7
இந்தியாவின் மத்திய குஜராத்தையும் சௌராஷ்டிராவையும் இணைக்கும் கம்பீரா பாலத்தின் நடுப்பகுதி நேற்று (09) திடீரென உடைந்து விழுந்தது.
இதனால் அந்நேரத்தில் பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததில் 15 பேர் உயிரிழந்தனர் என குஜராத் மாநிலச் சுகாதார அமைச்சர் ருசிகேஷ் பட்டேல் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் கடந்த சில நாள்களாகக் கடும் மழை பெய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
“இந்த விபத்தில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். விபத்து நடந்ததுமே உயர்மட்டக் குழுவை சம்பவ இடத்திற்கு முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்” என குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார்.
சம்பவம் ஆழ்ந்த வேதனையைத் தருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அத்துடன், உயிரிழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.
கம்பீரா பாலம் 1985ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ருசிகேஷ் தெரிவித்தார்.
இதற்குமுன்னர் 2022இல் குஜராத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தொங்கும் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்ததில் 132 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.