0
தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயற்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (21) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர் தமிழ் இனப்படுகொலைக்கான தருணம் பார்த்திருந்து அதனை வழிநடத்த அரசியல்வாதிகளை நேரடியாக களத்தில் இறக்கியதோடு பௌத்த துறவிகளையும், குண்டர்களையும், அடிமட்ட சிங்கள மக்களையும் ஏவி தமிழர்களின் அவலக் குரலும் அவர்களின் சாம்பலிலும் மகிழ்ந்த கருப்பு ஜூலை 83ஐ தொடர்ந்து 42 ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களில் இனப்படுகொலை நிகழ்த்திக் கொண்டிருக்கையிலும் “இனப்படுகொலை நிகழவில்லை” என கூறுவதோடு “சமூக புதைகுழிகளை தோண்ட தேவை இல்லை” எனக் கூறுவதும் இனப்படுகொலையில் நீட்சியின் கோரம் மட்டுமல்ல, நீதி, நியாயம், உண்மை, பௌத்த தர்மம் என்பவற்றை சமூக புதைகுழிக்குள் தள்ளியதன் வெளிப்பாடு எனவும் கூறலாம்.
ஜெ.ஆர். ஜெயவர்த்தன தலைமையில் 6/5 பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய திறந்த பொருளாதாரக் கொள்கையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கம் அரசாங்கத்துக்கு எதிராக 1980 இல் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தினை அராஜகமாக அடக்கி ஒடுக்கி அது மீண்டும் எழுச்சி கொள்ளாதிருக்க இன அழிப்பு நாடகத்தினை 1983 ஜூலையில் நிறைவேற்றியதோடு தமிழ் இளைஞர் கையில் ஆயுதத்தையும் திணித்து சிங்கள தொழிலாளர் வர்க்கத்தையும் கிராமிய சிங்கள இளைஞர்களையும் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பி நாட்டை அழிவிற்குள் தள்ளினர்.
வடக்கு கிழக்கு தமிழர் தேசத்திற்கு வெளியே தமிழர்களின் பொருளாதாரத்தை அழித்து தீட்டு கொளுத்தியவர்கள் பச்சிளம் பாலகர்கள், வாலிபர்கள் வயது முதிர்ந்தோர் கண்ணில் கண்டோரை தாக்கியும் 3000க்கும் அதிகமானோரை வெட்டியும், குத்தியும் தீக்குள் தள்ளியும் இனப்படுகொலை செய்து வெறியாட்டம் நடத்தினர். இதற்கு அரசு வளங்களும் படையினரும் பாவிக்கப்பட்டமை அனைவரும் அறிந்ததே.
இதனைத் தொடர்ந்து தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு எங்கும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இதுவே நடந்தது.
இனப்படுகொலையின் உச்சம் 2009ல் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தபோதும் அதில் திருப்தி கொள்ளாத சிங்களப் பேரினவாதம் தொடர்ந்தும் பல்வேறு வடிவங்களில் இன அழிப்பு இனப்படுகொலை என்பவற்றை தொடர்ந்துகொண்டே இருப்பதை நாம் அவதானிக்கின்றோம்.
ஒரு தடவை புத்த பெருமான் தம்மிடம் வந்த ஒரு தாயிடம் “மரணம் நிகழாத வீட்டில் இருந்து ஒருபிடி எள் கொண்டு வாருங்கள்” என்றார். அது போன்று சர்வதேச சமூகமும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடமும் கேட்கின்றோம். இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் கூறுங்கள் “தமிழர் தாயகத்தில் இனப்படுகொலை நிகழாத கிராமத்திலிருந்தும், அதனால் பாதிக்கப்படாத குடும்பங்களில் இருந்தும், கண்ணீர் சிந்தாத மக்களிடமிருந்தும் ஒரு பிடி நெல் கொண்டு வாருங்கள்” என்று கூறுங்கள். அவர்களால் அதனை செய்ய முடியாது. காரணம் தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயற்பட்டதே வரலாறு.
தமிழர்களைப் பொறுத்தவரை நாட்டில் 1983ஆம் ஆண்டு ஜூலை மட்டுமல்ல கறுப்பு. இந்த நாட்டின் சுதந்திரம், அரசியல் யாப்பு, பயங்கரவாத தடை சட்டம், அரசியல் யாப்பின் 13ஆம் திருத்தம் எனபவற்றோடு ஆட்சியில் அமரும் அத்தனை அரசாங்கங்களும் பேரினவாத கடும் கருப்பே. இவர்களிடமிருந்து தமிழர்களுக்கு எந்த நீதியும் கிட்டப் போவதில்லை.
ஆதலால் 1983 கறுப்பு ஜூலையின் 42ஆம் நினைவாண்டில் சர்வதேச வல்லரசுகளே, ஐ.நா மன்றமே, ஐ.நா மனித உரிமை பேரவையே உங்கள் அரசியல் காக குற்றவாளிகள் கூண்டில் இருக்கும் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கான நீதியை கையளிக்காது; சுதந்திர தேசமாய் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு இனப்படுகொலை புரிந்துள்ளது என்பதை ஏற்றுக் கொண்டு, இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவதோடு தமிழர்களுக்கான அரசியல் நீதிக்கு வழி விடுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.