• Tue. Jul 29th, 2025

24×7 Live News

Apdin News

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு | chance for rain in tamil nadu for 6 days weather forecast

Byadmin

Jul 29, 2025


சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஆக.3-ம் தேதி வரை 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 29) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக் கூடும். 30, 31 தேதிகளில் ஓரிரு இடங்களிலும், ஆக. 1, 2, 3 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார், நீலகிரி மாவட்டம் நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, கோவை மாவட்டம் சோலையாரில் 3 செமீ, வால்பாறை, சின்கோனா, ஆனைமலை, தொண்டாமுத்தூர், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர், தென்காசி மாவட்டம் குண்டாறு அணை. நீலகிரி மாவட்டம் கிளன்மார்கன். செருமுள்ளி, மேல் பவானி, பார்வூட் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



By admin