வலுவான கூட்டணியை அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொண்டே இருந்தாலும் பாஜக – அதிமுக கூட்டணியை பொருந்தாத கூட்டணியாகவே பலரும் விமர்சிக்கிறார்கள். இதுகுறித்து அதிமுக-வுக்குள்ளும் இருவேறு கருத்துகள் இருக்கவே செய்கின்றன. கூடவே, பாஜக-வின் ‘கூட்டணி ஆட்சி’ கோஷமும் அதிமுக-வினரை சீண்டிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜாவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.
பாஜக-வுடன் எந்தக் காலத்திலும் இனி கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் அதனுடன் இணைந்துள்ளீர்களே..?
கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் செய்யப்படுகின்ற ஒரு தற்காலிக ஏற்பாடு. பெரும்பாலும் வெற்றியை அடிப்படையாகக் கொண்டுதான் கூட்டணிகள் உருவாகும். கொள்கையின் அடிப்படையில் இல்லை. இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் பாஜக-வுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. அதுபோல பாஜக உடன் நாங்கள் கூட்டணி அமைத்ததும் இயல்பான ஒன்றுதான்.
இது அதிமுக-வுக்கு சாதகமான கூட்டணி என நம்புகிறீர்களா?
ஆம். கடந்த மக்களவைத் தேர்தல் முடிவின் கணக்குகளை வைத்து ஆய்வு செய்தபோது 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணி பலன் தரும் என்று நம்புகிறேன்.
பாஜக கூட்டணி சேர்ந்ததால் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுக-வுக்கு கிடைக்குமா?
பெரும்பாலும் கிடைக்காது. ஆனால், சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக கட்சி ஓட்டுகள் கண்டிப்பாக எங்களுக்குக் கிடைக்கும்.
இபிஎஸ் தனது சுயநலத்திற்காக அதிமுக-வை பாஜக-விடம் அடமானம் வைத்துவிட்டதாக வரும் விமர்சனங்களை கவனிக்கிறீர்களா?
இந்த விமர்சனத்தில் உண்மை இல்லை. அதிமுக-வை யாரும் யாரிடத்திலும் அடமானம் வைக்க முடியாது. இன்றுவரை அதிமுக-வின் காப்பாளராகவே இபிஎஸ் விளங்கி வருகிறார்.
என்டிஏ கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொன்னபோது அமைதியாக இருந்துவிட்டு இப்போது, “தனித்தே ஆட்சி அமைப்போம்” என இபிஎஸ் சொல்வது சரியா?
கூட்டணி ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் விரும்பியது இல்லை. பெரும்பான்மை இடங்களை அதிமுக பிடிக்கப்போகிறது. எனவே, கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.
முதலமைச்சராக அதிமுக-வைச் சேர்ந்த ஒருவர் வருவார் என அமித் ஷா சொல்லி இருப்பதை பார்த்தால் பாஜக-வுக்கு வேறு திட்டம் இருக்கும் போல் தெரிகிறதே?
முதலமைச்சர் தேர்வைப் பொறுத்தவரை பாஜக-வின் திட்டம் ஒன்றும் பலிக்காது. இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தித்தான் தேர்தலில் போட்டியிடுகிறோம். எனவே, இபிஎஸ் தான் முதலமைச்சராக வருவார்.
ஒருவேளை, கூட்டணி ஆட்சிக்கு இபிஎஸ் முரண்டு பிடித்தால் செங்கோட்டையன், வேலுமணி போன்றவர்களை வைத்து பாஜக புதிய திட்டம் போடலாம் என்கிறார்களே?
இது கற்பனையான கேள்வி. இதுபோன்ற திட்டங்கள் பாஜக-விடம் இருந்தால், அவற்றை அதிமுக தவிடுபொடியாக்கும்.
இந்தத் தேர்தலிலும் அதிமுக சரிவு கண்டால் கட்சியின் எதிர்காலமும், இபிஎஸ்ஸின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விடும் என்கிறார்களே?
இந்தத் தேர்தலில் அதிமுக-வுக்கு எந்தச் சரிவும் ஏற்படாது. எனவே, இபிஎஸ் தலைமையில் அதிமுக-வின் எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும்.
கோவையில் இருந்து இபிஎஸ் தொடங்கும் எழுச்சிப் பயணம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறீர்கள்?
எழுச்சிப் பயணம் மக்களை கவர்ந்து இழுக்கும். தனது பயணத்தில், அதிமுக செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை இபிஎஸ் எடுத்துரைப்பார். எனவே, இந்தப் பயணம் அதிமுக-வை ஆட்சியில் அமர்த்தும் புரட்சிப் பயணமாக உருவெடுப்பது உறுதி.
இத்தனை ரிஸ்க் எடுத்து பாஜக-வுடன் கூட்டணி சேர்வதற்கு பதிலாக விஜய்யுடன் கூட்டணி வைத்திருக்கலாமே?
கூட்டணி என்பது இரண்டு கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் இடையே நடக்கின்ற ஓர் உடன்பாடு. எனவே, எங்களுடன் கூட்டணி ஏற்படுவதற்கு விஜய்யின் ஒத்துழைப்பும் அவசியம்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை சிறுமைப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட வீடியோவை எப்படி சகித்துக் கொண்டது அதிமுக?
சகித்துக்கொள்ளவில்லை. அதிமுக அதற்கு எதிர்வினையாற்றியது. நட்பு ரீதியில் அங்கு சென்றிருந்த முன்னாள் அமைச்சர்களே தங்களுடைய கடுமையான ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தனர். ‘எங்கள் உயிர் உள்ளவரை அண்ணாவை எந்தக் காலத்திலும் விட்டுத்தரமாட்டோம்’ என இபிஎஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் தளவாய் சுந்தரத்தை பொறுப்பில் இருந்து நீக்கிய இபிஎஸ், மோகன் பாகவத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேலுமணியை கண்டு கொள்ளவில்லையே?
அப்பொழுது எங்களுக்கு பாஜக-வுடன் இணக்கமில்லை. எனவே, தளவாய் சுந்தரத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்பொழுது இணக்கமானதால், வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவேதான், வெகுவிரைவில் தளவாய் சுந்தரம் கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டர்.
இனியும் தனித்து ஆட்சி என்ற கோஷம் தமிழகத்தில் எடுபடும் என நினைக்கிறீர்களா?
தனித்து ஆட்சி என்ற கோஷம் தான் தமிழகத்தில் எடுபடும். எந்தக் காலத்திலும் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சியை விரும்பமாட்டார்கள்.
தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக உறுதியளித்துவிட்டு பிறகு மறுத்தது அரசியல் நாகரிகமா?
தேமுதிக-வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக எந்தவித ஒப்பந்தமும் அதிமுக-வுடன் ஏற்படவில்லை. ஆனால், இப்பொழுது 2026-க்குப் பிறகு ஒரு இடம் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதிமுக எப்பொழுதுமே சொன்ன சொல்லை மீறுவதில்லை. அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன் ஆகியோர் அந்த அடிப்படையில்தான் எம்பி ஆக்கப்பட்டனர்.
பாஜக-வுடன் கூட்டணி வைத்த கட்சிகள் காணாமல் போய்விடும் என்று சொல்லப்படும் கருத்தை ஏற்கிறீர்களா?
இதை நான் ஏற்கவில்லை. நெருப்பின் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போன்ற அதிமுக-வுக்கு அது பொருந்தாது. எத்தனை முறை வீழ்ந்தாலும், அதைவிட வேகமாகவும் கம்பீரமாகவும் எழுந்த நிற்கும் கட்சி அதிமுக. எனவே, அதிமுக-வை எவராலும் வீழ்த்தவோ, அபகரிக்கவோ முடியாது.
திராவிட மண்ணில் பாஜக காலூன்ற துடிப்பதை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பாஜக-வின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
சுமார் எட்டாண்டு காலமாக திமுக தனது கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறதே?
இன்னும் தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ளன. தேர்தல் கூட்டணி என்பது ஒரே இரவில்கூட திடீர் என மாறக்கூடியது. எனவே, திமுக கூட்டணியில் இப்போது சலசலப்பு துவங்கிவிட்டது. அது நிலைத்து நீடிக்குமா என்பதை தேர்தல் நெருக்கத்தில் தான் உணர முடியும்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, கூட்டணி ஆட்சி தான் என பாஜக நிர்பந்தித்தால் என்ன செய்வீர்கள்?
தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும். இபிஎஸ்தான் முதல்வராக வருவார். எந்த நிர்பந்தத்திற்கும் அதிமுக பணியாது.
உண்மையைச் சொல்லுங்கள்… திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் தழைத்திருக்கிறதா இல்லையா?
தமிழகம் தழைக்கவில்லை. மாறாக மிகவும் பின்தங்கியிருக்கிறது. சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் கடனில் தமிழகம் பொருளாதார ரீதியில் தள்ளாடுகிறது.
தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு தர மறுப்பது சரியான அணுகுமுறையா?
இல்லை. மத்திய அரசின் இந்தப் போக்கு கண்டித்தக்கது. எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் அவர்கள், “நியாயமாக தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில் தற்போது அக்கட்சி பலவீனமாக இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறதே?
இந்தக் கேள்விக்கே இடமில்லை. ஏனெனில், அதிமுக-வில் எந்தப் பிளவும் இல்லை. அதிமுக பலவீனமாகவும் இல்லை. 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தயாரான நிலையில் அதிமுக உள்ளது.
ஓபிஎஸ், சசிகலா, தினகரனை மீண்டும் கட்சிக்குள் சேர்க்காவிட்டால் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு பின்னடைவு ஏற்படலாம் என்கிறார்களே?
இது சரியான கணிப்பு இல்லை. தனிமனிதர்களை விட அதிமுக தொண்டன் கட்சியின் வெற்றியைத்தான் பெரிதாக மதிப்பான். எனவே, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த பின்னடைவுமின்றி, அதிமுக வெற்றிக்கொடி நாட்டும்.
ஆளும் திமுக தனது கூட்டணியை உறுதியாக வைத்து தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டது. ஆனால், எதிர்க்கட்சியான அதிமுக இன்னும் கூட்டணியையே கட்டமைக்கவில்லையே?
அதிமுக தனித்து நின்றே வெற்றி பெரும் ஆற்றல் உடைய கட்சி. ஏற்கெனவே, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அனைவரையும் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடச் செய்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த கட்சி. அதிமுக. மைக்ரோ லெவல் ஆபரேஷன் செய்து தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டிகளை வெற்றிகரமாக அமைத்துள்ளது. ஆட்சியைப் பிடிப்பதற்கு இந்த பலமே போதுமானது. மேலும், கூட்டணி அமைப்பதற்கும் அதை உறுதிப்படுத்துவதற்கும் இன்னும் கால அவகாசம் இருக்கிறது. உரிய காலத்தில் அதிமுக அதை செய்து முடிக்கும்.
ஆனால், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என உறுதியாகச் சொல்கிறாரே ஸ்டாலின்?
இந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெறுவது மிகக் கடினம். சட்டம் – ஒழுங்கு நிலவரத்தைப் பார்த்து நடுநிலையாளர்களே அச்சப்படுகின்றனர். கடலை மிட்டாய் விற்பது போல் கஞ்சா விற்கப்படுகிறது. ஸ்டாலின் நல்லது செய்ய நினைத்தாலும் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் அவரைச் செய்யவிடாமல் இழுத்தடிக்கின்றனர். எதிர் காலத்தில் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, வெள்ளக்கோயில் சாமிநாதன் போன்றவர்களால் தனது மகனுக்கு ஆபத்து வரலாம் என நினைக்கும் ஸ்டாலின், இம்முறை திமுக வென்றால் மகனை முதல்வராக்கிவிடும் திட்டத்தில் இருக்கிறார். ஆனால், அது நடக்காது.
பாஜக – அதிமுக கூட்டணியை அமித் ஷா அறிவித்து மூன்று மாதங்கள் ஆகியும் இரு கட்சிகளுக்கும் இன்னும் ஒருங்கிணைப்பு ஏற்பட்டதாகத் தெரியவில்லையே?
தமிழ்நாட்டை பொறுத்தவரை கூட்டணிக்கு தலைமை தாங்கப் போவது அதிமுக தான். கூட்டணியின் தலைவர் இபிஎஸ் தான். இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. இதை பாஜக ஏற்கவில்லை என்றால் இருகட்சிகளுக்குமான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை.
அதிமுக ஆட்சியிலும் கட்சியிலும் சிறுபான்மை சமூகத்தினருக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறதே..?
அதிமுக-வில் சிறுபான்மை சமூகத்தினருக்கு உரிய முக்கியத்துவம் காலம் காலமாக தரப்பட்டு வருகிறது. எனவே, இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை.
– ஆர்.ஷபிமுன்னா / கி.தனபாலன்