பட மூலாதாரம், Getty Images
தாய்லாந்து, கம்போடியா இடையே நிலவும் தொடர் பதற்றம் வியாழக்கிழமையன்று (ஜூலை 24) எல்லைப் பகுதியில் கடுமையான மோதலாக வெடித்தது.
அதன் விளைவாகக் குறைந்தபட்சம் 12 தாய்லாந்து நாட்டவர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் எனவும் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கம்போடியா தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா, எத்தனை பேர் பலியாகியுள்ளனர் என்பது தெரியவில்லை.
இந்த மோதல் தொடங்கியதற்குக் காரணம் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு என்றும் இருதரப்பும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கின்றன.
கம்போடியா ஏவுகணைகளை ஏவியதாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது. கம்போடியாவின் ராணுவ நிலைகள் மீது தாய்லாந்து விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த மோதல் எப்படி ஏற்பட்டது? அது போராக உருவெடுக்கும் ஆபத்து உள்ளதா?
பட மூலாதாரம், Reuters
பதற்றத்திற்கு காரணம் என்ன?
இது சமீபத்தில் தொடங்கிய சச்சரவு இல்லை. தாய்லாந்து, கம்போடியா இடையிலான சர்ச்சை ஒரு நூற்றாண்டுக்கும் முன்பே தொடங்கியது. அதாவது, கம்போடியா பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தபோது, இரு நாடுகள் இடையே எல்லை வகுக்கக்கப்பட்டபோது, இந்த சச்சரவு தொடங்கியது.
ஆனால், 2008ஆம் ஆண்டில்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் பிரச்னை அதிகாரபூர்வமாக தீவிரமடைந்தது. இரு நாடுகளுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய பகுதியில் 11ஆம் நூற்றாண்டு கோவில் ஒன்று அமைந்துள்ளது. அதை, யுனெஸ்கோ பாரம்பரிய தலமாக பதிவு செய்வதற்கு கம்போடியா முயன்றதே அதற்குக் காரணம்.
அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த ஆண்டுகளில் அவ்வப்போது நடந்த மோதல்களில் இருதரப்பிலும் ராணுவ வீரர்கள், பொது மக்கள் எனப் பலர் கொல்லப்பட்டனர்.
ஷார்ட் வீடியோ
கடந்த மே மாதம் நடைபெற்ற மோதலில் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இந்தப் பதற்றம், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையை எட்டியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில், இரு நாடுகளுமே பரஸ்பரம் எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்து வந்தன. தாய்லாந்தில் இருந்து காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது. அங்கிருந்து பெறப்பட்டு வந்த மின்சாரம் மற்றும் இணைய சேவைகளையும் நிறுத்தியது.
அண்மை வாரங்களில் இரு தரப்பு எல்லைகளிலும் ராணுவ நடமாட்டம் அதிகரித்துள்ளன.
அண்மைத் தாக்குதல் பற்றி தாய்லாந்து கூறுவது என்ன?
பட மூலாதாரம், BBC/Lulu Luo
ஜூலை 24ஆம் தேதி என்ன நடந்தது என்பது பற்றி தாய்லாந்தும் கம்போடியாவும் வெவ்வேறு விளக்கங்களை அளித்துள்ளன.
வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை சுமார் 07:30 மணிக்கு எல்லையில் உள்ள தாய்லாந்து ராணுவ நிலைகளை உளவு பார்க்க கம்போடிய ராணுவம் டிரோன்களை அனுப்பியதாக தாய்லாந்தின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது.
அதன் பின்னர், “ஏவுகணைகளால் ஏவப்படும் எறிகுண்டுகளை ஏந்திய கம்போடிய வீரர்கள் எல்லையில் குவியத் தொடங்கினர். தாய்லாந்து தரப்பில் இருந்த வீரர்கள் கூக்குரலிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை” என தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதோடு, கம்போடிய வீரர்கள் காலை சுமார் 08:20 மணிக்கு தாக்குதலைத் தொடங்கியதால் தாய்லாந்து தரப்பினர் பதில் தாக்குதல் நடத்த வேண்டியிருந்ததாகவும் அவர் கூறினார்.
பிஎம்-21 ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்திருந்த வீடுகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க் உள்ளிட்ட பொது இடங்களையும் சேதப்படுத்தியதாக கம்போடியா மீது தாய்லாந்து குற்றம் சுமத்தியுள்ளது.
தாய்லாந்தை குற்றம் சாட்டும் கம்போடியா
ஆனால், தாய்லாந்து வீரர்கள்தான் காலை 06:30 மணிக்கு மோதலைத் தொடங்கியதாக கம்போடியா கூறுகிறது. அதாவது, முந்தைய ஒப்பந்தத்தை மீறிய தாய்லாந்து வீரர்கள், எல்லை அருகே இருக்கும் கெமர்-இந்து கோவில் வரை முன்னேறி வந்து முள்வேலி அமைத்ததாகவும் கம்போடியா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
அதன் பின்னர் “தாய்லாந்து வீரர்கள் காலை 7:00 மணிக்குப் பிறகு ஒரு டிரோனை செலுத்தியதாகவும், சுமார் 08:30 மணிக்கு வானத்தை நோக்கி சுட்டதாகவும்” கம்போடியா தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாலி சோசியாட்டா தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
காலை 08:46 மணிக்கு, தாய்லாந்து படையினர் முன்னறிவிப்பின்றி கம்போடிய படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக மாலி சோசியாட்டாவை மேற்கோள் காட்டி ப்னோம் பென் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. மேலும், “அதனால், தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான உரிமையைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை” என அவர் கூறியதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இவற்றோடு, தாய்லாந்து அதிகப்படியான படைகளைக் குவித்து, கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி, கம்போடிய பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக சோசியாட்டா குற்றம் சாட்டினார்.
தாய்லாந்து, கம்போடியா இடையே போர் வெடிக்குமா?
கம்போடியாவுடனான பிரச்னை “நுட்பமானது” என்றும், அதைக் கவனமாக, சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டுத் தீர்க்க வேண்டும் என்றும் தாய்லாந்தின் இடைக்கால பிரதமர் பும்தம் வெச்சயாச்சை கூறினார்.
இந்தப் பிரச்னையை அமைதியாக தீர்க்கவே கம்போடியா விரும்புவதாகவும், “ஆயுதப் படை ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் படை மூலம் பதிலடி கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்றும் அந்நாட்டுப் பிரதமர் ஹுன் மனெட் கூறினார்.
கடந்த காலங்களில் தீவிரமான துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று இருந்தாலும் பதற்றம் விரைவிலேயே தணிக்கப்பட்டது. அதே பாதை மீண்டும் தேர்வு செய்யப்படும் என பிபிசி செய்தியாளர் ஜோனதன ஹெட் கருதுகிறார்.
அதேவேளையில், தற்போது இந்த சண்டையில் இருந்து நம்பிக்கையுடன் பின்வாங்கத் துணியும் தலைவர்கள் இருதரப்பிலும் இல்லை என்றும் அவர் எச்சரிக்கிறார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கு செல்வது பாதுகாப்பானதா?
தற்போது வரை இந்த மோதல் குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டுமே நடைபெறுகிறது.
இருப்பினும், சமீபத்திய வாரங்களில் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகளை இந்தப் பகுதியில் “குறிப்பாக பிரேஹ் விஹேர் கோவில், தா இக்வை கோவில், தா முயென் தோம் கோவில் போன்ற சுற்றுலாத் தலங்களில் கூடுதல் கவனம்” செலுத்துமாறு ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தாய்லாந்து எல்லையைத் தவிர்க்கும்படி கம்போடியாவில் இருக்கும் தனது குடிமக்களை சீனா வலியுறுத்தியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு