“தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமையும் கூட்டணி, திமுக, பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும், அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் இந்த முடிவு திமுகவின் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதேநேரம், இது திமுக எதிர்ப்பு வாக்குகளைக் குறிவைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு என்ற கருத்தையும் முன்வைக்கிறார்கள்.
“தவெக தலைமையில் 2026 தேர்தலுக்காக அமையப்போகும் கூட்டணியின் தேர்தல் வேட்பாளர் விஜய்தான்” என இன்று நடைபெற்ற தவெக-வின் செயற்குழு கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. ஆகையால், இனி எந்தெந்த கட்சிகள் தவெக கூட்டணியில் இணைய ஆர்வம் காட்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் பேசியது என்ன?
சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 4) நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கட்சியின் மாநில நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் விஜய்தான் என்றும், கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கே முழு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பட மூலாதாரம், @TVKVijayTrends
படக்குறிப்பு, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய்
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது மாநில அளவிலான மாநாடும், ஜூலை மாதத்தில் இருந்து முகவர்கள் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 5 மண்டல மாநாடு மற்றும் மாவட்ட அளவிலான 120 மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பின்னர் செயற்குழுவில் பேசிய விஜய், “கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. ஒன்றிய அளவில் மலிவான அரசியல் ஆதாயத்துக்காக மக்களை மதரீதியில் பிளவுபடுத்தி வேற்றுமையை ஏற்படுத்துகிறது பாஜக.
அவர்களின் விஷமத்தனமான வேலைகள் தமிழகத்தில் எடுபடாது. பெரியாரையும் அண்ணாவையும் அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றி பெற முடியாது” என்று கூறினார்.
மேலும், “சுயநல அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவுடன் கூட்டணி வைக்க தமிழக வெற்றிக் கழகம் ஒன்றும் திமுகவோ அதிமுகவோ இல்லை” என்று விமர்சித்த விஜய், “அவர்களுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை என்பதில் தவெக உறுதியாக இருக்கிறது. தவெக தலைமையில் அமையும் கூட்டணி, திமுக, பாஜகவுக்கு எதிரானதாகத்தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல. உறுதியான தீர்மானம்” என்று கூறினார்.
திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கமா?
பட மூலாதாரம், Getty Images
“விஜயின் இந்த முடிவு திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு விடுக்கப்படும் மறைமுக அழைப்பு” என்கிறார் மூத்தப் பத்திரிக்கையாளர் பிரியன்.
“திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதைக் கூறிவிட்டார். அதே நேரம், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவர்களது தரப்பில் அதிகாரபூர்வமாக கூறிவிட்டதால், இனி அதிமுகவும் தவெக கூட்டணிக்கு வர ஆர்வம் காட்டாது. நாம் தமிழர், பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணிக்குள் இருக்கும் கட்சிகளுக்குத் தனது அறிக்கை மூலம் மறைமுக அழைப்பு விடுத்துள்ளார் நடிகர் விஜய்” என்கிறார் பிரியன்.
ஆனால் இதுகுறித்து பிபிசியிடம் பேசிய திமுகவின் செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், “விஜய் பேசியிருப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. எங்கள் கூட்டணி உறுதியாக உள்ளது என்பதைத்தான் நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்” என்று கூறினார்.
மேலும், “தமிழ்நாட்டில் சில நிகழ்வுகள் நடக்கும்போது, அதுகுறித்து கருத்து தெரிவிக்க – அது அரசுக்கு எதிராக இருந்தாலும் சரி – கூட்டணிக் கட்சிகளுக்கு முழு உரிமை உண்டு. ஆனால் அதை வைத்தே கூட்டணியில் சலசலப்பு என எடுத்துக்கொள்ள முடியாது,” என்று விளக்கமளித்தார்.
விஜய் பேசியதில் எந்தப் புதிய விஷயமும் இல்லை எனக் கூறிய ரவீந்திரன், “திமுக கூட்டணியில் விரிசல் இல்லை, விரிசல் வருவதற்கான வாய்ப்பு இல்லை” எனக் கூறினார்.
பாஜக கூறுவது என்ன?
பட மூலாதாரம், @narayanantbjp
படக்குறிப்பு, பாஜக கூட்டணிக்கு தவெக வரவில்லை என்றாலும்கூட தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார் நாராயணன் திருப்பதி
தவெக தலைவர் விஜயின் முடிவு குறித்துப் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “நாங்கள் சொல்வது ஒன்றே ஒன்றுதான். திமுக எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட யார் வேண்டுமானாலும் பாஜகவின் கூட்டணிக்கு வரலாம், கதவுகள் திறந்தே இருக்கும். தேர்தலுக்கு இன்னும் அதிக நாட்கள் இருக்கின்றன. ஆனால், எங்களுடைய இந்தக் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறினார்.
அதேநேரம், பாஜக கூட்டணிக்கு தவெக வரவில்லை என்றாலும்கூட அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார் நாராயணன் திருப்பதி.
கடந்த மாதம், மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அ.தி.மு.க. தலைவர்கள் முன்பாகவே திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்த விமர்சனப் படம் திரையிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த மாநாட்டில் இந்து முன்னணி தயாரித்த காணொளி ஒன்று திரையிடப்பட்டது. அந்தப் படத்தில், பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிடக் கட்சித் தலைவர்களை விமர்சிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
‘தர்மம் காக்க, அதர்மம் அகற்ற’ என்ற வார்த்தைகள் இடம்பெற்ற காட்சியில், ‘தர்மம்’ என்ற வார்த்தை ஒலிக்கும்போது இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலனின் படமும் ‘அதர்மம்’ என்ற வார்த்தை ஒலிக்கும்போது பெரியார், அண்ணாதுரை, மு. கருணாநிதி ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தன.
இதைக் குறிப்பிட்டே, “பெரியாரையும் அண்ணாவையும் அவமதித்து அரசியல் செய்தால், பாஜக ஒருபோதும் வெற்றி பெற இயலாது” என இன்று நடந்த தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் பேசியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த நாராயணன் திருப்பதி, “அது பாஜக-வின் மாநாடு அல்ல, இந்து முன்னணி நடத்திய மாநாடு. எனவே அதை பாஜகவுடன் தொடர்புபடுத்திப் பேசுவது சரியாக இருக்காது” என்று பதிலளித்தார்.
‘பாஜகவின் நேர்மையற்ற அரசியல்’
படக்குறிப்பு, மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்
ஆனால், “உங்கள் கூட்டணி வேண்டாம் என விஜய் தெளிவாகச் சொன்ன பிறகும், அவரை இன்னும் கூட்டணிக்குள் இழுக்கப் பார்ப்பது நேர்மையற்ற அரசியல்” என பாஜகவின் நிலைப்பாட்டைக் கடுமையாக விமர்சிக்கிறார் ப்ரியன்.
மாநில உரிமைகளுக்காகப் பேசும் கட்சிக்கே தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டே விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால், பாஜக- திமுக எதிர்ப்பு வாக்குகளைக் குறிவைத்தே விஜய் இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் சிகாமணி.
“பாஜக எதிர்ப்பு நிலை என்ற உத்தியே கடந்த தேர்தலில் திமுகவின் ஆயுதமாக இருந்தது. இப்போது அதையே விஜயும் கையில் எடுத்துள்ளார். இதனால் பாஜக எதிர்ப்பு வாக்குகள் மட்டுமல்லாது திமுக எதிர்ப்பு வாக்குகளும் தனக்குக் கிடைக்கும் என்று அவர் கணிக்கிறார். அது தவறான கணக்கு,” என்கிறார் சிகாமணி.
“உண்மையில், விஜய் மற்றும் அவரது கட்சிக்கு இருப்பது அவரது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு போலி பிம்பம் மட்டுமே” எனக் கூறும் சிகாமணி, களத்தில் தம்மை வலுப்படுத்திக் கொள்ளாமல், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நிலைத்து நிற்கும் ஒரு கட்சியைத் தனது அரசியல் எதிரி என நிலைநிறுத்தும் முயற்சியை விஜய் தொடர்ந்து செய்வதாகவும் விமர்சிக்கிறார்.
“நடிகர் என்பதைத் தாண்டி, வேறு என்ன காரணத்திற்காக தமிழ்நாட்டு மக்கள் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவர் உறுதியாகப் பதிவு செய்ய வேண்டும். அதை விடுத்து, இத்தகைய பேச்சுகள், அரசியல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது” என்றும் குறிப்பிடுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் சிகாமணி.