எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதானது தண்டனைச்சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவு நீக்கப்படாமை, அரச நிறுவனங்களில் வெளிப்படைத்தன்மை பேணப்படாமை, அரச நிறுவனங்கள் கட்டமைப்பு ரீதியான மாற்றத்துக்கு உட்படாமை, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்குத் தொடர்தல் என்பன உள்ளடங்கலாக பல்வேறு கட்டமைப்புசார் சிக்கல்கள் ஆழமாக வேரூன்றியிருப்பதைக் காண்பிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு முகவரி இடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்ட ஐந்து வகையான புத்தகங்களின் 360 பிரதிகள் இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் கடந்த மார்ச் 18 ஆம் திகதி முதல் தடுத்துவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிவில் செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகள் உள்ளடங்கலாகப் பலரும் தமது கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்திவரும் நிலையில். இதுபற்றிய தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன் அதில் மேலும் கூறியிருப்பதாவது:
தீபச்செல்வனின் நூல்கள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதானது பல்வேறு கட்டமைப்புசார் சிக்கல்கள் ஆழமாக வேரூன்றியிருப்பதைக் காண்பிக்கிறது.
முதலாவதாக தண்டனைச்சட்டக்கோவையின் 120 ஆவது பிரிவு நீக்கப்பட்டிருக்கவேண்டிய ஒன்றாகும். ஆனால் அரசாங்கம் மாற்றுக்கருத்துக்களை நசுக்கவும், கருத்துச்சுதந்திரத்தை தடைசெய்யவும் இந்தப் பிரிவை ஒரு பொதுவான கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
அதேபோன்று அரச கட்டமைப்புக்கள் வெளிப்படைத்தன்மையுடனோ அல்லது உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியோ இயங்குவதில்லை. நூல்களை விடுவிக்கக்கூடாது எனத் தீர்மானிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட அளவுகோல்கள் மற்றும் செயன்முறைகளை சுங்கத் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பன வெளிப்படுத்தவேண்டும். அந்த நூல்களை மீளாய்வு செய்தவர்கள் மற்றும் அவற்றைத் தடுத்துவைப்பதற்குப் பரிந்துரைத்தவர்கள் யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை தீபச்செல்வனுக்கு உண்டு.
அத்தோடு அரசாங்கம் மாறினாலும் அரச நிறுவனங்கள், குறிப்பாகப் பாதுகாப்புத்துறையானது முன்னைய அரசாங்கங்களின்கீழ் எவ்வாறு இயங்கியதோ அவ்வாறே தற்போதும் இயங்குகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் கட்டமைப்பு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய முறையான மற்றும் தெளிவான அறிவுறுத்தல்களை அரசாங்கம் சகல அரச நிறுவனங்களுக்கும் வழங்கவேண்டும்.
மேலும் தற்போதைய அரசாங்கம் தட்டிக்கேட்காது என்ற நம்பிக்கையில் பாதுகாப்பு அமைச்சு ஏதேச்சதிகாரப்போக்குடன் செயற்படுவதானது தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதற்குக் காரணமாக இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
The post தீபச்செல்வனின் நூல்கள் தடுத்துவைப்பு: கட்டமைப்புசார் சிக்கல்கள் | அம்பிகா சற்குணநாதன் விசனம் appeared first on Vanakkam London.