பட மூலாதாரம், Getty Images
காலை 8 மணி.
வேலூரைச் சேர்ந்த மீனா மோகனின் நாள், தனது 86 வயது மாமியாரை எழுப்புவதிலிருந்து தொடங்குகிறது. பல் தேய்க்க உதவ வேண்டும். டயபர் போட சிரமப்படும் அவருக்கு சிறுநீர் பையை மாற்ற வேண்டும். காலை உணவைச் சமைத்து மசித்து ஊட்ட வேண்டும். பின்னர் குளிப்பாட்டி மதிய உணவு கொடுக்க வேண்டும். நடக்க சிரமப்படுவதால் கழிவறைக்குச் செல்லும்போதும் உடன் இருக்க வேண்டும்.
மாலையில் காபி.
இரவில் மீண்டும் உணவு.
மறுநாளும் இதே நடைமுறை.
கடந்த சில ஆண்டுகளாக அவரது வாழ்க்கை இப்படித்தான் நகர்கிறது.
ஒரு கட்டத்தில் வயதான பெற்றோர் அல்லது மாமனார், மாமியாரைப் பராமரிப்பது அன்பின் வெளிப்பாடாக மட்டுமல்லாமல், முழுநேர பொறுப்பாகவும் மாறிவிடுகிறது. வேலை நேரமோ, விடுமுறையோ, ஓய்வோ இல்லாத ஒரு பொறுப்பு.
இன்று தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான வீடுகளில் இதுவே நடக்கிறது.
நீண்ட ஆயுளின் இறுதி ஆண்டுகளில் நம்மைக் கவனிப்பது யார் என்ற கேள்வி மெதுவாக குடும்பங்களின் கதவுகளைத் தட்டத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் முதியோர் எண்ணிக்கை
2021-ஆம் ஆண்டுக்கான மாதிரிப் பதிவு அமைப்பு (Sample Registration System) தரவுகளின்படி, இந்திய மக்கள்தொகையில் 9 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். தமிழ்நாட்டில் இந்த விகிதம் 12.09 சதவீதமாக உள்ளது.
ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) வெளியிட்ட இந்திய முதியோர் நிலை குறித்த அறிக்கை 2023-ன் படி, 2036 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 20.8 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. அதாவது, இன்னும் ஒரு தசாப்தத்திற்குள் மாநிலத்தில் ஐந்தில் ஒருவர் முதியவராக இருக்கலாம்.
இந்த மாற்றம் புள்ளிவிவரங்களில் மட்டும் நிகழவில்லை. குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையிலும் அது வெளிப்படத் தொடங்கியுள்ளது.
பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட 91 வயது மாமனாரைப் பராமரிக்கும் மீனாவுடன் அந்த பொறுப்பை அவரது கணவரும் பகிர்ந்து கொள்கிறார்.
“இதற்கு நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் எதுவும் கிடையாது. மிகுந்த அர்ப்பணிப்பு இருந்தால்தான் இதைச் செய்ய முடியும்,” என்கிறார் மீனா. “எங்காவது வெளியூர் செல்ல வேண்டும் என்றாலோ, நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்றாலோ, எனது கணவரின் சகோதரர் குடும்பத்தினர் வந்த பிறகே செல்ல முடியும்” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
முதியோரை பராமரிக்கும் முதியோர்
இந்தப் பொறுப்பை ஏற்றிருப்பவர்களில் பலர் தாங்களும் முதியோராகத் தொடங்கியிருக்கிறார்கள்.
சென்னையைச் சேர்ந்த மகாலட்சுமிக்கு 63 வயது. அவர் பராமரிப்பது 90 வயதான தனது தாயை.
“ஒருமுறை குளியலறையிலிருந்து வெளியே வந்தபோது அவர் கீழே விழுந்தார். அதன் பிறகு அவர் நடமாடுவது மிகவும் குறைந்துவிட்டது. மீண்டும் விழுந்துவிடுவோமோ என்ற பயமும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. இப்போது கழிவறைக்குச் செல்லக்கூட ஒருவர் உதவ வேண்டும்,” என்கிறார் அவர்.
ஆனால் மகாலட்சுமியின் கதையில் இன்னொரு விசயம் இருக்கிறது.
அவருக்கே கடந்த இரண்டு ஆண்டுகளாக கணுக்கால் வலி உள்ளது. மருத்துவரைப் பார்க்கச் செல்லும்போது அவரது மகள்தான் உடன் வருகிறார். அதே வீட்டில் ஒரு தலைமுறை இன்னொரு தலைமுறையைக் கவனிக்கிறது; அதனைத் தொடர்ந்து அடுத்த தலைமுறை அவர்களைக் கவனிக்கிறது.
இது தமிழ்நாட்டின் பல குடும்பங்களின் புதிய யதார்த்தமாக மாறி வருகிறது.
தங்களது உடல்நலப் பிரச்னைகள், வேலை, குழந்தைகள், திருமண வாழ்க்கை, குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோரின் தேவைகள் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் சமாளிக்கும் 50 மற்றும் 60 வயதினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பராமரிப்பு என்பது மருந்து கொடுப்பது மட்டும் அல்ல
வயதானவர்களைப் பராமரிப்பது உடல் நலன் சார்ந்த சவாலாக மட்டுமே இருப்பதில்லை.
பத்மா, 76 வயதான ஸ்கீசோஃபிர்னியாவால் பாதிக்கப்பட்ட தனது மாமியாரைப் பார்த்துக்கொள்கிறார்.
“சில நேரங்களில் அவருக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுகிறது. நான் மாத்திரை கொடுத்தாலும் வாங்கி சாப்பிட மறுப்பார். யாரோ தன்னைத் துன்புறுத்தப் போகிறார்கள் என்று நினைப்பார். அவர் பேசுவதை ஒரு குழந்தை பேசுவது போல எடுத்துக்கொள்ள கற்றுக்கொண்டேன்,” என்கிறார்.
அவரது அனுபவம் வயதானவர்களின் மற்றொரு தேவையை வெளிப்படுத்துகிறது.
முதுமையில், உடல் நலத்துக்கு இணையாக மனநலமும் முக்கியமானதாக மாறுகிறது.
வாழ்நாள் முழுவதும் ஒரு குடும்பத்தை வழிநடத்திய ஒருவர், தன்னுடைய முடிவுகளுக்கே பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழலில் தள்ளப்படும்போது, தனிமை, பயம், மதிப்பு இழந்துவிட்டோம் என்ற உணர்வு போன்றவை தோன்றலாம்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியா எதிர்கொள்ளும் புதிய நெருக்கடி
மக்கள்தொகை ஆய்வுகள் காட்டுவது, இந்தியாவில் மக்களின் சராசரி ஆயுள் அதிகரிக்கும் போது அன்றாட செயல்பாடுகளில் உதவி தேவைப்படும் முதியோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகும்.
இந்தியாவில் முதுமை பற்றிய ஆய்வு (Longitudinal Ageing Study in India – LASI) உள்ளிட்ட பல ஆய்வுகள், வயது அதிகரிக்க அதிகரிக்க மற்றவர்களின் உதவியை சார்ந்திருக்கும் நிலை அதிகரிப்பதையும், அந்தப் பராமரிப்பு பொறுப்பின் பெரும்பகுதியை குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக பெண்கள் ஏற்றுக்கொள்வதையும் காட்டுகின்றன.
ஒரு கட்டத்துக்குப் பிறகு, நோய்க்குச் சிகிச்சை அளிப்பதைவிட அன்றாட வாழ்க்கையைத் தொடர உதவுவதே முக்கியமாகிறது.
மருத்துவமனை எலும்பு முறிவுக்கு சிகிச்சையளிக்கலாம். மருத்துவர் மருந்து எழுதித் தரலாம்.
ஆனால் தினமும் காலை படுக்கையிலிருந்து எழ உதவுவது யார்?
அதற்கான பதிலை குடும்பங்களே தேடிக்கொண்டு இருக்கின்றன.
கண்ணுக்குத் தெரியாத பராமரிப்பாளர்
இந்தக் கதைகளில் மையமாக இருப்பவர், பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாத ஒருவர்.
அவர் பராமரிப்பாளர்.
அவரது தூக்கம் பாதிக்கப்படுகிறது. வேலையில் இடையூறு ஏற்படுகிறது. விடுமுறை எடுப்பது கடினமாகிறது.
சில நேரங்களில் உடன்பிறப்புகள் வேறு நகரங்களிலோ, வேறு நாடுகளிலோ வாழ்ந்து கொண்டிருக்கலாம்.
குற்றவுணர்வு இரு பக்கத்திலும் உருவாகலாம்.
முதியவர் தாம் குடும்பத்திற்கு சுமையாகிவிட்டதாக நினைக்கலாம். பராமரிப்பாளர், தன்னால் போதுமான அளவு முழுமையான பராமரிப்பை வழங்க முடியவில்லை என்று வருந்தலாம்.
“இப்போது உங்கள் தாயாரைப் பார்த்துக் கொண்டிருக்கும் நபர் ஒரு வாரம் அதைச் செய்ய முடியவில்லை என்றால், அந்தப் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வார்கள்?” என்ற கேள்விக்கு பல குடும்பங்களிடம் பதில் இருக்காமல் போகலாம்.
அதுவே தமிழ்நாடு எதிர்கொள்ளத் தொடங்கியுள்ள உண்மையான ‘பராமரிப்பு இடைவெளி’.
பட மூலாதாரம், Getty Images
சந்தை உருவாக்கும் தீர்வுகள்
இந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கும் ஒரு துறையாக மூத்த குடிமக்கள் வாழ்விடங்கள் இருக்கின்றன.
இவை பாரம்பரிய முதியோர் இல்லங்களிலிருந்து வேறுபட்டவை. வாழ்க்கையின் இறுதி கட்டத்தை கழிப்பதற்கான இடங்களாக அல்லாமல், உதவி தேவைப்படும் போது பெறக்கூடிய சுயாதீன வாழ்விடங்களாக தங்களை அறிமுகப்படுத்துகின்றன.
அதுல்யா சீனியர் கேர் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் ஶ்ரீனிவாசன் கூறுகையில்,” 2016-இல் உதவி பெறும் வாழ்விட வசதி (Assisted Living) என்ற கருத்தை விளக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று முதியவர்களே தங்கள் பிள்ளைகளைச் சார்ந்து இருக்க விரும்பாமல் மாற்று வாய்ப்புகளைத் தேடத் தொடங்கியுள்ளனர்.” என்கிறார்.
இத்தகைய வளாகங்களில் மருத்துவர்கள், ஊட்டச்சத்து அடிப்படையிலான உணவுத் திட்டங்கள், சமூகச் செயல்பாடுகள், அவசர மருத்துவ வசதிகள், தனிமையைக் குறைக்கும் குழு நடவடிக்கைகள் போன்றவை வழங்கப்படுகின்றன.
ஆனால் இந்த மாதிரியான வசதிகளின் செலவு மாதத்துக்கு பல ஆயிரம் ரூபாய்களை எட்டக்கூடும்.
அதனால் ஒரு புதிய கேள்வி உருவாகிறது.
தொழில்முறை பராமரிப்பை பெறக்கூடியவர்கள் ஒருபுறம்; குடும்ப உறுப்பினர்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியவர்கள் மறுபுறம்.
பட மூலாதாரம், Getty Images
வேறு இடங்கள் வேறு விதமாக சிந்திக்கின்றன
இந்தச் சவாலை எதிர்கொள்ளும் போது, சில இடங்களின் அனுபவம் தமிழ்நாட்டிற்கு பயனுள்ள பாடங்களை வழங்குகிறது.
சிங்கப்பூரில், முதியவர்கள் முடிந்தவரை தங்களது சொந்தப் பகுதியில், சொந்த வீட்டில் வாழ்வதற்கு ஏற்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சமூகப் பராமரிப்பு குடியிருப்புகள், முதியோர் மையங்கள், வீட்டிற்கே சென்று மருத்துவம் மற்றும் செவிலியர் சேவைகள் வழங்கும் திட்டங்கள் ஆகியவை அதில் அடங்கும்.
அவர்களின் அடிப்படை யோசனை எளிமையானது.
முதியவர்கள் முதியோர் இல்லத்துக்குச் செல்ல வேண்டிய நிலை வரும்வரை காத்திருக்காமல், அதற்கு முன்பே சமூக ஆதரவு வலையமைப்பை உருவாக்க வேண்டும்.
கேரளம் வழங்கும் பாடம்
தமிழ்நாடு வெளிநாடுகளை மட்டுமே பார்க்க வேண்டியதில்லை.
அண்டை மாநிலமான கேரளம், முதியோர் மக்கள்தொகை அதிகரிப்பை இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட முன்னதாகவே அனுபவித்து வருகிறது.
அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், தனியாக வாழும் முதியோருக்கு சுகாதார பரிசோதனை, ஆலோசனை மற்றும் வீட்டு வருகை சேவைகளை வழங்குகின்றன.
உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள கேரளத்தின் சமூக அடிப்படையிலான நோய்த்தணிப்புப் பராமரிப்பு அமைப்புகளும் மற்றொரு உதாரணம். செவிலியர்கள், தன்னார்வலர்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சமூகக் குழுக்கள் இணைந்து வீட்டிலேயே நீண்டகால பராமரிப்பு வழங்குகின்றன.
இந்த அனுபவம் ஒரு முக்கியமான உண்மையைச் சொல்கிறது.
முதியோர் பராமரிப்பு குடும்ப பிரச்னை அல்ல, சமூக சவால்
பட மூலாதாரம், Getty Images
முதியோர் பராமரிப்பு இனி குடும்ப பிரச்னை மட்டுமல்ல. “இது நம் சமூகம் எதிர்கொள்ள வேண்டிய சவால்” என்கிறார் சமூக மருத்துவப் பேராசிரியர் சுதர்ஷினி.
“எந்தக் காரணமும் இல்லாமல் மருத்துவமனைக்கு வந்து என்னை பார்த்து விட்டு போகும் முதியவர்கள் உள்ளனர். எதற்காக இவ்வளவு சிரமப்பட்டு வருகிறீர்கள் என்று கேட்டால், நன்றாக இருக்கிறேனா என்று யாராவது என்னை விசாரிக்கும் போது எனக்கு ஆறுதலாக இருக்கிறது, அதற்காக தான் வருகிறேன் என்று கூறுவார்கள்” என்கிறார்.
“முதியோர் பராமரிப்பு வழங்க பயிற்சிப் பெற்றவர்கள் எத்தனை பேர் நம்மிடம் இருக்கிறார்கள், அவர்கள் என்னென்ன சேவைகளை வழங்க முடியும், அவர்களின் தரத்தை மதிப்பிடுவது யார் போன்ற விசயங்களில் தெளிவு வேண்டும். முதியோர் பராமரிப்பு எதிர்காலத்தில் ஒரு வேலைவாய்ப்பாக மாற வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் இந்த சவாலை சமாளிக்க முடியும்” என்கிறார் அவர்.
2000களின் தொடக்கத்தில் இந்தியர்களின் சராசரி ஆயுள் சுமார் 62-63 ஆண்டுகளாக இருந்தது. சமீபத்திய அதிகாரப்பூர்வ எஸ்ஆர்எஸ் (2020-24) மதிப்பீடுகளின்படி அது சுமார் 70.6 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது. அதாவது, இருபது ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள் சுமார் 8 ஆண்டுகள் அதிகரித்துள்ளது.
நம் ஆயுளை நீட்டித்துக் கொண்டுள்ள நாம், இப்போது பராமரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். கூடுதலாக பத்து ஆண்டுகள் வாழ்வது, அந்த ஆண்டுகள் அனைத்தையும் முழுமையான சுயசார்புடன் வாழ்வோம் என்பதற்கான உத்தரவாதம் அல்ல.
மீனா, மகாலட்சுமி, பத்மா ஆகியோரின் கதைகள் ஒரு பெரிய உண்மையை நினைவுபடுத்துகின்றன.
முதுமை என்பது ஒருவரின் தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்ல. அது முழு குடும்பத்தையும், ஒரு சமூகத்தையும் மாற்றக்கூடிய நிகழ்வு.
உங்கள் தாயார் 90 வயது வரை வாழலாம்.
ஆனால் அவர் 80 வயதைத் தாண்டியபோது, அவரைப் பராமரிக்க குடும்பத்திடம் நேரம், மனிதவளம், பணம் மற்றும் ஆதரவு அமைப்பு இருக்குமா?
அதுவே தமிழ்நாட்டின் அடுத்த பெரிய மக்கள்தொகைச் சவால்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு