0
தாய்லாந்து – கம்போடியா எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே இரு தரப்பு படைகளுக்கும் கடும் மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்த மோதலில் இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர். 2 மாதங்களேயான சிசுவும் இதில் அடங்கும்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், தாய்லாந்தும் கம்போடியாவும் உடனே அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க அழைப்பு விடுத்தார்.
இதற்கு இருதரப்பும் இணங்கியிருப்பதாகவும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
வன்முறை முடிவுக்கு வரும்வரை அவ்விரு நாடுகளுடனான வர்த்தகத்தை நிறுத்தி வைக்கப் போவதாக எச்சரித்த பின்னர் அது சாத்தியமானது என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.
தொடர்புடைய செய்தி : தாய்லாந்து – கம்போடியா எல்லையில் மோதல்; இரு பொதுமக்கள் உயிரிழப்பு!
அதேவேளை, தாய்லாந்துத் தற்காலிகப் பிரதமர் பும்தாம் விசாயசாய் அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றி கூறினார்.
அமைதிப் பேச்சுக்குத் தாய்லாந்து கொள்கையளவில் இணங்கியிருப்பதாக தெரிவித்த விசாயசாய், கம்போடியாவிடமிருந்து உண்மையான கடப்பாட்டைக் காண விரும்புவதாகக் கூறினார்.
தாய்லாந்து – கம்போடிய எல்லை மோதல் காரணமாக 100,000க்கும் அதிகமானோர் புகலிடம் தேடி வெளியேறியுள்ளனர்.