பட மூலாதாரம், Russian Foreign Ministry/Handout/Anadolu via Getty Images
ஆப்கானிஸ்தானின் தாலிபன் அரசை அங்கீகரித்த முதல் நாடாகியுள்ளது ரஷ்யா
தாலிபன் காபூலைக் கைப்பற்றி ஆட்சிக்கு வந்த பிறகான நான்கு வருடங்களில் இது அவர்களது மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் நகர்வு, இதுவரை தாலிபன் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வரும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என நம்புவதாக ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முட்டாகி தெரிவித்தார்.
ரஷ்யாவின் முடிவை துணிச்சலான முடிவு என அவர் விவரித்தார்.
இந்த முடிவால், “எரிசக்தி, போக்குவரத்து, விவசாயம் மற்றும் கட்டமைப்பு” ஆகியவற்றில் ஆதாயம் இருப்பதாக கருதுவதாகவும். பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அபாயங்களை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தானுக்கு உதவும் எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த முடிவு பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.
“இதைப் போன்ற நடவடிக்கை ஆப்கானிஸ்தானின் மக்களை மட்டுமல்லாது, மொத்த உலகின் பாதுகாப்பை அபாயத்திற்கு உள்ளாக்குகிறது,” என ஆப்கானிஸ்தான் முன்னாள் எம்.பி. ஃபௌசியா கூஃபி தெரிவித்தார்.
அதே நேரம், ‘இது சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் ஒரு அரசை அங்கீகரிக்கிறது. இந்த ஆட்சி பெண்களுக்கு எதிரானது மட்டுமல்லாது தொடர்ந்து பொது உரிமைகளை நீக்கிவருகிறது,’ என ஆப்கான் வுமென் பொலிடிக்கல் பார்டிசிபேசன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
பெண்கள் உரிமைகளை மதிப்பதாக தாலிபன் அரசு முன்னர் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த உரிமைகள் ஆப்கான் பண்பாடு மற்றும் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றிய அவர்களது சொந்த விளக்கத்தை பொறுத்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல், ஆப்கானிஸ்தானில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளிக்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளதுடன், பெண்கள் பெரும்பாலான பணிகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவதில்லை.
கூடுதலாக பெண்கள் தனியாக தொலைதூரம் பயணம் மேற்கொள்ள கட்டுப்பாடுகள் உள்ளன; அவர்கள் ஒரு ஆண் உறவினர் இல்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை.
பட மூலாதாரம், Sefa Karacan/Anadolu via Getty Images
இப்போதுவரை சர்வதேச அரங்கில் தாலிபன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை சர்வதேச அளவில் உருவாகியிருக்கும் ஒத்த கருத்தில் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை ஒரு பிரிவை ஏற்படுத்தியிருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
தாலிபனுக்கு முறைப்படியான அங்கீகாரம் அளிக்காமல், குறுகிய அளவிலான பேச்சுவார்த்தைகள் நடத்துவதன் மூலம் ஒருவருக்கு தேவையானவற்றை செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை இதுவரை இருந்தது. ஆனால் நேரடி அங்கீகாரம் அளித்ததன் மூலம் ரஷ்யா இந்த சிந்தனைக்கு சவால் விடுத்துள்ளது.
வாஷிங்டனை சேர்ந்த சிந்தனைக்குழுவான வில்சன் மையத்தைச் சேர்ந்த தெற்காசிய நிபுணர் மைக்கேல் கூகல்மேன், “ஆப்கானிஸ்தானில் இருக்கும் தாலிபன் அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடாக ரஷ்யா இருக்கிறது. சீனா அடுத்ததாக இருக்கலாம். இப்போது வரை நாடுகள் தங்களது சொந்த நலனுக்காக தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம், ஆனால் ஒரு அதிகாரப்பூர்வ உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பது சர்வதேச ஒருமித்த கருத்தாக இருந்தது. ஆனால் தற்போது இந்த கருத்து தற்போது உடைந்து வருவதாக தெரிகிறது.” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யாவின் முடிவை சீனா வரவேற்றுள்ளது. “ஆப்கானிஸ்தான் எங்களது அண்டை நாடு மற்றும் பாரம்பரிய நட்பு நாடு. ஆப்கானிஸ்தான் சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படக்கூடாது என்பதை சீனா எப்போதும் நம்பி வந்திருக்கிறது,” என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு இருக்கும் ராஜதந்திர சவால்
பட மூலாதாரம், WAKIL KOHSAR/AFP via Getty Images
ரஷ்யாவின் இந்த முடிவை புரிந்துகொள்ள நாம் முதலில் ரஷ்யா மற்றும் சீனா இடையேயான தொடர்பை பார்க்கவேண்டும் என்கிறார் சர்வதேச உறவுகள் விவகார நிபுணர் ஸ்வஸ்தி ராவ்.
“சீனா ஏற்கனவே தாலிபனுடன் நேரடித் தொடர்பில் உள்ளது. அதற்கு அங்கு பல முதலீடுகள் உள்ளன. இப்போது முறையான அங்கீகாரம் அளித்த முதல் நாடாக ரஷ்யா உள்ளது. இது ஒரு உத்தி மாற்றம் ஆகும்.” என அவர் தெரிவித்தார்.
1979ஆம் ஆண்டில், ரஷ்யா ராணுவ ரீதியாக ஆப்கானிஸ்தானில் தலையிட்டு, பல பத்தாண்டுகள் அந்த நாட்டை உள்நாட்டு போர் மற்றும் நிலையற்றதன்மையில் சிக்கவைத்தது.
ஆனால் மூஜாஹிதீன் போராட்டக்காரர்களுடன் சோவியத் யூனியன் தொடர்ந்து போரிட வேண்டியிருந்தது. அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா போன்ற நாடுகள் இந்த போராட்டக்காரர்களுக்கு பெரிய அளவில் பொருளாதார மற்றும் ராணுவ உதவி அளித்தன.
ஆனால் 1980-களின் பிற்பகுதியில் அமெரிக்கா அளித்த ஸ்டிங்கர் ஏவுகணைகள் காரணமாக சோவியத்தின் வான் ஆற்றல் பலவீனமடைந்து, ராணுவத்தை திரும்பப் பெறுவது கோர்பசேவின் தலைமையில் 1988ஆம் ஆண்டு தொடங்கியது.
2021ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறிய பின்னர், தாலிபன் ஆட்சியை மீண்டும் பிடித்தது. இந்த முறை சர்வதேச சூழல் மாறிவிட்டது. இப்போது ரஷ்யா தாலிபனை தனது ‘பயங்கரவாத பட்டியலில்’ இருந்து நீக்கிவிட்டது. இருநாடுகளிடையேயான வர்த்தக மற்றும் ராஜாங்க உறவுகளைத் தீவிரப்படுத்தியது.
“ஐஎஸ் கோரசனை (சன்னி முஸ்லிம் கடும்போக்கு பிரிவு ) கட்டுப்பாட்டுக்குள் வைக்க ரஷ்யா பல்வேறு வகையான அழுத்தங்களை அளிக்கிறது, ஆனால் தாலிபனுடன் நேரடியாக பேசுவதும் அவசியம். இதில் பயங்கரவாத எதிர்ப்புக் கோணமும் உள்ளது.” என்கிறார் ஸ்வஸ்தி ராவ்.
“காவ்கசஸில் (கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவை உள்ளடக்கிய பகுதியை குறிக்கும் சொல்) ரஷ்யாவின் செல்வாக்கு குறைந்துள்ளது. இரானும் பலவீனமாக உள்ளதுடன், சிரிய தளமும் அபாயத்தில் உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், ஆப்கானிஸ்தான் ரஷ்யாவுக்கு ஒரு வலுவான தளமாக மாறலாம்.”
யுக்ரேன் போர் காரணமாக ரஷ்யாவின் சர்வதேச அந்தஸ்து வலுவிழந்திருப்பதால், சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா புதிய தளங்களை பார்ப்பதாக அவர் நம்புகிறார்.
இதில் “யுக்ரேன் போருக்குப் பின் ரஷ்யா, சீனாவை விட சிறிய பங்காளியாகிவிட்டதால் ரஷ்யாவுக்கு சீனாவின் ஆதரவும் கிடைக்கும்,” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
ஜேஎன்யுவின் ஸ்கூல் ஆஃப் இண்டர்நேஷனல் ஸ்டடிஸின் முன்னாள் தலைவரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமானவர் அனுராதா சினாய், “தாலிபன் தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு” என்கிறார்.
மேலும் பேசிய அவர், “ரஷ்யா போன்ற நாடுகள் ஏன் அங்கீகாரம் அளிக்கின்றனர்? தாலிபன்தான் அந்த சமூகத்தின் இயல்பான அமைப்பு என அவர்களுக்கு தெரியும். உங்களால் அவர்களை வெளியிலிருந்து மாற்றமுடியாது. அது உள்ளேயிருந்து ஒரு விவாதம் அல்லது இயக்கம் ஏற்பட்டால்தான் மாறமுடியும்.” என்றார் அவர்
மேலும் அவர், “இதனால்தான் தாலிபனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அவரகளது உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிடாமல் இருக்கவும் ரஷ்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் விரும்புகின்றன. இதுதான் அவர்களது கொள்கை” எனத் தெரிவித்தார்.
தாலிபனுடனான ரஷ்யாவின் நட்பு, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவில் ஏற்பட வாய்ப்புள்ள நிலையற்றதன்மையிலிருந்து ரஷ்யா தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி என அவர் நம்புகிறார். அதே போல் எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானுக்கு குறுக்கே குழாய் அமைப்பது அல்லது வேறு ஏதேனும் பிராந்திய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், அதில் தாங்கள் பங்கேற்பதை உறுதி செய்ய ரஷ்யர்கள் விரும்புகின்றனர் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இந்தியா தாலிபானுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கவில்லை. இதுவே இந்தியாவின் பாரம்பரிய கொள்கையாக இருந்துள்ளது என விவரிக்கிறார் ஸ்வஸ்தி ராவ்.
“இதுவே உலகம் முழுவதும் இந்தியாவின் பாணியாக எப்போதும் இருந்திருக்கிறது. எனவே அது எப்படி திடீரென தாலிபனுக்கு ராஜ்ஜிய அங்கீகாரத்தை வழங்கும்? அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தனது உறவைவும் பராமரிக்க விரும்புவதால் இந்தியா இதைச் செய்யாது,” என அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் இந்த முன்னெச்சரிக்கையின் பின், மேற்கத்திய நாடுகளுடன் அதற்கு இருக்கும் விரிவான வர்த்தக மற்றும் ராஜாங்க நலன்கள் உள்ளன.
“அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் அதன் உறவுகளை பராமரிக்க விரும்புவதால், இந்தியா சற்று தயங்குகிறது.” என்கிறார் அனுராதா சினாய்.
இந்தியா அதிகாரப்பூர்வமாக தாலிபனை அங்கீகரிக்காவிட்டாலும், ஆப்கானிஸ்தானுடன் ‘அங்கீகாரம் இல்லாமல் தொடர்பு கொள்வது’ என்ற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.
இந்த ஆண்டு மே மாதத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானின் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகியுடன் தொலைபேசியில் பேசினார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் பேசி அது தொடர்பாக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டதது இது முதல்முறை. அந்த தொலைபேசி அழைப்பின் போது, பஹல்காம் தாக்குதலுக்கு முட்டாகி கண்டனம் தெரிவித்ததை எஸ் ஜெய்சங்கர் பாராட்டினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின், இரு நாடுகளும் ஒரு அறிக்கையை வெளியிட்டன. ” இந்தப் பேச்சுவார்த்தையில், ஆப்கான் மக்களுடனான எங்களது பாரம்பரிய நட்பு மற்றும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தேவைகளுக்கு எங்களுடைய தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை குறிப்பிடப்பட்டன. இந்த ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்து செல்வதற்கான வழிகள் மற்றும் ஆதாரங்கள் விவாதிக்கப்பட்டன.”
அதே நேரம், “ஆப்கானிஸ்தான் குடியரசின் வெளியுறவு அமைச்சர் மெளலவி அமிர் கான் முட்டாகி மற்றும் இந்திய குடியரசின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. இருதரப்பு உறவுகள், வர்த்தகம் மற்றும் ராஜாங்க உறவுகள் ஆகியவற்றின் மீது இந்த உரையாடல் கவனம் செலுத்தியது,” என ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம் அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசு உருவாக்கப்படவேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்திருக்கிறது.
இந்தியா மற்றும் தாலிபன் இடையே தொடர்புகள் அண்மை மாதங்களில் அதிகரித்துள்ளது. ஜனவரியில் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, அமிர் கான் முட்டாகியை துபையில் சந்தித்தார்.
“அங்கீகாரம் இல்லாமல் தொடர்பு வைத்துக்கொள்வது என்ற கொள்கையை எதிர்காலத்திலும் இந்தியா தொடர்ந்து பின்பற்றலாம். ஆம் இந்த தொடர்புகள் ஆழமாவதை அது நிச்சயம் உறுதிசெய்யும்.” என்று இந்த முன்னேற்றத்தைப் பற்றி குறிப்பிடுகிறார் ஸ்வஸ்தி ராவ்.
ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு ஏன் முக்கியமானது?
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தாலிபன் ஆட்சியை மீண்டும் கைப்பற்றியபோது, அது ராஜாங்க மற்றும் உத்தி ரீதியாக இந்தியாவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது
இந்தியா, ஆப்கானிஸ்தானில் முதலீடு செய்த பல பில்லியன் டாலர்கள் அனைத்தும் வீணாகிவிடும் என தோன்றியது.
சாலைகள், எரிசக்தி, அணைகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட ஆப்கானிஸ்தானில் 500க்கும் மேற்பட்ட திட்டங்களில் இந்தியா கிட்டத்தட்ட 3 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
இந்தியா, ஆப்கான் ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவ பயிற்சி அளித்தது, ஆயிரக்கணகான மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளித்ததுடன், அங்கு ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டியது.
ஆனால், “இந்தியா கடந்த மூன்று ஆண்டுகளாக வெளிநாட்டு சேவை அதிகாரி ஒருவர் மூலமாக தாலிபன்களுடனான தொடர்ப்பில் இருக்கிறது.” என ஆப்கானிஸ்தானுக்கான இந்திய முன்னாள் தூதர் ஜெயந்த் பிரசாத் கடந்த ஆண்டு ஜனவரியில் பிபிசி செய்தியாளர் செளதிக் பிஸ்வாஸிடம் தெரிவித்திருந்தார்.
“ஆப்கானிஸ்தானில் இந்தியாவுக்கு அதன் மூலோபாய ஆழம் தேவை. இந்தியா பல வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் இந்தியாவால் கட்டப்பட்டது. இந்தியாவின் இணை இணைப்புத் திட்டங்கள் பாகிஸ்தானை தவிர்த்துவிட்டுத்தான் முன்னோக்கி செல்லமுடியும் என்பதால் இந்தச் சூழ்நிலை முக்கியமானது,” என விளக்குகிறார் ஸ்வஸ்தி ராவ்.
பல விவகாரங்களில் குறிப்பாக தெரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) விஷயத்தில் பாகிஸ்தானுடன் தாலிபன் ஒத்துப்போவதில்லை என்று கூறியவர், “இந்த பலவீனத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள இந்தியா முயற்சித்து வந்திருக்கிறது.” என்றும் தெரிவித்தார்.
“ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு எப்போதுமே நலன் சார்ந்த முரண் இருந்ததில்லை. பல வளர்ச்சி திட்டங்களில் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவியுள்ளது.” என்று தெரிவிக்கிறார் அனுராதா சினாய்.
அவரின் கூற்றுப்படி, “தாலிபன் அரசும் ஒப்பீடு அளவில் இந்தியாவுடன் மென்மையாக இருந்திருக்கிறது. ஆப்கான் குடிமக்கள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவிற்கு வருகின்றனர். இதுவும் இரண்டு நாடுகளிலும் ஒரு நேர்மறையான தோற்றத்தைப் பராமரிக்கிறது.”
இதைப் போன்ற ஒரு சூழலில், ராஜாங்கம், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் என மூன்று கோணங்களிலும் ஆப்கானிஸ்தான் இந்தியாவுக்கு முக்கியமானது என நிபுணர்கள் நம்புகின்றனர்.
இப்போது என்ன?
பட மூலாதாரம், MONEY SHARMA/AFP via Getty Images
ரஷ்யா தாலிபனை அங்கீகரித்து, சீனாவும் ஏற்கனவே தாலிபனுடன் ஆழமான வணிக மற்றும் அரசியல் உறவுகளை கட்டமைத்து வரும் சூழ்நிலையில் இந்தியாவுக்கு இரண்டு வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். ஒன்று அங்கீகரிக்காமல் தொடர்பு கொள்ளும் கொள்கையை மேலும் சிறிது காலம் தொடரவேண்டும், அல்லது முறையான அங்கீகாரம் வழங்குவதை நோக்கி மெதுவாக நகரவேண்டும்.
ஸ்வஸ்தி ராவ் இதைப்பற்றி கூறுகையில், “முழுமையான தூதரக அங்கீகாரம் அளிக்கும் நாளில் இந்தியா தன்னையே ஒரு பெட்டியில் பூட்டிக்கொள்ளும்” எனத் தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி, அனைத்து வாய்ப்புகளையும் திறந்து வைத்திருப்பதுதான் இந்தியாவின் கொள்கையாக இருக்கும்.
“சமநிலைப்படுத்துவதுதான் இந்தியா எடுக்கக்கூடிய அடுத்த புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும். அதாவது சீனாவும், பாகிஸ்தானும் அங்கு முழு ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக இந்தியா தாலிபனுடன் தனது தொடர்பை அதிகரிக்கும், ஆனால் அது உடனடியாக அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்காது,” என்கிறார் ஸ்வஸ்தி ராவ்.
“இந்தியா தனது உத்தியை சார்பற்றதாக வைத்திருக்கவேண்டும். பாகிஸ்தான் இதைச் செய்தால் இந்தியா இதை செய்யவேண்டும் என்பதாகவோ, ஐரோப்பா அழுத்தம் தருவதால் இந்தியா இதைச் செய்யவேண்டும் என்பதாகவோ இருக்கக் கூடாது.” என்கிறார் அனுராதா சினாய்.
இந்தியா தாலிபனுடன் பேச்சுவார்த்தையை படிப்படியாக அதிகரிக்கவேண்டும் என்பதுடன் அங்கு உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சியில் இந்தியா பெரிய பங்காற்றவேண்டும் என்றால் ஒருநாள் அது அங்கீகாரம் அளிக்கவேண்டியிருக்கும் என அவர் நம்புகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு