சென்னை: தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை உயர வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தொடர்ந்து வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 98.6-100.4 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82.4-84.2 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல், மத்திய மேற்கு, மத்தியகிழக்கு, வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்சமாக 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.