தூத்துக்குடி: “தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தமிழகத்துக்கு கிடைத்த நிதியை காட்டிலும், மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியுள்ளது” என்று தூத்துக்குடியில் பிரதமர் மோடி பேசினார்.
தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய மேம்படுத்தப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கலும் நாட்டினார். பிரிட்டன் மற்றும் மாலத்தீவு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேரடியாக தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, இந்த திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். ‘வணக்கம்’ என தமிழில் சொல்லி தனது உரையை தொடங்கினார்.
“கார்கில் வெற்றி தினத்தில் நமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நான்கு நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பகவான் ஸ்ரீ ராமரின் புனித பூமியான ராமேஸ்வர மண்ணில் கால் பதித்ததை எண்ணி மகிழ்கிறேன். இந்த பயணத்தின் போது இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே வரலாற்று சிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதிய இந்தியாவின் சுயசார்பு மற்றும் தன்னம்பிக்கை மூலம் வளர்ந்த பாரதம், வளர்ந்த தமிழகத்தை கட்டமைத்து வருகிறோம். பகவான் ராமர் மற்றும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரின் ஆசியுடன் தூத்துக்குடியில் புதிய வளர்ச்சியின் அத்தியாயம் இன்று எழுதப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் பல நூறு கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தும், தேசத்தின் முன்னேற்றம் சார்ந்து பல்வேறு திட்டங்களை அர்பணித்தும் வைத்தேன். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வெளிப்புற துறைமுக கொள்கலன் முனைய பணிக்கான அடிக்கல் நாட்டி இருந்தேன். இன்று ரூ.4,800 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளேன்.
உள்கட்டமைப்புதான் ஒரு தேசத்தின் வளர்ச்சியில் முக்கியமானது. கடந்த 2014 முதல் இந்த 11 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்து நாங்கள் முன்னெடுத்துள்ள திட்டங்கள் எங்களது கவனம் மற்றும் அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது. தூத்துக்குடி மற்றும் தமிழகத்தை பல்வேறு திட்டங்கள் மூலம் இணைப்பின் தலைமையகமாக மாற்றியுள்ளோம். இதன் மூலம் வளர்ச்சி சார்ந்த புதிய வாய்ப்புகள் உருவாகும்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்த மண் இது. அவருக்கு எந்த அளவுக்கு தூத்துக்குடி உடன் ஆழமான தொடர்பு உள்ளதோ அதே தொடர்பை எனது மக்களவை தொகுதியான காசியிலும் கொண்டுள்ளார். காசி தமிழ் சங்கம் மாதிரியான முயற்சிகள் மூலம் கலாச்சார ரீதியான பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த அரசு செயல்படுகிறது.
இன்று வளர்ந்த தமிழகம், வளர்ந்த பாரதம் நோக்கிய முயற்சியில் முன்னேறிச் சென்று கொண்டுள்ளோம். இங்கிலாந்து உடனான வணிக ரீதியான ஒப்பந்தம் தேசத்தை வளர்ச்சி பெற செய்யும். இது தேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும். பொருளாதார ரீதியாக உலகின் மூன்றாவது பெரிய நாடு என்று வளர்ச்சியை இது வேகப்படுத்தும் என நம்புகிறேன்.
இங்கிலாந்து உடனான வணிக ஒப்பந்தம் மூலம் தமிழகத்தின் இளைஞர்கள், சிறு தொழில் புரிவோர், எம்எஸ்எம்இ பிரிவினர் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பலன் அடைவார்கள். மேக் இன் இந்தியா முயற்சியை இந்திய அரசு தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. அதற்கான சான்றுதான் இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை. தீவிரவாதிகளை ஒடுக்குவதில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டன. அதை நீங்கள் அனைவரும் பார்த்து இருப்பீர்கள்.
இன்று தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம், இரண்டு பிரதான சாலை கட்டமைப்பு திட்டம், ரயில் திட்டம் மாதிரியானவை இங்கு வசிக்கும் மக்களுக்கு வணிக ரீதியாகவும், வேலைவாய்ப்பு சார்ந்தும் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். தேசத்தின் தொழில் வளர்ச்சியில் ரயில் கட்டமைப்புகள் முக்கியம் என எங்களது அரசு கருதுகிறது. அதன் காரணமாக பல்வேறு ரயில் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறோம்.
எங்கள் அரசின் ரயில் கட்டமைப்பு சார்ந்த திட்டங்களில் தமிழகம் முக்கியமானதாக உள்ளது. தேசத்தின் முதல் செங்குத்து ரயில் தூக்கு பாலம் தமிழகத்தின் பாம்பனில் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜம்மு காஷ்மீரில் செனாப் பாலம் திறக்கப்பட்டது. இது நமது தேசத்தின் பொறியியல் அற்புதம் ஆகும். ஜம்மு முதல் ஸ்ரீநகர் வரையிலான பகுதியை இணைக்கும் முதல் ரயில் பாலமாக செனாப் பாலம் உள்ளது.
அடல் சேது பாலம், சோன்மார்க் சுரங்கப்பாதை என பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை என்டிஏ அரசு கட்டமைத்துள்ளது. அதே போல தென் தமிழகத்தின் கோடி கணக்கான மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி உள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் சார்ந்த முக்கிய திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினேன். சூரிய மின்சக்தி திட்டம் தமிழகத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு பில்கேட்ஸுக்கு தூத்துக்குடி முத்துக்களை பரிசளித்தேன். இங்கு காணப்படும் முத்துக்கள் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழகத்தின் வளர்ச்சி, மேம்பட்ட தமிழகம் என்ற கனவுக்கு உறுதிபூண்டுள்ளோம். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரூ. 3 லட்சம் கோடியை மத்திய அரசு அளித்திருக்கிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தமிழகத்துக்கு கிடைத்த நிதியை காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் நிதியை கடந்த 10 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வழங்கியுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. முதன்முறையாக கரையோர மீன்பிடி துறைமுகங்களுக்கு இத்தனை கரிசனத்தையும் அக்கறையையும் யாரும் வெளிப்படுத்தவில்லை. உங்களிடம் கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தை காண்கிறேன். உற்சாகத்தின் வெளிப்பாடாக மொபல்போன் லைட்டை எரியவிடுங்கள். வணக்கம்” என்று பிரதமர் மோடி பேசினார்.
Tamil Nadu is witnessing unprecedented development. This growth reflects the Centre’s resolve to make the state a driving force of Viksit Bharat. Watch from Thoothukudi. https://t.co/BMsDFFF25e
— Narendra Modi (@narendramodi) July 26, 2025