• Mon. Jul 20th, 2026

24×7 Live News

Apdin News

தமிழ் – முஸ்லிம் கட்சிகளின் புதிய கூட்டணியும் சர்வதேசப் பொறிமுறையும் | அ. நிக்ஸன்

Byadmin

Jul 19, 2026


* அமைச்சுப் பதவிகளை பெறும் போது சிறுபான்மை சமூகம். தமிழர்களுடன் பேசும் போது, தேசிய இனம்!!  முஸ்லிம் காங்கிரசின் இரட்டை முகம்…

* ”உள்ளக பொறிமுறை” என்பதை தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் ஏற்கிறதா?

2012 இல் கிழக்கில் முதலமைச்சர் பதவியை ஏற்க மறுத்து மகிந்தவுடன் கூட்டுச் சேர்ந்த ஹக்கீம்!

— — —

2009-இற்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர் அரசியலில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ வெற்றிடம் மற்றும் சர்வதேசத் தலையீடுகளின் பின்னணியில், கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக முயற்சிகளைக் கூர்மையான அரசியல் பார்வையுடன் அணுகுவது அவசியமாகிறது.

சுவிஸ்லாந்து மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சில முக்கிய கலந்துரையாடல்கள் இங்கு கவனிக்கத்தக்கவை.

இப்பின்புலத்தில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் மிகச் சமீபகால இணக்க அரசியலானது ‘சுயநிர்ணய உரிமை’ என்ற அடிப்படைக் கோட்பாட்டைப் பலவீனப்படுத்தி, தமிழ் மொழிசார் தேசிய அடையாள அரசியலை வெறும் ‘சிறுபான்மை’ என்ற சொல்லாடலுக்குள் சுருக்குகிறதா என்ற பலமான கேள்வி எழுகிறது.

ஆறு தமிழ்க் கட்சிகளின் புதிய கூட்டணி உருவாக்கம் அத்தகைய கேள்வியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை சார்ந்த விவகாரங்களில் ஜனநாயக வழியில் மாத்திரமே அரசியல் உரிமைகளைக் கோர முடியும்.

(இக்கட்டுரையாளர் ஏற்கனவே அது பற்றிய விளக்கங்களையும் கருத்தியல்களையும் இப்பத்தியில் தந்திருக்கிறார்)

ஆனால், இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்ற முறைமைக்குள் இருந்து கொண்டு நிரந்தர அரசியல் தீர்வை ஒருபோதும் தேட முடியாது; மாறாக, நாடாளுமன்றத்தை ஒரு பேச்சுக் களமாக மாத்திரமே பயன்படுத்த முடியும்.

ஆகவே, கட்சி அரசியல் மற்றும் தேர்தல் அரசியல் முறைமைகளைக் கடந்து, ஈழத்தமிழர் விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரு புள்ளியில், அதாவது ஒருமித்த குரலில் செயற்பட வேண்டும்.

ஆனால், அதற்குரிய அரசியல் பக்குவம் இதுவரையும்  உருவாகவில்லை என்பதை, ஆறு தமிழ்க் கட்சிகளின் புதிய கூட்டணி உருவாக்கம் எடுத்தியம்பியுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த, வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தி இயங்கும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன.

மலையக மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இக்கூட்டில் இணைந்துள்ளமை மிகப் பெரிய வெற்றியாகக் காண்பிக்கப்படுகிறது.

கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதைப் பொதுவாக வரவேற்கலாம்; அதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், இங்கு எழும் கேள்வி என்னவென்றால், இந்த மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் முன்னைய அரசாங்கங்களில் இணைந்து அமைச்சுப் பதவிகளை வகித்திருந்தார்கள் அல்லவா?

அது மாத்திரமல்ல, அவர்கள் சிங்கள அரசியல் தலைவர்களுடன், குறிப்பாக அவர்களின் கட்சிகளின் சின்னங்களின் கீழ் இணைந்து சில தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்டுமிருக்கின்றனர்.

அத்துடன், அரசாங்கத்துடன் இக்கட்சிகள் பேரம் பேசும்போது, குறிப்பாக அமைச்சுப் பதவிகள், அரச திணைக்களங்களின் உயர் பதவி நியமனங்கள் பற்றிப் பேசும்போது, தங்களைச் சிறுபான்மை இனமாக முன்னிறுத்துகின்றனர்;

அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் தங்கள் சமூகப் பிரச்சினைகள், அரசியல் உரிமைகள் பற்றிப் பேசும்போது, தங்களை ஒரு “தேசிய இனம்” என்ற அரசியல் அடையாளத்துடன் சமநிலையில் நிறுத்திச் செயற்படுகின்றனர்.

இது அவர்களின் தந்திரோபாயமான ஓர் இரட்டை நிலைப்பாடு ஆகும்.

மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் தங்களைத் தேசிய இனம் என்று அடையாளப்படுத்துவதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை.

எனினும், அமைச்சுப் பதவிகளைப் பெறும்போது மாத்திரம், தாங்கள் ஒரு தேசிய இனம் என்று துணிந்து சொல்ல ஏன் தயங்குகின்றனர் என்ற கேள்வியில் நியாயம் உண்டல்லவா?

குறிப்பாக முஸ்லிம் கட்சிகள்.

கிழக்கு மாகாண சபைக்கு 2012 இல் நடைபெற்ற தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களைக் கைப்பற்றியது.

அப்போது, 7 ஆசனங்களைப் பெற்றிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கூட்டு ஆட்சி அமைக்க அதன் தலைவர் இரா. சம்பந்தன் அழைப்பு விடுத்தார்.

முதலமைச்சர் பதவியைப் பொறுப்பேற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஆனால், அந்த அழைப்பை நிராகரித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கொழும்பில் ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்சவின் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து, தவணை முறையில் முதலமைச்சர் பதவியைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு புறந்தள்ளிவிட்டு, அரசாங்கத்துடன் கைக்கோர்த்த நோக்கம் என்ன? அதிகாரவர்க்கத்துடன் இணைந்து செய்பட்டால் சலுகைகளை பெற முடியும் என்ற நோக்கம் தானே?

ஆகவே, அமைச்சுப் பதவிகளுக்கான பங்கீட்டில், தங்களை ”சிறுபான்மை சமூகம்” என கூறும் இரகசிய உத்தியின் உள்நோக்கம் இப்போது புரிகிறது அல்லவா?

அது மாத்திரமல்ல ஹக்கீம் நீதி அமைச்சராகவும் இருந்தார். ஐ.நா மனித உரிமைச் சபைக்குச் சென்று என்ன சொன்னார்? இவை எல்லாம் இலகுவில் மறக்க முடியாத துயர சம்பவங்கள்..

ஆகவே, ஜே.வி.பி என்ற கட்சியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ்க் கட்சிகள் என்ற மரபுவழி அடையாளங்களைத் தவிர்த்து, குறிப்பாகத் தமது கட்சியில் நேரடியாக இணைந்துள்ள மலையகத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாத்திரமே முக்கியத்துவம் கொடுத்துள்ள பின்னணியில், இப்புதிய கூட்டணி தொடர்பான சந்தேகங்கள் வலுத்துள்ளதை மறுக்க இயலாது.

டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரின் தமிழ்க் கட்சிகள் மற்றும் சிங்களக் கட்சிகளில் அங்கம் வகிக்கும் வடக்கு-கிழக்கு தமிழ்ப் பிரதிநிதிகளைத் தவிர, தமிழ்த் தேசியக் கட்சிகள் எதுவும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை வகித்ததில்லை.

2015-ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் மாத்திரம் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் பதவியை வகித்திருந்தார்.

அதே அரசாங்கத்தில், பெரும் இழுபறிக்கு மத்தியில் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார்.

இவற்றைத் தவிர, “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற ஒரு கட்டமைப்பிற்குள் அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்ததில்லை.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அவர்கள் அவ்வப்போது மாத்திரம் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்; நாடாளுமன்றத்தின் சில முக்கிய குழுக்களிலும் அங்கம் வகித்துள்ளனர்.

ஆகவே, இப்பின்னணியில் அதுவும் அநுர அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் உண்மையான நிலைப்பாடு என்ன?

இக்கூட்டணி ஒரு தேர்தல் கூட்டு அல்ல என்று கூறப்பட்டிருந்தாலும், மக்களின் பொதுப் பிரச்சினைகளான காணி விவகாரம், மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் மற்றும் புதிய அரசியல் யாப்பு பற்றிய முன்மொழிவு ஆகிய மூன்று நோக்கங்களே இதன் பிரதான இலக்குகளாக உள்ளன.

ஆகவே, இப்புதிய கூட்டணியின் இந்த மூன்று முதன்மை நோக்கங்களும் ஈழத்தமிழர் அரசியல் உரிமையின் அடிப்படைகளை மறுதலிக்கின்றன அல்லவா?

எனவே, இது பற்றிய அவர்களின் நிலைப்பாடு என்ன?

அதாவது, 2009-இற்குப் பின்னரான சூழலில், “சர்வதேச நீதி” எனவும், நிரந்தர அரசியல் தீர்வுக்குப் “சர்வதேச பொறிமுறை” என்றும் கோரப்பட்டு வந்த பின்னணியில், இப்புதிய கூட்டணியின் பிரதான மூன்று நோக்கங்களும் இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பின் உள்ளகப் பொறிமுறையை நேரடியாகவே ஏற்கின்றன அல்லவா?

போர்க்குற்றங்கள் பற்றிய ஐ.நாவின் ‘ஒஸ்லாப்’ (OSLAP) எனப்படும் சாட்சியப் பொறிமுறைக்குரிய பொறுப்புக்கூறலுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 2027-ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது.

அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் மாதம் மனித உரிமைகள் சபை ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையும் வெளிவரவுள்ளது.

ஆகவே, இப்பின்னணியில் உருவாகியுள்ள இப்புதிய கூட்டணியின் உண்மை நோக்கம் என்ன?

2015-ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கக் காலத்தில் இருந்தே, ஈழத்தமிழர்களின் நியாயங்களின் வீரியத்தன்மையைக் குறைத்து, இலங்கையின் உள்ளகப் பொறிமுறையைத் தமிழர்கள் ஏற்க வேண்டும் என்ற தொனி வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ரணில் – மைத்திரி அரசாங்கக் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எந்த அளவில் நிறைவேற்றப்பட்டன என்ற உண்மை, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்குத் தெரியாததும் அல்ல.

தாம் ஏமாற்றமடைந்ததாகச் சம்பந்தன், 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் மனம் திறந்து பேசியிருந்தார்.

2009-இல் போர் முடிவடைந்ததும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என அமெரிக்க, இந்தியத் தூதுவர்கள் நம்பிக்கையுடன் கூறியதாகவும், ஆனால் 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை எனவும் சம்பந்தன் தனது உரையில் மேற்கோள் காட்டியிருந்தார்.

அமெரிக்க இந்திய அரசுகளிடம் இதற்கான நீதியையும் அப்போது கோரியிருந்தார்.

அதேநேரம், இப்புதிய கூட்டணி வடக்கு – கிழக்கு தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் என்று வரையறுத்து, இதனைச் “சிறுபான்மைச் சமூகங்களின் ஒற்றுமை” எனக் கற்பிதம் செய்கிறது.

தங்களைத் “தேசிய இனம்” என அடையாளப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களும், எந்த அடிப்படையில் தங்களைச் “சிறுபான்மைக் கட்சிகள்” என்ற பொதுச் சொல்லாடலுக்குள் இணக்கிக் கொண்டனர் என்ற கேள்வியும் உண்டல்லவா?

ஆகவே, பொறுப்புடன் செயற்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கட்சிகள், முன்னுக்குப் பின் முரணான அரசியல் செயன்முறைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து, நிரந்தரத் தீர்வுக்கான “சர்வதேச பொறிமுறை” ஒன்றை நிறுவும் முயற்சியில் ஈடுபட மறுப்பது ஏன்?

அல்லது அது முடியாத காரியமா? அப்படியானால் மக்களுக்கு அது பற்றி பகிரங்கமாக சொல்ல வேண்டும் அல்லவா?

ஆனால், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் குறிப்பாகக் கிழக்கு மாகாண முஸ்லிம் பிரதிநிதிகளுடன், முதலில் மனம் திறந்து உரையாடி, இந்த ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பை மாற்றி, சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வுக்கு வழி சமைக்க முடியாது என்று கூறிவிட முடியாது.

தற்போதைய அநுர அரசாங்கத்தின் செயற்பாடுகள், மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை மிக ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியுள்ளன.

குறிப்பாக சந்திரிகா, மகிந்த, கோட்டாபய, ரணில் ஆகியோர் ஈழத்தமிழர் உரிமை சார்ந்த விவகாரங்களில், கட்சி அரசியலுக்கு அப்பால் எவ்வாறு ஒரு புள்ளியில் நின்று செயற்பட்டார்களோ, அதே வியூகத்தையே அநுரவும் கையாளுகின்றார் என்பதை அவர்கள் தற்போது நன்கு புரிந்துள்ளனர்.

ஆனால், இது பற்றிய விழிப்புணர்வுகள் மேலும் அவசியமானவையாகும்.

ஆகவே, இக்கூட்டணியை அதற்கு ஏற்றவாறு பயன்படுத்த வேண்டுமே தவிர, சிங்கள அரசியல் தலைவர்களிடம் பேரம் பேசும் அமைப்பாக மாத்திரம் இயங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

இக்கூட்டணி, சஜித்தின் எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்துவதாக அமையலாம் அல்லது மேலும் பேரம் பேசும் நோக்கம் கொண்டதாகவும் இருக்கலாம்…

அதேநேரம், இக்கூட்டணி உருவாக்கத்திற்கும் தமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அமைச்சர் சந்திரசேகரன் மறுத்துள்ளதையும் அவதானிக்க வேண்டும்.

ஆகவே, ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய புவிசார் அரசியல் போட்டியில், குறிப்பாக இந்தோ – பசுபிக் விவகாரத்தில், இலங்கை அரசு தமது பக்கமே இருக்க வேண்டும் என்ற ஒற்றை நிலைப்பாட்டில் அமெரிக்க, இந்திய அரசுகள் உள்ளன; சீனாவுக்கும் இதே சிந்தனை தான் உண்டு.

இதனால், சிங்கள அரசியல் தலைவர்கள் விரும்புகின்ற “உள்ளகப் பொறிமுறை” என்ற உத்திக்கு, அமெரிக்க – இந்திய அரசுகள் ஏதாவது ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ஒரு கட்டாயமும் அவர்களுக்கு உண்டு.

ஆனால், இப்புதிய கூட்டணி உருவாக்கத்தின் பின்னால் இந்தியா இருக்க வாய்ப்பில்லை.

அதேநேரம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சமஸ்டி ஆட்சி முறையை முன்வைத்துத் தமிழ்நாட்டில் பேசி வருகிறது.

புதுடில்லியின் அழைப்பின் பேரிலேயே தாம் இந்தியாவுக்குச் சென்றதாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, இப்புதிய கூட்டணி உருவாக்கத்திற்கு எந்தவொரு வெளிச்சக்தி காரணமாக இருந்தாலும், “உள்ளகப் பொறிமுறையே” அரசியல் தீர்வுக்கு உகந்தது என்பதை அனைத்துக் கட்சிகளும் ஏற்கும் பக்குவம் உருவானால், அதனை இந்தியாவும் மறுதலிக்கப் போவதில்லை எனலாம்.

அது அமெரிக்க சீன அரசுகளுக்கும் விருப்பத்துக்குரிய ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகமேயில்லை.

குறிப்பு – (உதயன் சஞ்சிவி ஞாயிறு வார இதழிலில் வெளியான கடடுரை)

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

By admin