• Fri. Jul 4th, 2025

24×7 Live News

Apdin News

திருப்பூர் ரிதன்யாவின் தந்தை எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது ஏன்? வழக்கில் அரசியல் தலையீடா?

Byadmin

Jul 3, 2025


ரிதன்யா, வரதட்சனை கொடுமை, வழக்கு

பட மூலாதாரம், Boopathy

[ இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன ]

திருப்பூரைச் சேர்ந்த 27 வயது பட்டதாரி பெண் ரிதன்யா, திருமணமான 77 நாட்களில் மரணமடைந்தார். ரிதன்யாவின் கணவர் கவின்குமார் குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமைதான் இதற்கு காரணமென்று பெண்ணின் பெற்றோர் தந்த புகாரில் கணவரும், மாமனாரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் வேறு காரணங்களைக் கூறி, இந்த வழக்கை திசை திருப்ப அரசியல்ரீதியாக முயற்சி நடப்பதாக ரிதன்யாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை கவின்குமார் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

ரிதன்யா, வரதட்சனை கொடுமை, வழக்கு

பட மூலாதாரம், Boopathy

அரசியல் தலைவர்களை சந்தித்தது ஏன்?

பொய்யான காரணங்களைக் கூறி, தங்கள் மகளின் மரண வழக்கை திசை திருப்பவும் முயற்சி நடப்பதாகவும் ரிதன்யாவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் ரிதன்யாவின் பெற்றோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இதனால் இந்த வழக்கு அரசியல்ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.

அந்த சந்திப்பு குறித்து பிபிசி தமிழிடம் விளக்கிய ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, ”கவின்குமாரின் தாத்தா கிருஷ்ணன் காங்கிரஸ் மாவட்டத்தலைவராக இருக்கிறார். அதனால் அதிகாரிகளுக்கு அரசியல் ரீதியாக அழுத்தம் தரப்படுகிறது. வலுவான ஆதாரங்கள் இருந்தும் வழக்கு மிகவும் மெதுவாகக் கையாளப்படுகிறது. அதனால்தான் வழக்கை வேகப்படுத்தி முறையாக விசாரிக்க வலியுறுத்த வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவரைச் சந்தித்தேன்.” என்றார்.

தங்களுடைய மகளின் மரண வழக்கு, எந்தவொரு காரணத்தாலும் திசை திருப்பப்படக்கூடாது என்ற ஆதங்கத்தில்தான் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியதாக அண்ணாதுரை தெரிவித்தார்.

வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவரிடம் வைத்தீர்களா என்றும், அதற்காக நீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்யும் வாய்ப்புள்ளதா என்றும் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரையிடம் கேட்டதற்கு, ‘இல்லை’ என்றார்.

”இன்னும் எங்களுக்கு அரசின் மீதும், காவல்துறையின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக வழக்கை சரியாக விசாரிப்போம் என்று உறுதியளித்திருக்கிறார்கள். ஆனால் காலதாமதமாவது அச்சத்தை ஏற்படுத்துகிறது. காலஅவகாசம் அளித்துவிட்டு பொறுமையுடன் இருக்கிறோம்.

என் மகள் உயிரை இனி மீட்கமுடியாது. ஆனால் என் மகளுக்கு நேர்ந்தது போன்ற நிலைமை, இனிமேல் எந்தப் பெண்ணுக்குமே வரக்கூடாது என்றுதான் நாங்கள் போராட முடிவு செய்துள்ளோம். இங்குள்ள அதிகாரிகளின் நடவடிக்கையை பொறுத்தே எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.” என்று பிபிசி தமிழிடம் கூறினார் அண்ணாதுரை.

ரிதன்யா, வரதட்சனை கொடுமை, வழக்கு

பட மூலாதாரம், Boopathy

விசாரணை எப்படி நடக்கிறது?

விசாரணை நடைமுறைகள் குறித்து விளக்கிய அண்ணாதுரை ”சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு பத்தே நிமிடங்கள் வந்து போகுமாறு ஆர்டிஓ (வருவாய் கோட்டாட்சியர்) அழைத்தார். காலை 11 மணிக்குச் சென்றோம். மாலை 5 மணிக்கு அவர் வந்தார். வந்து எங்களிடம் எதுவும் விசாரிக்கவில்லை. எல்லாவற்றையும் படித்துப் பார்த்துவிட்டீர்களா, கையெழுத்துப்போடுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறி எங்கள் வாக்குமூலத்தில் கையெழுத்து வாங்கி அனுப்பிவிட்டார்” என்றார்.

வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தவும், நியாயமாக நடத்த வேண்டுமென்றும் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், டிஐஜி மற்றும் மேற்கு மண்டல ஐஜி என காவல்துறையின் உயரதிகாரிகளைப் பார்த்து முறையிட்டீர்களா என்று கேட்டபோது, யாரையும் இதுவரை பார்க்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். மகளை இழந்து வேதனையில் நிற்கும் தங்களையும், தங்கள் உறவினரையும் டிஎஸ்பி , ஆர்டிஓ என்று அதிகாரிகள் அலைக்கழித்து, மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினர்.

பல்வேறு கொடுமைகள் தனக்கு நேர்ந்ததாக ரிதன்யா கூறிய பின்பும், அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தது ஏன் என்று ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரையிடம் கேட்டபோது, ”எனது மகன் தவறு செய்து விட்டான். அதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன், இனிமேல் என் மகனை ஒழுங்காகப் பார்த்துக் கொள்கிறேன் என்று வயதான பெண் ஒருவர் (கவினின் தாய்) உறுதி கொடுக்கும்போது எப்படி நம்பாமல் இருப்பது…அந்த பெண் கொடுத்த நம்பிக்கையில்தான் எங்கள் மகளையும் மீண்டும் பேசி அனுப்பி வைத்தோம்.” என்றார்.

வழக்கை திசை திருப்ப முயற்சியா?

வழக்கை திசை திருப்புவதற்கு கவின்குமாரின் தந்தை வழி தாத்தா கிருஷ்ணன் தரப்பு முயற்சி செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து, கிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் கேள்விகளை எழுப்பியது. அதை முற்றிலும் மறுத்த அவர், இந்த வழக்கு தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஒருவர் மூலமாக தமிழக முதல்வரிடம் பேசியதாக அவர்கள் கூறுவது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டு என்று தெரிவித்தார்.

கிருஷ்ணன், கடந்த 1996–2011 இடையிலான 5 ஆண்டுகள் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக இருந்துள்ளார். தற்போது திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கிறார்.

மேலும் தொடர்ந்த அவர், ”எங்கள் குடும்பத்தையே நிர்மூலமாக்கும் நோக்கத்துடன் அபாண்டமான குற்றச்சாட்டுகளைக் கூறிவருகின்றனர்” என்றார்.

ரிதன்யா, வரதட்சனை கொடுமை, வழக்கு

பட மூலாதாரம், Krishnan

படக்குறிப்பு, கவின்குமாரின் தந்தை வழி தாத்தா கிருஷ்ணன்
பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ், ”வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 நாட்கள்தான் ஆகிறது. பல தரப்பிலும் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவினாசி டிஎஸ்பி தலைமையில் விசாரணை துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. கவினின் தாய் சித்ராதேவிக்கு உடல்ரீதியான பாதிப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கண்டிப்பாக, நியாயமாகவும் உரிய முறையிலும் விசாரணை நடத்தப்படும்.” என்றார்.

விசாரணை என்ற பெயரில் தங்களையும், உறவினர்களையும் அலைக்கழிக்கின்றனர், வழக்கை திசை திருப்ப அரசியல்ரீதியாக அழுத்தம் தரப்படுகிறது என்று ரிதன்யா குடும்பத்தினர் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கேட்பதற்காக, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், அவினாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோரை தொடர்பு கொண்டபோது இருவரிடமும் பதில் பெறமுடியவில்லை.

வழக்கில் நடந்தது என்ன?

திருப்பூர் மாவட்டம் கைகாட்டிபுதுாரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் அண்ணாதுரையின் 27 வயது மகள் ரிதன்யா, எம்எஸ்சி–சிஎஸ் படித்தவர். இவருக்கும், பழங்கரையைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகனான எம்பிஏ பட்டதாரி கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11 அன்று திருமணம் நடந்துள்ளது.

திருமணமான 77 நாட்களில், கடந்த ஜூன் 28 அன்று ரிதன்யா மரணமடைந்தார். இதுதொடர்பாக சேயூர் காவல்நிலையத்தில் முதலில் தற்கொலை வழக்கு (BNS 194(3)) பதிவு செய்யப்பட்டது.

மரணத்திற்கு முன்பாக தனது தந்தை அண்ணாதுரைக்கு, சில ஆடியோக்களை ரிதன்யா அனுப்பியுள்ளார். ஆனால் மொபைலில் ‘நெட்’டை அணைத்து வைத்திருந்ததால் அதை அண்ணாதுரை உடனடியாகப் பார்க்கவில்லை.

அன்று இரவு, ரிதன்யாவின் மரணம் குறித்து உறவினர்களுக்கு தகவல் தருவதற்காக அவரின் உறவினர் ஒருவர், ‘நெட்’டை ‘ஆன்’ செய்தபோது, அவருடைய ‘வாட்ஸ்ஆப்’பில் ரிதன்யாவின் மொபைலில் இருந்து அடுத்தடுத்து நிறைய ஆடியோக்கள் வந்துள்ளன. அதைக்கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin