• Mon. Jul 28th, 2025

24×7 Live News

Apdin News

தமிழர்கள் புலம்பெயர்வதால் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்ற ஆபத்து | சந்திரகுமார் எச்சரிக்கை

Byadmin

Jul 28, 2025


தமிழர்கள் புலம்  பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது. இனத்தின் அளவு குறைந்து செல்கிறது. நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது ஆபத்தானது வடக்கு கிழக்கில் நிலங்கள் வெறுமையாக உள்ளமை சிங்கள  குடியேற்றங்களை உள் இழுப்பதற்கு வழி கோலுகிறது என முன்னாள் எம்பி மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (26) யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவரங்கில்  1983 கறுப்பு ஜூலையில் வெளிக்கடையில் சிறையில்  படுகொலைப்பட்டவர்களின்  நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

1983 யூலை தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பு நாள். அதற்கும் முன்னரும் இந்த நாட்டில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்பட்டு  ஒடுக்கப்பட வேண்டும் என சிந்தனையில்தான் ஆட்சியில் இருந்தார்கள்  ஆனால் அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர்தான் ஜே ஆர்.ஜெயவர்தனாதான்.

அண்மையில் புகையிரதத்தில் ஒரு குழு சகோதாரத்துவ கோசத்தடன் வந்தனர். இதனை பார்த்த எனக்கு இப்பவும் நினைவில் இருக்கிறது. அன்று புகையிரதத்தில் வந்த சிறில் மத்யூவின் காடையர்கள் குழு யாழ் நகரை அழித்தது.

அன்று ஜே ஆர் சொன்னார், தமிழர்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொண்டவர்கள் ஜேவிபியினர்தான் என்று. ஆகவே நான் நினைக்கின்றேன். அன்று இருந்த அதே நிலைப்பாட்டில்தான் இன்றைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.

1983 இற்கு பின்னர்தான் தமிழ் இளைஞர்கள் மத்தியில் சிங்கள பேரினவாதத்திற்கு எதிராகவும், அதன் இராணுவத்திற்கு எதிராகவும் போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அதிகரித்தது. வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அங்குதான் அவர்களுக்கு பாதுகாப்பு என உணர்த்தியதும்1983 தான்.

வடக்கு கிழக்குக்கு வெளியே இருந்த தமிழ் மக்கள் குறிப்பாக எதுவுமே அறியாத மலையக மக்கள் சிங்கள வன்செயல்களால் பாதிக்கப்பட்டு வடக்கு கிழக்கு நோக்கி வந்தார்கள். அங்குதான் தமிழர்களுக்கு பாதுகாப்பு என கருத்தினார்கள்.

இந்த நிலைமைகள் தான்  வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில்  ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்று சேர்ந்த பல இயக்கங்களாக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் துரதிஸ்டவசம் இந்த போராட்டம் 2009 இல் மௌனித்துவிட்டது.

ஜனநாயக் போராட்டம் பின்னர் 30 வருட ஆயுத போராட்டம் அதற்கு பின்னராக இந்த15 வருட காலத்தில் நாம் பல அனுபவங்களை சந்தித்திருக்கின்றோம்.ஆனால் இந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டு அதிலிருந்து முன்னேற போகின்றோமாக என்றால் அது சந்தேகத்திற்குரியதே. தமிழ் அரசியலின் பலவீனம் இதுதான்.

இனத்தின் நலன் கருத்தி நாம் ஒரணியில் இணைவது கிடையாது அப்படி யாரேனும் இணைந்தால் அதனை எப்படி சீர்குலைக்கலாம் என சிலர் கங்கனம் கட்டிக்கொண்டு நிற்பார்கள். கடந்த கால போராட்ட வரலாறுகள் தெரியாத பலர்தான்  இன்று புதிய வரலாறுகளை  எழுதுகின்றார்கள்.

சிலர் கையில் கமரா இருந்தால் போதும்  எதையும் எழுதலாம் என்ற நிலைமை தற்போது  உருவாகியுள்ளது. யாரும் யாரையும்  துரோகி என முத்திரை குத்தி சமூக வலைத்தளங்களில்  பரப்புரை செய்கின்றார்கள் அதனை நம்பும் ஒரு பகுதியினரும் எங்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

தமிழ் தரப்பின் பலவீனத்தால் தென்னிலங்கையில் ஆட்சிக்கு வருகின்றவர்கள் மிகவும் உற்சாகமாக இருக்கின்றார்கள். நாங்கள் ஒரு போதும் ஒத்த கருத்துடன் நிற்கபோவதில்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இதனையே மூத்த ஊடகவியலாளர் தனபாலசிங்கம் அவர்களும் குறிப்பிட்டிருந்தார்.  ஒற்றுமையை குலைப்பவர்கள் எங்களுக்குள்தான் இருக்கின்றார்கள். ஆனால் இவற்றையெல்லாம் கடந்து  தமிழ் மக்களின் நலன்கருத்தி தமிழ் மக்கள் கௌரவமாகவும், நிம்மதியாகவும்  சுயாதீனமாகவும் வாழக்கூடிய  சூழலை நோக்கி செல்ல வேண்டும்.

இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய எங்கள் எல்லோருக்கும் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் சுயாட்சி அமைய  வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது ஆனால் இனி அதற்கான சூழல் இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும் ஆயுத போராட்டத்தில்  ஒரு  சிறு  கீறிலை கூட சந்திக்காதவர்கள்  இன்று மற்றவர்களை  துரோகி என்றார்கள். ஏமாற்று அரசியலை செய்கின்றார்கள். இது தமிழ் மக்களுக்கு எந்தவித்திலும் விமோசனத்தை ஏற்படுத்தி தரப்போவதில்லை.

தமிழர்கள் புலம்  பெயர்ந்து செல்லும் நிலைமை அதிகரித்து செல்கிறது. இனத்தின் அளவு குறைந்து செல்கிறது. நிலம் வெறுமையாக இருப்பது அதிகரித்து செல்கிறது. இது ஆபத்தானது வடக்கு கிழக்கில் நிலங்கள் வெறுமையாக உள்ளமை சிங்கள  குடியேற்றங்களை உள் இழுப்பதற்கு வழி கோலுகிறது.  தமிழ் தேசியத்தை பாதுகாப்பதாக கூறிக்கொள்ளும் தரப்பினர்கள் உண்மையாகவே அதற்கு எதிராகவே செயற்பட்டிக்கொண்டிருக்கின்றனர்.

எனவே நாம்  ஆதாவது  தமிழர் தரப்பில் மாற்றம் வேண்டும். நாம் யாதார்த்திற்கு ஏற்ப எங்களது செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே  இன விடுதலைக்காக தங்களை இழந்த எங்களது மூத்த தலைவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான கடமையாகும் எனத் தெரிவித்தார்.

The post தமிழர்கள் புலம்பெயர்வதால் வடக்கு கிழக்கில் சிங்களக் குடியேற்ற ஆபத்து | சந்திரகுமார் எச்சரிக்கை appeared first on Vanakkam London.

By admin