• Mon. Nov 23rd, 2026

24×7 Live News

Apdin News

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுமா? டிரோன் பறக்கத் தடை, காவல்துறையினர் குவிப்பு

Byadmin

Nov 23, 2026


திருப்பரங்குன்றம் மலையில் டிரோன் பறக்கத் தடை, காவல்துறையினர் குவிப்பு - என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபத் திருநாளையொட்டி நாளை (24.11.2026) தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அங்கே 5 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் நாளையும் டிரோன் பறக்க தடை செய்யப்பட்ட சிவப்பு மண்டலமாக காவல்துறை அறிவித்துள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிடோர் பங்கேற்கவிருந்த அமைதிப் பேரணி காவல்துறை அனுமதி வழங்காததால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. விசிக சார்பில் மதுரையில் மாலை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. சீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவை திருமாவளவன் வரவேற்றுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை சரிவர கையாளவில்லை என்று தமிழக அரசை திமுக சாடியுள்ளது. விசிக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்ததற்காக தமிழக அரசை கண்டித்துள்ள தமிழக பாஜக, நாளை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

மதுரை மாநகர காவல்துறை அறிவிப்பு

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீப நாளை ஒட்டி நாளை (24.11.2026) ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்றத்திற்கு நாளை விடுமுறையாகும்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால் திருப்பரங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. அந்த பகுதிகளில் 5,500 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

By admin