படக்குறிப்பு, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.கட்டுரை தகவல்
எழுதியவர், சாரதா வி
பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டு அரசுப் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் இருக்கைகள் ‘ப’ வடிவத்தில் இருக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. ‘கடைசி பெஞ்ச்’ மாணவர்கள் என்ற கருத்து இதன் மூலம் உடைபடும் என்று அரசு நம்புகிறது.
ப வடிவ இருக்கைகள் ஆசிரியர் – மாணவர் இடையேயான உரையாடலை அதிகரிக்கும் என்றும், பொதுவாக பேச தயங்கும் மாணவர்களும் இந்த வடிவில் இருக்கைகள் அமைக்கப்படும் போது வகுப்பறையில் அதிகம் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை கூறுகிறது.
ஆனால் இருக்கைகள் ‘ப’ வடிவில் இருந்தால் மட்டும் போதுமா? என்ற விமர்சனங்கள் பல தரப்பிலிருந்து எழுப்பப்படுகின்றன. ஆரோக்கியமான வகுப்பறை சூழலுக்கு ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போதுமான கட்டுமானங்கள் இருப்பது ஆகியவற்றை செய்யாமல் இருக்கைகளை மாற்றியமைப்பது எப்படி உதவும் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
‘ப’ வடிவ இருக்கை முறை அறிமுகம்
சமீபத்தில் வெளியான ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற மலையாள திரைப்படத்தில் ப வடிவ இருக்கை முறையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த திரைப்படம் வெளியானதை அடுத்து, கேரளாவில் சில பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் இந்த முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அமரும் பாரம்பரிய இருக்கை முறையில், மாணவர்- ஆசிரியர் உரையாடல் குறைவாக இருக்கலாம். ப வடிவ இருக்கை முறையில், மாணவர்களின் ஈடுபாடு அதிகரிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இது சோதனை முயற்சியே என்றும், ஒரு வாரம் கழித்து முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று அவர்களின் கருத்துகள் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.
அரசின் இந்த உத்தரவை பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ப வடிவ இருக்கை முறையில் மாணவர்களின் மனநிலை மேம்படும் உள்ளிட்ட சாதக அம்சங்கள் இருப்பது போலவே குறைகளும் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் என்ற வீதத்தில் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த உத்தரவை விமர்சித்து பேசியுள்ள பாஜக மூத்தத் தலைவரும் தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பள்ளிகளில் முதலில் அடிப்படை வசதிகள் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற பள்ளிகளில் கழிவறைகள் இல்லை, குடி நீர் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உலகில் ப வடிவம், வட்ட வடிவம், குழுக்களாக அமர்வது என பல்வேறு வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன.
‘ப’ வடிவ இருக்கை முறை : சாதகம் vs பாதகம்
ப வடிவ இருக்கை முறை வகுப்பறையில் சில சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
ப வடிவ முறையில் ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரையும், கரும்பலகையையும் பிற மாணவர்களையும் பார்க்க முடியும்.
எல்லா மாணவர்களையும் பார்த்து ஆசிரியரால் பேச முடியும்.
பிற மாணவர்கள் பேசுவதை கேட்கவும், அவர்களுடன் கலந்துரையாடவும் இந்த இருக்கை முறை உதவும்.
ப வடிவில் மாணவர்கள் அமரும் போது, ஆசிரியர் வகுப்பறைக்குள் நடமாட முடியும், அனைத்து மாணவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க முடியும்.
மாணவர்கள் வகுப்புகளில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க உதவும்.
பேச தயங்கும் மாணவர்கள் இந்த இருக்கை முறையில் கலந்துரையாடலில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உண்டு
ப வடிவ முறையின் இந்த சாதகமான அம்சங்களை யாரும் மறுக்காத நிலையில், இதற்கான பாதகங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன.
கல்வியாளர் பாலாஜி சம்பத், ” மாணவர்கள் ப வடிவ முறையில் அமரும் போது, அனைத்து மாணவர்களாலும் கரும்பலகையை நேராக பார்க்க முடியாது. சில மாணவர்கள் இடது அல்லது வலது புறம் தங்கள் கழுத்தை திருப்பியே பார்க்க வேண்டியிருக்கும். பல மணி நேரம் இப்படி அமர்வதால் மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்.” என்கிறார்.
அதிக மாணவர்கள் இருக்கும் பட்சத்தில், வகுப்பறையில் அனைவரையும் ப வடிவ முறையில் அமர வைப்பது சிரமமாக இருக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ப வடிவ இருக்கை முறை ‘கடைசி பெஞ்ச்’ மாணவர்கள் என்ற கருத்தை நீக்கிட உதவும் என்று அரசு கூறுகிறது.
சர்வதேச அளவில் என்னென்ன இருக்கை முறைகள் உள்ளன?
உலகில் பல்வேறு விதமான வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன. அவை அந்தந்த கற்றல் முறையின் வெளிப்பாடாக உள்ளன.
ப வடிவம்/ யூ என்ற ஆங்கில எழுத்து (U) வடிவ இருக்கை முறையில் மாணவர்களுடன் ஆசிரியர் உரையாடல் நிகழ்த்தவும், ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் கவனம் செலுத்தவும் உதவும்.
சிறுசிறு குழுக்களாக மாணவர்கள் ஒரு மேசைக்கு அருகில் அமரும் முறையில் மாணவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொடுத்து கற்றுக் கொள்ள உதவும்.
வட்ட வடிவிலான இருக்கை முறை குழு விவாதங்கள் நடத்தவும், அனைத்து மாணவர்களுக்கும் சமமாக பங்கேற்க வாய்ப்பு வழங்கவும் உதவும்.
இரு மாணவர் அமரும் முறை ஆசிரியர் மேசைகளுக்கு இடையே சென்று அனைத்து மாணவர்களையும் கவனிக்க உதவும்.
தரமான கல்வி முறையை கொண்டதாக கூறப்படும் பின்லாந்து நாட்டில், நவீன பள்ளிகள் சிலவற்றில் வகுப்பறைகளில் பாரம்பரிய மேசை, நாற்காலிகளுக்கு பதிலாக நகர்த்துவதற்கு எளிதான மென்மையான நாற்காலிகள், சோஃபாக்கள், நவீன மேசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது இருக்கை முறையை தேவைப்படும் போது மாற்றியமைத்துக் கொண்டே இருக்கலாம். அங்கே மாணவர்கள் குழுக்களாக அமரும் முறையும் உள்ளது. ஆசிரியர்களுக்கும் வகுப்பறையில் நிரந்தரமான இடம் கிடையாது. மாணவர்கள் தாங்கள் என்ன செய்யலாம் என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இந்த வகுப்பறை வழங்கும்.
பட மூலாதாரம், Getty Images
சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் ‘யாருடைய வகுப்பறை’ என்ற தனது நூலில், பின்லாந்து வகுப்பறைகளில் வட்ட வடிவ இருக்கை முறை எப்படி கற்றலை மேம்படுத்தவும், வகுப்பறையை ஆசிரியர் மையப்படுத்தியதாக இல்லாமல் மாணவர்களை மையப்படுத்தியதாக இருக்க உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர் இந்த உத்தரவை வரவேற்காமல் இருக்க முடியாது என்றார். ” கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு மாணவர்களிடம் ‘என்னை கவனி’ என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஏன் கடைசியில் அமர வைத்துள்ளீர்கள், முதல் வரிசையில் அமர வையுங்கள் என்று ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்” என்று கூறினார்.
எனினும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருந்தால் மட்டுமே வகுப்பறையில் இந்த இருக்கை முறை சாத்தியம் என்றும் அவர், “அனைத்து வகுப்பறைகளிலும் இந்த விகிதம் இல்லை, பல இடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அது போன்ற வகுப்பறைகளில் இருக்கை முறையை எப்படி அமைய வேண்டும் என்பதை ஆசிரியரின் சுதந்திரத்துக்கே விட்டுவிட வேண்டும்.” என்கிறார்.
பட மூலாதாரம், ஆயிஷா இரா. நடராசன்
படக்குறிப்பு, சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன், சில வரம்புகள் இருந்தாலும் அரசின் இந்த உத்தரவு வகுப்பறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்கிறார்.
பட மூலாதாரம், பாலாஜி சம்பத்
படக்குறிப்பு, கல்வியாளர் பாலாஜி சம்பத்
வருடாந்திர கல்வி நிலை (ASER) 2024 -ன் அறிக்கையின் படி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் ஐந்தாம் வகுப்பில் 37% பேருக்கே வாசிக்க தெரிந்திருந்தது. (தனியார் பள்ளிகளில் 32.3% மாணவர்களுக்கு வாசிக்க தெரிந்திருந்தது). அதே போன்று அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 20.2% பேருக்கே வகுத்தல் கணக்குகளை செய்ய தெரிந்திருந்தது.
இதுபோன்ற அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்த அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பாலாஜி சம்பத் கூறுகிறார். “அதை செய்வது சிரமமான காரியம் அல்ல. கழித்தலோ, வகுத்தலோ தெரியாத மாணவர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொல்லி தர வேண்டும். இது போன்ற சிறுசிறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் தான் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒரே ஒரு விசயம் மொத்தமாக கல்வி முறையை மாற்றியமைத்து விடும் என்று நம்புவது தவறு” என்கிறார் அவர்.
கடந்த 21 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் வேலூர் மாவட்டத்தை ஷண்முகப்பிரியா ப வடிவ வகுப்பறையை அரசு வலியுறுத்தும் முன்பே தங்களது பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாக கூறுகிறார்.
“மாணவர்களின் கவனம் அதிகரிக்கும் என்பதால் ப வடிவ இருக்கை முறையை ஏற்கெனவே வகுப்பறைகளில் அமல்படுத்தியுள்ளோம். இந்த வடிவில் அமரும் போது, ஆசிரியரால் அனைத்து மாணவர்களையும் கவனிக்க முடியும். மெதுவாக கற்கும் மாணவர்களுக்கும் முழு கவனம் கிடைக்கும். மாணவர்கள் வகுப்பை கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக் கொள்வது குறைந்தது” என்கிறார். எனினும் வகுப்பறையின் அளவை பொருத்தே இதை அமல்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்.
கடந்த ஆண்டு ஒரு வகுப்பறையில் 23 மாணவர்கள் இருந்தபோது எளிதாக ப வடிவ முறையை அமல்படுத்த முடிந்தது என்றும் இந்த ஆண்டு 38 மாணவர்கள் இருப்பதால் சிரமமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படலாம் என்ற விமர்சனம் குறித்து கேட்ட போது, மாணவர்களின் அமரும் இடங்களை ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்றியமைக்கலாம் என்கிறார் எழுத்தாளர் ஆயிஷா நடராசன். “ஒவ்வொரு வகுப்பின் போதும் மாணவர்கள் இடம் மாறி அமர்வது அவர்களுக்கு புத்துணர்வு தரும். இதனை நேர விரயமாக ஆசிரியர்கள் கருத கூடாது” என்பது அவரது கருத்து.