• Tue. Jul 15th, 2025

24×7 Live News

Apdin News

“திமுக செல்வாக்கு இழந்ததையே 4 ஐஏஎஸ் அதிகாரிகளின் நியமனம் காட்டுகிறது” – பிரச்சாரத்தில் இபிஎஸ் விமர்சனம் | aiadmk general secretary eps slams dmk in cuddalore district election campaign

Byadmin

Jul 14, 2025


விருத்தாச்சலம்: “கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமித்துள்ளனர். திமுக செல்வாக்கு இழந்துவிட்டது என்பதையே இந்த நியமனம் காட்டுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

‘மக்​களை காப்​போம்: தமிழகத்தை மீட்​போம்’ என்ற தலைப்பில் கடந்த 7-ம் தேதி முதல்​கட்ட பிரச்​சார சுற்றுப்​பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி கோவை​யில் தொடங்​கி​னார். தொகு​தி​வாரி​யாக பிரச்​சா​ரம் செய்​து​வரும் நிலை​யில், திங்கள்கிழமை கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “குறிஞ்சிப்பாடியில் ஓர் அமைச்சர் இருக்கிறார். அதுவும் வேளாண்மைத் துறை அமைச்சராக இருக்கிறார். இங்கு வந்திருப்பவர்கள், விவசாயிகளுக்கு ஏதாவது செய்திருக்கிறாரா?

வேளாண் பட்ஜெட் போட்டு ஒட்டுமொத்த விவசாயிகளையும் ஏமாற்றுகிறார்கள். 20 துறைகளை ஒன்றாக சேர்த்து வேளாண் பட்ஜெட் என்று ஏமாற்றுகின்றனர். ஆயிரம் கோடிகள் கொடுக்கப்பட்டதாக பொய் தோற்றம் காட்டுகிறார்கள். நான்கு ஆண்டுகள் பட்ஜெட்டில் என்ன திட்டம் நிறைவேற்றினீர்கள்? விவசாயிகளை ஏமாற்றுகின்றனர். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும் என்று சொல்லிவிட்டு 50 நாளாக குறைத்துவிட்டனர். அதுமட்டுமின்றி சம்பளத்தையும் குறைத்துவிட்டனர்.

அதிமுக ஆட்சியில் பசுமை வீடுகள் கட்டிக்கொடுத்தோம், அதை நிறுத்திவிட்டனர். ரேஷன் கடைகளில் இரண்டு கிலோ சர்க்கரை கொடுப்பேன் என்று சொன்னார்கள், செய்யவில்லை. கேஸ் மானியம் ரூ.100 கொடுப்பேன் என்று சொன்னார்கள் செய்யவில்லை. ஏமாற்றினார்கள். கவர்ச்சிகரமாகப் பேசி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக. எப்போது பார்த்தாலும் மாதம் ரூ.1000 கொடுத்தோம் என்றே சொல்கிறார். நாங்கள் போராடியதால்தான் இந்த ஆயிரம் ரூபாய் வந்தது. இன்னும் 8 மாதம்தான் இருக்கிறது. மேலும் 30 லட்சம் பேருக்குக் கொடுக்கிறாராம். தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காகவே இதைச் சொல்லி இருக்கிறார்.

குழப்பத்தை விளைவித்து வாக்குகளைப் பெறும் ஒரே கட்சி திமுக. உங்களுடன் ஸ்டாலின் என்று நோட்டீஸை தூக்கிக்கொண்டு வருகிறார். இத்தனை ஆண்டுகள் யாருடன் இருந்தீர்கள். அவருடைய மருமகன்தான் இதற்கு இன்சார்ஜ். அவர்தான், ‘மாமா நான் விளம்பரம் அடிச்சு தரேன், நீங்க வீடு வீடா சென்று கொடுங்க’ என்று அனுப்பியிருக்கிறார். ஏராளமான திட்டங்களை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

திமுகவினர் விஞ்ஞான ஊழல்வாதிகள். அதனால் நோட்டீஸ் எடுத்துக்கொண்டு வீடு வீடாக வருவார்கள். நீங்க எல்லாம் உஷாராக இருங்கள். வீடு வீடாக வரப்போறாங்க. அப்படியெனில், நான்கு ஆண்டுகளாக மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை என்பதை அவரே ஒப்புக்கொண்டார். இன்னும் 8 மாதத்தில் என்ன செய்துவிட முடியும்?

2021-ல் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மனுக்களைப் பெட்டிக்குள் போடுங்கள் என்று சொல்லி, ஆட்சிக்கு வந்து மனுக்களை பார்த்து நடவடிக்கை எடுப்போம் என்றார். அப்புறம் எதற்கு இப்போது இந்த நோட்டீஸ்? ஏற்கெனவே குறையைத் தீர்ப்பேன் என்று சொல்லித்தானே மனு கொடுத்தாங்க. அதெல்லாம் என்னவானது? தலைவன் முதல் தொண்டன் வரை மக்களை ஏமாற்றுபவர்கள். திமுக தலைவராக ஸ்டாலின் வந்ததும் பலர் வெளியேறிட்டாங்க. இப்போது வீடு வீடாக பிச்சை எடுப்பது போல உறுப்பினர் சேர்க்கை நடத்தும் அளவுக்குப் படுபாதாளத்துக்கு போய்விட்டது திமுக.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு ஆடியோ ஒன்றில், சபரீசன் – உதயநிதி இருவரும் சேர்ந்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறார்கள் என்றார். வந்து இரண்டு வருடத்திலேயே 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்த கட்சி தேவையா? இதுக்கு ஸ்டாலின் பதிலே சொல்லவில்லை. ஸ்டாலின் தாரக மந்திரம் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன்.

ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு 4000 ரூபாய். ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2500 ரூபாய் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? ஒவ்வொரு முறையும் நான் சட்டமன்றத்தில் கேட்டபோது ஐந்து ஆண்டுகள் உள்ளது. நாங்கள் கொடுப்போம் என்கிறார்கள்.

இப்போது கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனர். ஒவ்வொரு அதிகாரிகளிடமும் 5 முதல் 10 துறைகள் ஒதுக்கீடு. இப்படி அதிகாரிகளை நியமித்தால் அவர்களது வேலையை யார் செய்வது? மக்கள் செய்தி தொடர்புத் துறை என்னவாச்சு? நான்கு ஆண்டுகள் செய்த நன்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டுமாம். நான்கு அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறோம்… உண்மைச் செய்திகளை சொல்ல வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அடுத்த அதிமுக ஆட்சியில் பதில் சொல்ல வேண்டும். அந்தந்த துறைக்கு அதிகாரிகள் இருக்கும்போது எதற்கு இந்த நான்கு அதிகாரிகள்? திமுக செல்வாக்கு இழந்துவிட்டது என்பது இதில் தெரிகிறது. (முழு விவரம் > தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்)

வள்ளலார் திருச்சபை கட்டுவதில் பொதுமக்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் அமைக்க வேண்டும். குறிஞ்சிப்பாடி தொகுதியில் அடிக்கடி மழை பாதிப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். சிப்காட்டில் பல தொழில்கள் இயங்காமல் நிறுத்தப்பட்டு இருக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் அவற்றையெல்லாம் சரி செய்து செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

மீனவர்கள் அதிகம் உள்ள தொகுதி இது என்பதால் அவர்களுடைய வாழ்வாதார முன்னேற்றத்துக்கு தேவையானவற்றை செய்து கொடுப்போம். நெசவாளர்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி என்பதால் இன்றைய தினம் அந்த தொழில் சரிந்து நலிவடைந்து உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் நிவர்த்தி செய்யப்படும். அம்மா ஆட்சியின்போது நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று 300 கோடி ஒதுக்கப்பட்டது. அவர்களுக்கு பசுமை வீடு கட்டிக்கொடுத்தது அதிமுக அரசு.

நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் அதிமுக ஆட்சியில் சம்பளம் கைகளில் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியில் அவர்களுக்கு வங்கியில் போடப்படுகிறது. அதுவும் 15 நாட்களுக்கு ஒருமுறைதான். அதிமுக ஆட்சி அமைந்ததும் மீண்டும் கையில் தினந்தோறும் கொடுகப்படும். டிராக்டர் மானியம் டயர் மானியம் உள்ளிட்டவற்றை அதிமுக கொடுக்கப்பட்டது. முறைப்படி ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு சீனியாரிட்டி படி கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் அது திமுககாரர்களுக்கு பார்த்துப் பார்த்து கொடுத்து வருகிறார்கள். கொடுக்கப்படும் மானியத்திலும் கமிஷன் வாங்கிக்கொண்டு கொடுக்கிறார்கள். இதெல்லாம் அதிமுக ஆட்சி அமைந்ததும் இதுபற்றிய ஊழல் தோண்டி எடுக்கப்படும்.

பெருமாள் ஏரி அதிமுக ஆட்சியில் தூர்வார முறையாக டெண்டர் விடப்பட்டு பணி செய்யப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செய்யாத பணிக்கு பில் போட்டு பணத்தைக் கொள்ளையடித்தனர் என்ற தகவல் வருகிறது. அதுவும் விசாரிகப்படும். பெருமாள் ஏரியில் தூர் வாராமல் இருப்பது குறித்து காலையில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் குறிப்பிட்டனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதை செய்துமுடிப்போம்.

முந்திரி கொட்டைகளை கையால் உடைப்பதற்கு பதிலாக சிறிய எந்திரம் மானிய விலையில் கொடுக்கப்படும். பலாப்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும்போது பெரிய அளவில் விவ்சாயிகள் நஷ்டம் அடைகிறார்கள். அதை பதப்படுத்தி வைப்பதற்கு விவசாயிகள் கோரிக்கை விவசாயிகள் வைத்திருக்கிறார்கள். அதுவும் அதிமுக ஆட்சி அமைந்ததும் செய்து கொடுக்கப்படும். மீனவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப நடந்துவரும் துறைமுக கட்டுமானப் பணி துரித கதியில் முடிக்கப்படும்.

திமுக காங்கிரஸ் ஆட்சியில்தான் என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய முயன்றனர். அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக ஆட்சி. என்எல்சிக்கு விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தபடுவதற்கு இழப்பீட்டுத் தொகை போதவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். முன்பு மத்திய அரசிடம் போராடி அம்மையார் பெற்றுக் கொடுத்தார். அதேபோல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன் அதையும் செய்து கொடுப்போம் என்று வாக்குறுதி தருகிறேன்.

உங்க பகுதி மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் உங்கள் பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டும் என்றால் ஒரு பொற்கால ஆட்சி வேண்டும். நானும் ஒரு விவசாயி. ஏழை மக்களின் கஷ்டத்தை உணர்ந்தவன். அடித்தட்டு மக்களின் எண்ணங்களை நிறைவேற்றக்கூடிய அரசு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு. 2026-ல் அதிமுக வெற்றி வாகை சூடும். திமுக கோட்டையை விட்டு ஓடும்” என்று தெரிவித்தார்.



By admin