பட மூலாதாரம், Getty Images
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அசாம் மாநிலத்திலிருந்து ஒரு யானை கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வேறு கோவில்களுக்கு மேலும் 4 யானைகளை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அசாமில் உள்ள தனியாரிடமிருந்து நன்கொடையாளர்களால் இந்த யானைகள் வாங்கப்பட்டு, கோவில்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்குப் பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அசாம் யானைகளை இங்கே கொண்டு வருவது தேவையற்ற நடவடிக்கை என்கிறார் காட்டுயிர் ஆர்வலர் முரளீதரன்.
அசாம் காலநிலையில் உள்ள யானைகளால் இங்குள்ள கோவில்களில் உள்ள சூழ்நிலையில், காலநிலையில் வைத்துப் பராமரிப்பது பெரும் சிரமம் என்கிறார் யானை ஆராய்ச்சியாளர் சிவசுப்ரமணியம்.
ஆனால் யானைகளால் நீண்ட நெடிய தூரம் பயணம் செய்ய முடியுமென்றும், அவற்றால் எந்த காலநிலையிலும் வாழப்பழகிக் கொள்ள முடியும் என்கிறார் யானை திட்டத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினரும், ஏராளமான யானைகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவருமான வன கால்நடை ஓய்வு பெற்ற மருத்துவர் மனோகரன்.
வனத்துறை யானைகள், முகாம்களில் உள்ள யானைகளை கோவில்களுக்கு வழங்க முடியாது என்று பிபிசியிடம் கூறிய தமிழக தலைமை காட்டு உயிரினக்காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா, அவற்றுக்கு காட்டுயிர் தன்மை மாறாமல் பயிற்சி வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். அசாம் யானைகளின் உரிமை மற்றும் போக்குவரத்து விதிகளைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு, அசாம் வனத்துறையினருக்கே உள்ளது என்றார் அவர்.
தமிழகத்துக்கு வரும் 5 யானைகள் – எதிர்ப்பும் ஆதரவும்!
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் சில கோவில்களுக்கு, நன்கொடையாளர்களால் 5 யானைகளை வழங்குவதற்கான விண்ணப்பம், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அசாம் மாநிலத்திலிருந்து துர்கா என்ற 5 வயது யானை, கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி தினத்தில் வந்து சேர்ந்தது.
இந்த யானையைத் தவிர்த்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மடம், மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி கோவில் மற்றும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் ஆகியவற்றிற்கு மேலும் 4 யானைகள் அசாமிலிருந்து கொண்டு வரப்பட்டு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசால் தகவல் பகிரப்பட்டுள்ளது.
ஆனால் இந்த யானைகளை அசாமிலிருந்து கொண்டு வருவதற்கு பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
துர்கா, ரூப்சிங், சிவா, ஹீராலால் மற்றும் பிஜுலி ஆகிய இந்த யானைகள் அனைத்தும் 5 வயதிலிருந்து 10 வயதுக்குட்பட்டவை என்றும், இதில் துர்காவுக்கு ஐந்து வயது மட்டுமே ஆகிறது என்றும் ‘இந்தியாவில் கால்நடைகளுக்கான மக்கள்’ (பீப்பிள் ஃபார் கேட்டில் இன் இந்தியா’ – PFCI) அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய இவ்வமைப்பின் நிறுவனர் அருண் பிரசன்னா, ”இந்த யானைகளைப் பராமரிக்கத் தங்களுக்கு பொருளாதார வசதியில்லை என்று தனிநபர்கள் கூறுகின்றனர். தனியாருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் துர்கா யானை, அந்த உரிமையாளரின் இடத்திலிருந்து அல்லாமல், அரசு சரணாலயத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படுவது, அந்த யானையின் உண்மையான உரிமை மற்றும் பராமரிப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகிறது.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
அதேநேரத்தில் கோவில் குடமுழுக்கு விழாக்களின் போது, யானைகள் பயன்படுத்த அனுமதியளிப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கவேண்டும் என்று சேவா டிரஸ்ட் என்ற அமைப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
துர்கா யானையைக் கொண்டு வர ஒப்புதல் அளித்துவிட்டதாகக் கூறிய தமிழக வனத்துறை, மற்ற விண்ணப்பங்கள் ஆய்வில் உள்ளதாகக் கூறியது. அவற்றின் மீது ஒரு வாரத்தில் முடிவெடுக்குமாறு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
லலிதா என்ற யானை தொடர்பான மற்றொரு வழக்கில், சிறைபிடிக்கப்பட்ட யானைகளை கோவில்களுக்குத் தருவதைத் தடுக்கும் வகையிலான மாநில அரசின் உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 2 அன்று ரத்து செய்தது.
அந்த வழக்கில் கோவில்களுக்கு புதிதாக யானைகள் வாங்க தனி நீதிபதி விதித்த தடையை நீக்கிய சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, இவ்வழக்கை செப்டம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
மற்ற 4 கோவில்கள் மற்றும் மடத்துக்கு யானைகளை நன்கொடையாக வழங்குவதற்கான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தேவையான ஆய்வு மேற்கொள்ளப்படுமென்று தமிழக தலைமை காட்டு உயிரினக் காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து மட்டுமின்றி அசாம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த காட்டுயிர் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்தும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்துள்ள துர்கா யானையின் வயது, உரிமை மற்றும் இடமாற்றம் செய்தது குறித்த ஆவணங்களை அசாம் வனத்துறை வெளியிட வேண்டுமென்று ‘அரண்ய சுரக்ஷா சமிதி’ என்கிற அமைப்பு கூறியுள்ளது.
இந்த அமைப்பு பகிர்ந்துள்ள தகவலின்படி, அசாம் மானஸ் தேசியப் பூங்காவிலிருந்து செப்டம்பர் 7-ஆம் தேதியன்று பூங்கா இயக்குநர் சோனாலி கோஷ் மேற்பார்வையில் பயணத்தைத் துவங்கிய துர்கா, செப்டம்பர் 14 அன்று அதிகாலை 1.30 மணியளவில் மதுரையை வந்தடைந்தது.
அசாமிலிருந்து யானைகளைக் கொண்டு வர கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், பல ஆயிரம் கி.மீ. தூரத்தில் இவற்றைக் கொண்டு வரும்போது, யானைகள் திட்டம் வகுத்துள்ள இடமாற்றம் சார்ந்த விதிமுறைகள் கடை பிடிக்கப்பட்டதா என்றும் பலரும் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளனர்.
பட மூலாதாரம், Rakesh Dogra
யானைகளை இடமாற்றம் செய்வதற்கு வகுக்கப்பட்டுள்ள விதிகள் என்ன?
மத்திய அரசின் யானைகள் திட்டம் வகுத்துள்ள யானைகள் இடமாற்றம் தொடர்பான விதிமுறைகளில் கீழ்க்கண்ட விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
* 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பிரிவு 11 (1) (a) (பிடிப்பதற்கு அனுமதித்தல்) மற்றும் பிரிவு 48 (A) (விலங்குகளைக் கொண்டு செல்வதற்கு) ஆகியவற்றின் கீழ் தலைமை காட்டுயிர் பாதுகாவலர் இடமிருந்து பெறப்பட்ட எழுத்துப்பூர்வ உத்தரவு மற்றும் மாநிலத்தின் போக்குவரத்து விதிகள் படி போக்குவரத்துக்குழு அமைக்க வேண்டும்.
* அதில் வனத்துறை துணை ஆணையர் அல்லது மாவட்ட வன அலுவலர் முழுப் போக்குவரத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும். போக்குவரத்துப் பொறுப்பு அதிகாரி, காட்டுயிர் அனுபவம் வாய்ந்த கால்நடை மருத்துவர் மற்றும் ஒரு கால்நடை மருத்துவப்பிரிவு, யானைகளைக் கையாள்வதில் கணிசமான அனுபவம் வாய்ந்த மூத்த பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் இடம் பெற வேண்டும்.
* வாகனத்தேர்வு: தாழ்வான சேசிஸ் கொண்ட பிரத்யேக டிரக் பயன்படுத்த வேண்டும். தரைப்பகுதி மரத்தால் ஆனதாக இருக்க வேண்டும். பக்கச் சுவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உணவு, தண்ணீர், மருந்து வழங்க குறைந்தது 2 ஜன்னல்கள் இருக்க வேண்டும்.
* யானைக்குப் போதுமான அளவு உணவு, தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.
* பயணப் பாதைகளை முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும். தாழ்வான மின்கம்பிகள் இருக்கக்கூடாது. சுரங்கப்பாதை, பெரிய நகரம், மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளைத் தவிர்க்க வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் கூடுதல் தூரமாக இருந்தாலும் அவற்றையே பயன்படுத்த வேண்டும்.
* யானைகளை ஏற்றிச் சென்ற அனுபவம் உள்ள ஓட்டுநர்களைப் பணியில் அமர்த்துவது நல்லது. புதிதாகப் பிடிக்கப்பட்ட காட்டு யானைகள் வாகனத்தை உடைத்துக்கொண்டு வெளியேற முயற்சிக்கலாம், இதனால் வாகனம் ஆட்டம் காணக்கூடும். இத்தகைய சூழல்களில் ஓட்டுநர்கள் பதற்றமடையக் கூடாது. வேகம் மணிக்கு 50 கி.மீ-க்கு மிகாமல் இருக்க வேண்டும். சாலை நிலைமைக்கு ஏற்ப வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
* போக்குவரத்தின் போது யானைகளைக் கட்டுப்படுத்த திறமையான அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் முன், பின் வாகனங்களில் பயணம் செய்ய வேண்டும்.
* பொது பாதுகாப்பு: யானைகள் பொதுவாக கூட்டத்தை ஈர்க்கும் என்பதால் பலர் யானைகளைச் சுற்றி கும்பலாகக் கூடும்போது விரும்பத்தகாத சம்பவங்கள் ஏற்படலாம். தேவைப்படும் இடங்களில் காவல்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் ஆதரவைப் பெற்று நிர்வகிக்க வேண்டும்.
இந்தக் கருத்துகளை உள்ளடக்கி விதிமுறைகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், BBC/Sivasubramaniam
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய யானை ஆராய்ச்சியாளர் சிவசுப்பிரமணியம், ”ஒரு யானையைப் பிடித்து வேறு ஓரிடத்திற்கு மாற்றுவதாக இருந்தால், அதே தன்மையுடைய வாழ்விடத்தில்தான் மாற்ற வேண்டும். இது அடிப்படையான ஒரு விஷயம். உதாரணமாக முதுமலையில் பிடிக்கும் யானையை ஆனைமலையில் வைத்துப் பராமரிக்கலாம். கோடியக்கரை கடற்கரை வனப்பகுதியில் வைத்தால் அதனால் வாழ்வது கடினம்.” என்றார்.
ஒருகாலத்தில் இங்கிருந்து அந்தமான் தீவுக்கு யானைகளைக் கப்பலில் கொண்டு சென்றதைக் குறிப்பிட்ட அவர், அங்கும் இங்கும் ஒரே காலநிலை இருப்பதை சுட்டிக்காட்டினார். கப்பலில் யானைகள் பயணம் செய்வதில் சிரமம் ஏதுமில்லை என்றும், அதேநேரத்தில் 3 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு லாரிகளில் யானைகளைக் கொண்டு வருவது அவற்றைப் பெருமளவில் வருத்தும் செயல் என்றும் குறிப்பிட்டார்
”மேற்கு வங்கம், ஒடிசாவிலுள்ள யானைகளால் இங்கே வாழமுடியும். அசாம் உயரமான, குளிரான மழைப்பொழிவு அதிகமுள்ள பகுதி. அங்குள்ள யானையை இங்கே கொண்டு வரும்போது, அதன் வாழ்விடத்திற்கு முற்றிலும் புதிதான இடத்தில் அதனால் சமாளித்து வாழ்வது பெரும் சிரமமாகும். குளிர்காலத்தில் இங்கே கொண்டு வந்திருந்தால் 2, 3 மாதங்களில் அது இங்கே வாழப்பழகிவிடும். ஆனால் இப்போது சூப்பர் எல்நினோ சூழலில் இங்கே கொண்டு வந்தது பெரும் தவறு.” என்றார் சிவசுப்பிரமணியம்.
ஆனால் யானைகளால் தொலைதூரமாக பயணம் செய்ய முடியுமென்றும், எந்தக் காலநிலையிலும் வாழப் பழகிக் கொள்ள முடியுமென்றும் கூறுகிறார் மத்திய அரசின் யானைகள் திட்டத்தின் உயர்மட்டக்குழு உறுப்பினரும், ஏராளமான யானைகள் மீட்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளில் அனுபவம் உள்ளவருமான ஓய்வு பெற வன கால்நடை மருத்துவருமான மனோகரன்
பிபிசியிடம் பேசிய வன கால்நடை மருத்துவர் மனோகரன், ”கடந்த 1990 களிலேயே, இங்கிருந்து கலீம் மற்றும் பல்லவன் ஆகிய யானைகளை மேற்கு வங்கத்தில் ஜல்தாபாராவுக்கு கொண்டு சென்று, அங்கு குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்த காட்டுயானைகளை துரத்தியிருக்கிறோம். அதேபோல பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்திலிருந்து பல யானைகள் வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவற்றின் பயணத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை. சென்ற இடங்களிலும் உடல்நலம் பாதிக்கப்பட்டதில்லை.” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
வெளிநாடுகளைச் சேர்ந்த ஹஸ்கி, ஜெர்மன் ஷெப்பர்டு, கார்கஸ் ஸ்பேனியல் போன்ற குளிர் பிரதேசங்களைச் சேர்ந்த நாய்கள், இங்கே இந்திய தட்பவெப்பநிலையில் வாழப் பழகிக் கொண்டதைப் போலவே, யானைகளாலும் எந்தவொரு காலநிலையிலும் வாழப்பழகிக் கொள்ள முடியும் என்றார் வன கால்நடை மருத்துவர் மனோகரன். அதனால் இடமாற்றம் என்பது யானைகளை எந்த வகையிலும் பெரிதாக பாதிக்காது என்றார் அவர்.
”அந்தக் காலத்தில் சாதாரண லாரிகளில்தான் கொண்டு சென்றோம். இப்போது யானைகளை இடமாற்றம் செய்வதற்கெனவே பிரத்யேக வாகனங்கள் உள்ளன. யானையின் தலைக்கு மேலே ஷவர், சாணத்தை அவ்வப்போது அகற்றும் வசதி, ஓட்டுநருக்கு ஏசி கேபின் என சகல வசதிகளுடன் அவை அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து பாரிஸ் கொண்டு செல்லப்பட்ட யானைகளும் சமாளித்து வாழ்வதுபோல, அசாமில் உள்ள யானைகளாலும் இங்குள்ள காலநிலையில் வந்து வாழப்பழகிக் கொள்ள முடியும்.” என்றார் மனோகரன்.
தமிழகத்திலேயே வனத்துறையால் பராமரிக்கப்படும் யானைகள் முகாம்களில் பிடிக்கப்பட்ட யானைகள் இருக்கும் நிலையில், அசாமிலிருந்து தமிழக கோவில்களுக்கு யானைகள் கொண்டு வரப்படுவது ஏன் என்ற கேள்வியும் பலராலும் சமூக ஊடகங்களில் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு யானைகளின் எண்ணிக்கையே காரணமாக விளக்கப்படுகிறது.
யானைகள் திட்ட கணக்கெடுப்பின்படி, கர்நாடகா, அசாம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 3 மாநிலங்களில் இந்தியாவின் மொத்த எண்ணிக்கையில் பெருமளவிலான யானைகள் உள்ளன. இவற்றில் அசாமில்தான் இந்தியாவிலேயே அதிகளவிலான வளர்ப்பு யானைகள் உள்ளன.
அவ்வாறு தனியாரிடம் உள்ள யானைகளே, தற்போது நன்கொடையாளர்களால் வாங்கப்பட்டு, தமிழகக் கோவில்களுக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் தமிழக அரசால் இந்த யானைகள் வாங்கப்பட்டதாகக் கூறப்பட்டது பற்றி தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”அவை எதுவுமே அரசால் வாங்கப்படவில்லை. அந்த யானைகள் அனைத்தும் நன்கொடையாளர்களால் வாங்கிக் கொடுக்கப்பட்டவை.” என்று பதிலளித்தார்.
பட மூலாதாரம், X/RameshOffcl
தமிழக முகாம் யானைகளை கோவில்களுக்கு கொடுக்காதது ஏன்?
ஆனால் அசாமிலிருந்து யானைகளைக் கொண்டு வருவது தேவையற்ற நடவடிக்கை என்று கூறும் காட்டுயிர் ஆர்வலர் முரளீதரன், தமிழகத்திலுள்ள யானைகள் முகாம்களில் உள்ள யானைகளிலேயே ஓர் ஆண், ஒரு பெண் என்று ஒவ்வொரு ஜோடி யானையையும் கோவில்களுக்கு வழங்கலாம் என்கிறார்.
யானைகள் பாதுகாப்பு தொடர்பாக, பல்வேறு வழக்குகளை நடத்தி வரும் முரளீதரன், அவை சார்ந்து பல்வேறு முக்கிய தீர்ப்புகளையும் பெற்றிருக்கிறார். தான் நடத்திய வழக்கு ஒன்றில், ஒவ்வொரு கோவிலிலும் ஆண், பெண் யானைகளை ஒன்றாக வைத்திருக்க வேண்டுமென்று உத்தரவு பெற்றிருப்பதையும் குறிப்பிட்டார்.
பிபிசியிடம் பேசிய முரளீதரன், ”முதுமலையில் நூறாண்டு காலமாக நடந்து வந்த யானைகள் சவாரியை அறமில்லாத செயல் என்று கூறி நிறுத்தியுள்ள வனத்துறை, இந்த யானைகளை 3 ஆயிரம் கி.மீ. கடந்து கொண்டு வர எப்படி அனுமதிக்கிறது என்பதுதான் புதிராகவுள்ளது. அசாமில் இருக்கும் யானைகள் இங்கு வந்தால் இங்குள்ள கோவில்களில் அவை சிறப்பாகப் பராமரிக்கப்படும், புத்துயிர் பெறுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் கர்நாடகாவில் வைத்திருப்பது போன்று அவற்றை ஜோடியாகப் பராமரிக்க வேண்டும்.” என்றார்.
கர்நாடகத்திலுள்ள ஸ்ரீ மஞ்சுநாத சுவாமி (தர்மஸ்தலா) கோவிலில் பராமரிக்கப்படும் ஆண் யானையும், பெண் யானையும் இணைந்து ஒரு குட்டி ஈன்றிருப்பதைச் சுட்டிக்காட்டிய முரளீதரன், அதேபோன்று தமிழகத்திலும் ஒவ்வொரு கோவிலிலும் இணையாக யானைகளை வைத்துப் பராமரிக்க வேண்டுமென்ற கூறினார்.
ஆனால் ஓர் ஆண் யானையும், பெண் யானையும் ஒரே இடத்தில் இருப்பதால் மட்டுமே அவை இனப்பெருக்கம் செய்துவிடுமென்று கூறமுடியாது என்று கூறும் வனகால்நடை மருத்துவர் மனோகரன், அதற்குப் பல்வேறு சூழல்களும் அவசியம் தேவைப்படும் என்கிறார். யானைகளுக்கும் சமூக வாழ்க்கை அவசியம் என்பதால் கோவில்களில் இணையாக ஓர் ஆண், பெண் யானையை வைப்பது நல்லது என்றார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
அசாமிலிருந்து யானைகளை தமிழகக் கோவில்களுக்குக் கொண்டு வரப்படுவது குறித்து, தமிழக தலைமை வன உயிரினக் காப்பாளர் ராகேஷ் டோக்ராவிடம் பிபிசி தமிழ் சில கேள்விகளை முன் வைத்தது. அதற்கு விளக்கமளித்த அவர், தற்போது வந்துள்ள ஒரு யானையைத் தவிர மற்ற யானைகளுக்கான முழு அனுமதியை அசாம் அரசு தந்த பின்பே, தங்களால் தடையின்மைச் சான்று வழங்கப்படும் என்றார்.
பிபிசியிடம் பேசிய தலைமை காட்டு உயிரினக் காப்பாளர் ராகேஷ் டோக்ரா, ”இந்த யானைகள் அனைத்தும் அங்குள்ள தனியாரிடம் நன்கொடையாளர்களால் வாங்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான உரிமைச்சான்று, யானை இடமாற்ற போக்குவரத்து விதிமுறை ஆகிய அனைத்தையும் உறுதி செய்யும் பொறுப்பு அசாம் மாநில தலைமை வன உயிரினக் காப்பாளருக்கே உள்ளது. இருப்பினும் நாமும் அதைக்கவனிப்போம்.” என்றார்.
”தமிழகத்தில் யானைகள் முகாம்களில் 110-க்கும் அதிகமான யானைகள் உள்ளன. அந்த யானைகளை கோவில்களுக்குக் கொடுப்பது சாத்தியமற்றது. ஏனெனில் இங்குள்ள யானைகளை காட்டுயிர் தன்மையுடன் வளர்ப்பு யானைகளாக மாற்றியுள்ளோம். அது மட்டுமின்றி அவற்றைக் கொடுப்பது கொள்கை ரீதியாக அரசு எடுக்க வேண்டிய முடிவாகும். நாம் இங்கு பிடிக்கப்படும் அல்லது தாயிடமிருந்து பிரிந்து வரும் யானைகளை கூடுமான வரை மீண்டும் காட்டிற்குள் அனுப்பவே முயற்சி செய்கிறோம். அவற்றில் சில முயற்சிகள் தோல்வியடையும்போது அவற்றை கும்கியாக மாற்றுகிறோம். ஏனெனில் அவற்றை அப்படியே காட்டில் விட்டால் குட்டி யானைகள் இறந்துவிடும்.” என்றார் தலைமை வன உயிரினக் காப்பாளர் ராகேஷ் டோக்ரா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு