படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடம் விசாரணை நடைபெறுகையில் எடுக்கப்பட்ட படம் (இடது) உயிரிழந்த காவலாளி அஜித் குமார் (வலது)கட்டுரை தகவல்
திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னர் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் மாட்டுத் தொழுவத்தில் நீதிபதி நேரில் ஆய்வு செய்துள்ளார்.
கோவிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் நகை திருடு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு.
இதனிடையே, சிவகங்கை மாவட்ட எஸ்பியை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியிடம் கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உடற்கூராய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன? அதன் பிறகு விடியவிடிய என்ன நடந்தது?
உடற்கூராய்வு அறிக்கை கூறுவது என்ன?
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அஜித்குமாரின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அங்கே வழக்கமாக ஒரு பிரேத பரிசோதனை 1 முதல் 2 மணி நேரம் மட்டுமே ஆகும். ஆனால், அஜித்குமாருக்கு செய்யப்பட்ட பிரேத பரிசோதனை 5 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூடற்கூராய்வு அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்கிறது. அதன்படி,
குறைந்தது 18 வெளிப்புற காயங்கள் உடலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மண்டையோடு தொடங்கி, கை, முதுகு, கால்கள் என அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.
உள்ளுறுப்புகளிலும் பலவிதமான காயங்கள், ரத்தக்கசிவு போன்ற மரணத்துக்குக் காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட தீவிர காயம் உயிரிழப்புக்கு நேரடியான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உளவியல் அடிப்படையில் ஏற்பட்ட அதிர்ச்சி, அழுத்தம் மற்றும் உட்புற ரத்தக்கசிவு போன்றவை கூட மரணத்துக்கு வழிவகுத்திருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் அஜித் குமார் விசாரணையின் போது போலீசாரால் தாக்கப்பட்டார் என்று குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
5 காவலர்கள் கைது – விடியவிடிய நடந்தது என்ன?
அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கையின் பேரில், விசாரணைக்கு அழைத்துச் சென்று அவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் 5 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் உடனே அடுத்தடுத்த நடவடிக்கைகளில் காவல்துறை இறங்கியது.
சிவகங்கை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இருந்து இரவு 9 மணியளவில் 5 காவலர்களையும் அழைத்துக் கொண்டு வேன் புறப்பட்டது.
இரவு 11 மணியளவில் திருப்புவனம் காவல் நிலையத்தை அந்த வேன் சென்றடைந்தது.
திருப்புவனம் காவல் நிலையத்தில் 5 காவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்களது கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.
மற்ற நடைமுறைகள் முடிந்த பின்னர் நள்ளிரவு 1.15 மணியளவில் 5 காவலர்களும் வேனில் நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நள்ளிரவு 1.45 மணியளவில் திருப்புவனம் குற்றவியல் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பாக 5 காவலர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 காவலர்களையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து திருப்புவனத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 5 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர், அதிகாலை 4.30 மணியளவில் 5 காவலர்களும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த வழக்கில் ஏற்கெனவே 6 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் தவிர 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படக்குறிப்பு, ஐந்து காவலர்களும் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்
சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
அரசியல் தலைவர்களும் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, அஜித்குமார்
வழக்கின் பின்னணி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் காவலாளியாக அஜித் குமார் (வயது 27) பணியாற்றி வந்தார். அந்த கோவிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்ற போது தங்களது நகை காணாமல் போய் விட்டதாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா என்பவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தங்களது காரை பார்க்கிங்கில் விடுமாறு காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்ததாகவும், திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்சீட்டுக்கு அடியில் வைத்திருந்த 10 பவுன் நகையை காணவில்லை என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிகிதா மற்றும் கோவில் ஊழியர்களே அஜித்குமாரை திருப்புவனம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பிறகு, நகை திருடு போனதாக கூறப்படும் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார் என்பது குற்றச்சாட்டு.