கரூர்: “தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் செய்தியாளர்களிடம் கூறியது: “வாங்கல் பகுதியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. இதை வைத்து சிலர் மட்டமான, கீழ்த்தரமான, கேவலமான அரசியல் செய்கின்றனர். அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர் என்னுடன் இருப்பது போன்ற புகைப்படங்களை பதிவிடுகின்றனர். அவர் இங்கு வருவதற்கு முன்பு அதிமுகவில் தான் இருந்தார்.
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 2021ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 5 நிமிடங்களில் மணல் அள்ளலாம் என நான் கூறியது, மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்காகவும், உள்ளூர் மணல் தேவைக்காகவும் மட்டுமே. ஏதோ லாரிகளில் சென்று ஆற்றில் மணல் அள்ளிக் கொள்ளலாம் என கூறியது போல சித்தரிக்கின்றனர்” என்று செந்தில் பாலாஜி கூறினார்.