• Thu. Jun 11th, 2026

24×7 Live News

Apdin News

தளபதி பால்ராஜைப் பார்க்க ஒன்றுகூடிய இராணுவத் தளபதிகளை ஏன் கைது செய்யவில்லை? | அ.நிக்ஸன்

Byadmin

Jun 11, 2026


தளபதி பால்ராஜை நேரில் பார்க்க ஒன்று கூடிய இலங்கை இராணுவ தளபதிகள் – அதிகாரிகள்!

— — —

* ஜெனரல் கமால் குணரத்னவைக் கைது செய்யுமாறு ஏன் பேரினவாதிகள் கோரவில்லை?

* இராணுவத் தளபதி எழுதினால் போர்க்கால வரலாறு, தமிழ் பிரதிநிதி பேசினால் பயங்கரவாதமா?

* பேரினவாதிகளின் இரட்டைப் போக்கு அம்பலம் !!!

— — —

இலங்கை இராணுவத்தின் முன்னாள் உயர் அதிகாரியும், பின்னர் பாதுகாப்புச் செயலாளராகவும் பதவி வகித்திருந்த ஜெனரல் கமால் குணரத்ன, தனது ‘ரோட் டூ நந்திக்கடல்’ (Road to Nandikadal) என்ற நூலில் விடுதலைப் புலிகளின் தளபதி பால்ராஜின் இராணுவ ஆளுமை பற்றி வியப்புடன் விரிவாக விவரித்திருக்கிறார்.

இருப்பினும், இந்த விவரிப்பானது ஈழத்தமிழர்களின் அரசியல் நியாயங்களை ஏற்பதாக அர்த்தமாகாது.

மாறாக, அரசியல் மற்றும் இராணுவ ரீதியாகப் பலம் பொருந்தியதொரு விடுதலை இயக்கத்தை, இலங்கை இராணுவம் வெற்றிகொண்டுள்ளது என்ற பெருமையை சிங்களத் தேசியவாதப் பொதுப்புத்திக்குப் பறைசாற்றுவதே குணரத்னவின் பிரதான இராஜதந்திர நோக்கமாகும்.

ஆனாலும், இந்நூலில் விடுதலைப் புலிகளின் தளபதிகளின் போர்க்கள வீரமும், ஒழுக்கப் பண்புகளும், அவர்கள் ஓர் விடுதலை இயக்கம் என்ற உண்மையும், நூலின் சில இடங்களில், விரும்பியோ விரும்பாமலோ வெளிப்பட்டே இருக்கின்றது…

இராணுவ ரீதியாகப் பலம் வாய்ந்த புலிகளை முறியடித்து விட்டோம், அடுத்ததாக அரசியல் தளத்தில் ஈழத்தமிழர்களை வெற்றி பெற வேண்டும் என்பதைப் பேரினவாதத் தரப்பு உணர்ந்து கொண்டதற்கு இந்நூல் பிரதான காரண காரியமாக அமைந்தது எனலாம்.

அவ்வாறு உணர்ந்தமை, 2009 இற்குப் பின்னரான சூழலில், தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மிக ஆபத்தானதாகவே அமைந்துள்ளது.

‘இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் ஈழத்தமிழர்கள் கௌரவமாக வாழ முடியும்’ என்ற அரசியல் நம்பிக்கையை தோற்றுவிக்க வேண்டும் என்ற கருத்தியலை, அப்போது பிரதமராக இருந்த ரட்ணசிறி விக்கிரமநாயக்க, 2009 டிசம்பர் மாதம் நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் நாசூக்காக இடித்துரைத்திருந்தார்.

அதேநேரம், 30 வருடகால போரின் போது, விசேடமாக இறுதிப் போர்க் கால கட்டத்தில் நேருக்கு நேர் மோதிய இலங்கை இராணுவத் தளபதிகள், புலிகளின் தளபதி பால்ராஜின் ஆளுமையை ஏற்றுக்கொண்டு, அதனைத் தங்கள் நூல்களில் ஆவணப்படுத்தியுள்ளதை, சிங்கள பிரதிநிதிகள் எவரும் நாடாளுமன்றத்தில் கண்டிக்கவில்லை.

இத்தகைய பின்னணியில், தமிழ் பிரதிநிதி துரைராஜா ரவிகரன், நாடாளுமன்றத்தில் பால்ராஜ் பற்றிப் பேசியதற்காகச் சிங்களப் பேரினவாதிகள் கொழும்பில் தொடராக ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது, அரசியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் முற்றிலும் முறையற்றது.

இது தென்னிலங்கையில் இன்னும் மாறாத அரசியல் முதிர்ச்சி இன்மையையும், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை மனப்பாங்கையும் தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

2003 ஆம் ஆண்டு, சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் பால்ராஜ் தரையிறங்கிய போது, அங்கு ஒன்று கூடியிருந்த இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளும் அதிகாரிகளுமான 15 பேர், அவரைக் கைது செய்யக் காத்திருக்கவில்லை.

மாறாக, “தங்களுக்குப் பெரும் சவாலாக விளங்கிய ஒரு திறமையான எதிரிப் படைத் தளபதியை நேரில் பார்ப்பதற்காகவே கூடி நிற்கிறார்கள்” (just to have a look at him) என்று, தூதுவர் எரிக் சொல்ஹெய்மிடம் கூறியதாகக் கமால் குணரத்ன தனது நூலில் விவரிக்கிறார்.

விமான நிலையத்தில் இராணுவ அதிகாரிகள் கூடி நின்ற போது, சொல்ஹெய்ம் அச்சமடைந்திருந்தார்.

உண்மையை அறிந்த பின்னரே, சொல்ஹெய்ம் அமைதியடைந்ததாக கமால் குணரத்ன விவரிக்கிறார்.

ஆகவே, இங்கு எழும் ஆழமான அரசியல் கேள்வி இதுதான்….

பால்ராஜின் ஆளுமையை வரலாறாகப் பதிவு செய்த கமால் குணரத்னவைத் தேசத்துரோகி என்றோ, அவரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றோ சிங்களப் பேரினவாதிகள் ஏன் இதுவரையில் கோரவில்லை?

தமிழ் மக்களின் பிரதிநிதி பேசும்போது மாத்திரம் ஏன் இந்த எதிர்ப்பு?

ஒரு சிங்கள இராணுவ அதிகாரி எழுதினால் அது போர்க்கால வரலாறு, அதனையே ஒரு தமிழ்ப் பிரதிநிதி நாடாளுமன்றத்தில் பேசினால் அது பயங்கரவாதமா?

இது பேரினவாதத்தின் அப்பட்டமான இரட்டைப் போக்கையும், தமிழர்களுக்கு எதிரான இனவாத அரசியல் காழ்ப்புணர்ச்சியையும், பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது என்று பொருள் கொள்ள முடியும் அல்லவா?

1920 களில் இருந்து வளர்ச்சியடைந்து வரும் பேரினவாதத்தின் நாகரிகமற்ற அரசியல் வரலாற்று தொடர்ச்சியை உறுதிப்படுத்துகிறது அல்லவா?

போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்த பின்னரும், வரலாற்றை வரலாறாகப் பார்க்கும் முதிர்ச்சி பேரினவாத சக்திகளிடம் இன்னும் வரவில்லை என்பதையே கொழும்பில் அரங்கேறும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நிரூபித்துள்ளன.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

 

By admin