக்கமும் எங்களுடைய நோக்கமும் ஒன்றுதான். அதாவது மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே,” என்றார்.
மேலும் மனன் மிஸ்ரா, “தேவைப்பட்டால் சிஜேபி தலைவர்களுடன் நான் பேசுவேன், பேசுவதில் இருந்து நான் ஒருபோதும் விலகுவதில்லை,” என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
சட்ட மாணவர் சேர்க்கை நிறுத்தமும் முடிவு மாற்றமும்
நால்சார் (NALSAR) பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் பிரதான விருந்தினராக அழைக்கப்படுவதற்கு எதிராக சில மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, அடுத்த உத்தரவு வரும் வரை 2026ஆம் ஆண்டு நால்சாரில் பட்டம் பெறும் மாணவர்களை வழக்கறிஞர்களாகப் பதிவு செய்யக் கூடாது என்று நாட்டின் அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
மேலும், பட்டமளிப்பு விழாவில் இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் பங்கேற்பதை எதிர்த்த பிரசாரத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றிய உண்மைத் தகவல் அடங்கிய அறிக்கையை பல்கலைக் கழகத்திடம் பார் கவுன்சில் கோரியது.
கடந்த வாரம், நால்சார் சட்டப் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை நீதிபதி சூர்ய காந்தை அழைக்கும் முன்மொழிவு தொடர்பாக சர்ச்சை வெடித்தது. சில மாணவர்கள், தலைமை நீதிபதியை அழைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பினர்.
வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களை “கரப்பான் பூச்சிகள்” என்று குறிப்பிட்டதாகக் கூறப்படும் நீதிபதி சூர்ய காந்தின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், பின்னர் தலைமை நீதிபதி சூர்ய காந்த், தமது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
மாணவர்களின் இந்தப் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய பார் கவுன்சிலின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மூன்று நாட்களுக்குள் உண்மையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு நால்சார் துணைவேந்தரிடம் கேட்டிருந்தார்.
மேலும், இந்தப் பிரசாரத்தைத் தொடங்கியவர்களை அடையாளம் காண வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பட மூலாதாரம், ANI
இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் மிஸ்ரா என்ன கூறினார்?
பார் கவுன்சில் ஆஃப் இந்தியா தலைவர் மனன் மிஸ்ரா, எக்ஸ் பக்கத்தில் இந்திய பார் கவுன்சில் தனது அறிக்கையைப் பகிர்ந்து, “விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, நால்சார் சட்டப் பல்கலைக் கழகம் தொடர்பாக முன்பு வழங்கப்பட்ட தனது உத்தரவுகளில் இந்திய பார் கவுன்சில் திருத்தம் செய்துள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இப்போது 2026ஆம் ஆண்டில் நால்சாரில் தனது படிப்பை முடிக்கும் அனைத்து மாணவர்களும், தாங்கள் விரும்பும் எந்த மாநில பார் கவுன்சிலில் வேண்டுமானாலும் பதிவு செய்ய விண்ணப்பிக்க முடியும்.”
அதன் பிறகு மனன் மிஸ்ரா மற்றொரு பதிவை வெளியிட்டு, “மூத்த வழக்கறிஞர்கள், மதிப்புக்குரிய வழக்கறிஞர் சமூக உறுப்பினர்கள், சட்ட மாணவர்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட குடிமக்கள் அளித்த பிரதிநிதித்துவங்களையும் பதில்களையும் பரிசீலித்த பிறகு, மேலும் 2026ஆம் ஆண்டுக்கான நால்சார், ஹைதராபாத் மாணவர் பிரிவுக்கு எந்தவிதமான குழப்பம் அல்லது போராட்டத்திலும் பங்கு இல்லை என்பதில் திருப்தியடைந்ததைத் தொடர்ந்து, பார் கவுன்சில் ஆஃப் இந்தியா இந்த நடவடிக்கைகளை முழுமையாக முடித்து வைக்க தீர்மானித்துள்ளது. இதன் பின்னர் மேலதிக நடவடிக்கை எதுவும் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “நால்சார் மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெற வாழ்த்துகிறேன். நமது சட்ட அமைப்புகள் குறித்து நாம் அளவற்ற பெருமை கொள்கிறோம். நீங்கள் வழக்கறிஞர் சங்கத்தில் பதிவு பெறும் நாளில் இருந்து, அந்த அமைப்புகளின் பாதுகாவலர்களாக மாறுகிறீர்கள். உங்கள் கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவியுங்கள். ஆனால் அதை மரியாதையுடனும் நிறுவன மரபுகளைக் கடைப்பிடித்தும் செய்யுங்கள். உயர்ந்த நீதித்துறைப் பொறுப்பு நம் அனைவருக்கும் பெருமைக்குரிய ஒன்று. ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளுக்கு வரவேற்பு உண்டு. ஆனால் அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகளை பொதுவெளியில் கேலிக்குரியதாகச் சித்தரிப்பது பல நேரங்களில் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று பதிவிட்டார்.
பட மூலாதாரம், ANI
யார் இந்த மனன் மிஸ்ரா?
மூத்த வழக்கறிஞர் மனன் குமார் மிஸ்ரா, பிகாரை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், நாட்டில் சட்டத் தொழிலை ஒழுங்குபடுத்தும் உச்ச அமைப்பான பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் (BCI) தலைவருமாவார்.
பிகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மிஸ்ரா, சாப்ராவில் உள்ள ராஜேந்திரா கல்லூரியில் பி.எஸ்.சி. (ஹானர்ஸ்) படித்தார். பின்னர் பாட்னா சட்டக் கல்லூரியில் எல்.எல்.பி. பட்டம் பெற்றார்.
அவர் தனது சட்டப் பணியை கோபால்கஞ்ச் சிவில் நீதிமன்றத்தில் தொடங்கி, 1982ஆம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக உயர்ந்தார்.
சட்டத் துறையுடன் சேர்த்து அரசியலிலும் அவர் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். 2010ஆம் ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். பின்னர் பாஜகவில் சேர்ந்தார்.
கடந்த 2024 ஆகஸ்டில், பாஜக அவரை பிகாரில் இருந்து மாநிலங்களவைக்கு வேட்பாளராக நியமித்தது. அதைத் தொடர்ந்து அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மிஸ்ரா பல ஆண்டுகளாக இந்திய பார் கவுன்சிலை வழிநடத்தி வருகிறார். 2025ஆம் ஆண்டில், அவர் தொடர்ந்து ஏழாவது முறையாக அதன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்தார்.
கடந்த 2024 செப்டம்பரில், அவர் சட்டம் மற்றும் நீதி தொடர்பான பணியாளர் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மேலும், 2024 டிசம்பர் முதல் 2025 நவம்பர் வரை நாடாளுமன்ற விதிமுறைகள் குழுவிலும் உறுப்பினராகப் பணியாற்றினார்.