(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள் உள்பட 6 பேர், தங்கள் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் 4 பேர், ஏற்கெனவே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் இன்று (ஜூலை 2) தவெகவில் இணைந்தனர்.
இதற்கான நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் தவெகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், ரமேஷ், ஜெகதீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
பட மூலாதாரம், @OfficeofminMRV
படக்குறிப்பு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் த.வெ.க வெற்றி பெற்றாலும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை.
காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் தங்களிடம் இருந்த தலா 2 எம்.எல்.ஏக்களின் ஆதரவை த.வெ.கவுக்கு வழங்கின.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தவெக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக தலைமை முடிவுக்கு எதிராக 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவெக ஆட்சிக்கு ஆதரவளித்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தரப்பை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தார்.
பின்னர், அதிமுகவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும், மீண்டும் அதிமுக தலைமையுடன் சமரசமாகிவிட்டனர். சிலர் அதிருப்தியுடன் வெளியில் இருந்தனர்.
பட மூலாதாரம், @Vijayabaskarofl
படக்குறிப்பு, கோப்புப் படம்
அதன் பின்னர் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, அம்பை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.கவில் இணைந்தனர்.
இந்நிலையில், தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சி.விஜயபாஸ்கர் த.வெ.கவில் இணைவதாக அறிவித்திருந்தார்.
முன்னதாக, ‘தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகள் காரணமாக அதிமுக சோதனைகளை எதிர்கொள்கிறது’ எனவே தான் அதிமுகவிலிருந்து விலகுவதாக அவர் கடந்த ஜூன் 16ஆம் தேதி அறிவித்திருந்தார்.
அதேபோல முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் ‘திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்தார். இதனால் தான் அதிமுகவிலிருந்து விலகுவதாக’ நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரும் இன்று த.வெ.கவில் இணையவுள்ளார்.