• Fri. Jul 11th, 2025

24×7 Live News

Apdin News

தமிழில் பேசுவதால் எள்ளி எதிர்க்கட்சியினர் நகையாடுகின்றனர் |  கடற்தொழில் அமைச்சர் விசனம்

Byadmin

Jul 10, 2025


தமிழ் மொழியில் பேசுவதால் எள்ளி நகையாடி எதிர்க்கட்சியினர் தமிழை கொச்சைப்படுத்துவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கூறியதால் சபையில் ஆளும், எதிர்க்கட்சியினர் இடையே கடும் சர்ச்சை ஏற்பட்டது.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, நாட்டில் 2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் மீன அறுவடை தொடர்பிலும், இக்காலப் பகுதியில் மீன் ஏற்றுமதி மூலம் ஈட்டிய வருமானம் தொடர்பிலும் எழுப்பிய கேள்விகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தமிழ் மொழியில் நீண்ட பதிலை வழங்கினார்.

இவ்வேளையில் இடையில் எழுந்த ஹெக்டர் அப்புஹாமி, அதனை நீங்கள் சபைக்கு ஆற்றுப்படுத்துங்கள். நாங்கள் கேட்காத விடயங்களையும் நீங்கள் கூறிக்கொண்டு போகின்றீர்கள். நீங்கள் கூறியதில் இருந்து இடைக் கேள்விகளையும் கேட்க முடியாது உள்ளது என்றார். இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஹெக்டர் அப்புஹாமி கூறியதை கேட்டு சிரித்தனர்.

இதனை தொடர்ந்து எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அப்படியென்றால் தனி வாக்கியத்தில் பதிலளிக்குமாறு நாங்கள் அமைச்சர்களுக்கு கூறுகின்றோம். அமைச்சர் தாய் மொழியிலேயே பதிலளித்தார். அதில் ஏதும் சிக்கல் உள்ளனவா என்றும் தெரியவில்லை என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்த ஹெக்டர் ஹப்புஹாமி, மொழி தொடர்பான பிரச்சினையை கூறவில்லை என்று தெரிவித்து, தனது இடைக் கேள்விகளை கேட்டார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் சந்திரசேகரன் பதிலளிக்கையில், எனது தாய்மொழி தமிழே. கேள்வியொன்று கேட்கப்படும் போது பதிலை விளக்கமாக வழங்க வேண்டும். அதனை எனது தாய் மொழியிலேயே கூறினேன். ஆனால் எதிர்க்கட்சியினர் தமிழை பார்த்து எள்ளி நகையாடுபவர்களாகவும், தமிழை கொச்சைப்படுத்துபவர்களாகவும், தமிழுக்கு இழுக்கு ஏற்படுத்துபவர்களாகவும் மாறியுள்ளனர் என்று கூறி எதிர்க்கட்சி உறுப்பினரின் கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்தார்.

இந்நிலையில் அமைச்சர் கூறிய கருத்துக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு வெளியிட்டதால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இவ்வேளையில் மீண்டும் எழுந்த ஹெக்டர் ஹப்புகாமி கூறுகையில்,

இங்கே இனவாத கருத்து கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் எனது சிறப்புரிமைக்கு பாதிப்பாகும். நாங்கள் தமிழ் பேசுபவர்களுடனேயே இருக்கின்றோம். இங்கே தமிழ் மொழியில் அவர் பேசியது தொடர்பில் யாராவது எதாவது கூறினோமா? அவ்வாறு எதுவும் கூறவில்லை. தயவு செய்து இதனை திருத்திக்கொள்ள வேண்டும் என்று கோருகின்றோம். நான் உரைபெயர்ப்பை கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றேன். இதனால் தமிழில் அவர் பேசியது தொடர்பில் எதுவும் கூறவில்லை என்றார்.

இதன்போது ஆளும் கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில்,

உங்களின் செயற்பாடுகளில் அதனையே வெளிப்படுத்தினீர்கள். உங்களின் உடல் செயற்பாடுகள் அதனை காட்டியது. இதனாலேயே அமைச்சர் அவ்வாறு கூறினார் என்றார்.

இதேவேளை எதிர்க்கட்சி பிரதம கொறடாவான கயந்த கருணாதிலக்க கூறுகையில், உடல் செயற்பாட்டை பார்த்துவிட்டு, இவ்வாறு தெரிவிப்பது நல்லதில்லை.இவ்வாறான கருத்தை வெளியிடுவது அநீதியாகும். தயவு செய்து அதனை திருத்திக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அவருக்கு அநீதியாகிவிடும் என்றார்.

இதனை தொடர்ந்து எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, எங்களுக்கு தெரிந்ததையே கூறினோம். உங்களின் செயற்பாடுகளால் நாங்கள் புரிந்துகொண்டதையே கூறினோம் என்றார்.

இவ்வேளையில் மீண்டும் எழுந்த ஹெக்டர் ஹப்புகாமி கூறுகையில்,

சபாநாயகர் நீங்கள் சுயாதீனமானவர். நாங்கள் நேரத்தை சேமிக்கவே அமைச்சரிடம் குறித்த பதில்களை சபையில் முன்வைக்குமாறு கூறினேன். அதனை தவறான நோக்கத்தில் பார்க்கக்கூடாது. நாங்கள் தமிழ் மக்களுடனேயே இருக்கின்றோம். ஒருநாளும் நாங்கள் அவ்வாறு செயற்படுவதில்லை. இதனை திருத்திக்கொள்ளுமாறு கோரிக்கை விடுகின்றோம் என்றார்.

இதனை தொடர்ந்து பதிலளித்த அமைச்சர் சந்திரசேகரன், நான் இந்த பாராளுமன்றத்தில் பல வருடங்கள் இருந்துள்ளேன். ஒவ்வொருவரையும் பார்க்கும் போதும், அவர்களின் சிரிப்பு மற்றும் செயற்பாடுகளை பார்க்கும் போது அவர்கள் எதற்காக நக்கலடிக்கின்றனர் என்று தெரியாத பாப்பாக்கள் அல்ல நாங்கள். சிங்களத்தில் கூறியிருந்தாலும் இவ்வாறே பதில்களை வழங்கியிருப்பேன். நான் தமிழில் பதில்களை வழங்கினேன். தமிழில் கூறியதை பார்த்து கொச்சைப்படுத்தும் எதிர்க்கட்சி தொடர்பில் வெட்கப்படுகின்றேன் என்றார்.

எனினும் தொடர்ந்தும்  எழுந்த ஹெக்டர் ஹப்புகாமி, நாங்கள் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை. நீங்கள் இவ்வாறாக கூற வேண்டாம். இது இனவாத செயற்பாடாகும். இதனால் அந்த கருத்தை திருத்திக்கொள்ளுமாறு கோருகின்றேன் என்று மீண்டும் கூறி, தனது இரண்டாவது இடைக் கேள்விக்கான சந்தர்ப்பத்தை திலிப் வெத ஆராச்சிக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர், இதனை தொடர்ந்தும் விவாத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவித்து சபை நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றார்.

By admin