பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ஹஃப்ஸா கலில்
- பதவி,
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
துபையில் இருந்து இஸ்ரேல் சென்ற ஒரு விமானம், விமானிகளுக்கு இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் மோதலைத் தொடர்ந்து சௌதி அரேபியாவில் அவசரக்கால அடிப்படையில் தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பயணித்த இஸ்ரேல் பயணி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, விமானப் பணியாளர்கள் உதவி கேட்டதைத் தொடர்ந்து, பயணிகள் இணைந்து விமானிகளில் ஒருவரைக் கட்டுப்படுத்தி, கட்டிப் போட்டதாகத் தெரிவித்தார்.
ஃப்ளைதுபை விமானம் தொடர்பான இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட ஓர் அறிக்கையில், “கத்திக் குத்து தாக்குதலை நடத்திய விமானி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது சௌதி அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக” தெரிவித்துள்ளார்.
ஃப்ளைதுபை விமானம் புதன்கிழமை காலை புறப்பட்டது. விமானங்களின் பயணத்தைப் பின்தொடரும் ஃப்ளைட்ரேடார்24 இணையதளத்தின் தகவல்படி, புறப்பட்டு சுமார் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு அந்த விமானம் ஒரு அவசரக்கால சிக்னலை வெளியிட்டது.
சில நிமிடங்கள் கழித்து, அது கடத்தல் குறியீடாக மாற்றப்பட்டது. இருப்பினும், பின்னர் அது மீண்டும் வழக்கமான அவசர நிலை சிக்னலாக மாற்றப்பட்டது.
பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரேல் அதிகாரிகள் ஊடகங்களிடம், ஒரு விமானி மற்றொரு விமானியைக் கத்தியால் குத்தியதாகத் தெரிவித்தனர். அந்த அதிகாரிகளின் கூற்றுப்படி, தாக்குதல் நடத்திய விமானி விமானத்தைக் கடத்தவோ அல்லது அதை விபத்துக்கு உள்ளாக்கவோ திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும், தாக்குதல் நடத்திய விமானியின் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிக்கையும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.

பெஞ்சமின் நெதன்யாகு கூறியது என்ன?
“விமானம் இஸ்ரேலை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, ஒரு விமானி மற்றொரு விமானியை கத்தியால் தாக்கினார். மேலும், விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளுடனும் சேர்த்து அந்த விமானத்தை விபத்துக்குள்ளாக்க அவர் முயன்றதாகத் தெரிகிறது,” என்று நெதன்யாகு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
“விமானத்தில் இருந்த இஸ்ரேல் பயணி ஒருவருடன் நான் பேசினேன். அவர் கூறுகையில், விமானம் சுழலத் தொடங்கி கீழிறங்க ஆரம்பித்தது. எப்படியோ அவர் ஒரு விமானப் பணியாளருடன் சேர்ந்து விமானிகளின் அறைக்குள் நுழைய முடிந்தது. அவர்கள் இருவரும் இணைந்து, கத்தியால் தாக்குதல் நடத்தியதுடன் விமானத்தின் அமைப்புகளைச் சேதப்படுத்த முயன்ற விமானியைக் கட்டுப்படுத்தினர்.”
“விமானத்தில் இருந்த மற்றொரு பணியாளரும் விமானிகளின் அறையை அடைந்து, விமானத்தை நிலைப்படுத்த முடிந்தது. அசாதாரணமான மன அமைதியையும் துணிச்சலையும் வெளிப்படுத்திய இந்த வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள் பல உயிர்களைக் காப்பாற்றியதுடன், ஒரு பெரிய துயரச் சம்பவத்தையும் தவிர்த்துள்ளனர்.”
“அந்த விமானம் சௌதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. அனைத்துப் பயணிகளும் தற்போது ஆபத்தில் இருந்து வெளியே உள்ளனர். கத்திக் குத்துத் தாக்குதலை நடத்திய விமானி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது சௌதி அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.”
பட மூலாதாரம், Alexi J. Rosenfeld/Getty Images
தாக்குதல் நடத்திய விமானி பிடிபட்டது எப்படி?
விமானத்தில் பயணித்த ஒருவர், திட்டமிடப்பட்ட தரையிறக்க நேரத்திற்கு சுமார் ஒரு மணிநேரத்திற்கு முன்பு விமானம் கட்டுப்பாட்டை இழந்து, “வேகமாக கீழே விழத் தொடங்கியது” என்று இஸ்ரேலிய நாளிதழான ஹாரெட்ஸ்-க்கு தெரிவித்தார்.
டாலியா ஸ்பீகல் என்ற அந்தப் பயணி, “திடீரென முழு விமானமும் பயங்கரமான அலறல்களால் அதிர்ந்தது. பின்னர், மூன்று முதல் ஐந்து பேர் வரை விமானி அறைக்குள் விரைந்து சென்று, தாக்குதல் நடத்தியவரைக் கட்டுப்படுத்திவிட்டு, காயமடைந்த விமானிக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்” என்றார்.
“நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக நாங்கள் உணர்ந்தோம். அதன் பிறகு பயணம் தொடர்ந்தது. விமானி அறையில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் படிப்படியாக வெளிவரத் தொடங்கின,” என்று ஸ்பீகல் கூறினார்.
மேலும் பேசிய அவர், அந்த “இளைஞர்கள்” பின்னர் பொறுப்பேற்று, பயணிகளுக்கு உதவத் தொடங்கினர். இதற்கிடையில், விமானம் தனது பாதையை மாற்றி சௌதி அரேபியாவில் தரையிறங்கச் சென்றது.
அத்துடன், “தற்போது நாங்கள் அனைவரும் விமான நிலைய முனையத்தில் இருக்கிறோம். மருத்துவக் குழுக்கள் எங்களைப் பரிசோதித்து வருகின்றன,” என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Reuters
விமானப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில் என்ன இருந்தது?
இஸ்ரேலிய ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், விமானத்தில் இருந்த நேரில் கண்ட சாட்சி ஒருவர், “கத்தி ஏந்திய ஒரு தாக்குதல் மேற்கொண்ட நபர்” விமானிகளில் ஒருவரைத் தாக்கியதாகக் கூறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிபிசி வெரிஃபை இந்த வீடியோவை உண்மைத் தன்மை சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்பட்ட மாற்றங்களுக்கான எந்த அறிகுறியும் இல்லை. மேலும், இந்தச் சம்பவத்திற்கு முன்பு அது இணையத்தில் பதிவிடப்பட்டதாகத் தெரியவில்லை.
அந்த வீடியோவில், விமான இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் கேமராவில் பேசுவதைக் கேட்க முடிகிறது. அவர், “நாங்கள் விமானத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டோம். கத்தி ஏந்திய ஒருவர் விமானிகளில் ஒருவரைத் தாக்கினார்” என்று கூறுகிறார்.
அவர் மேலும், தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் நபர் விமானி அறையிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும், தற்போது அனைத்தும் “நன்றாக” இருப்பதாகவும் கூறுகிறார்.
“ஒரு விமானி மிகவும் தீவிரமாகக் காயமடைந்துள்ளார்,” என்று அவர் கூறுகிறார். “இரண்டாவது விமானியும் காயமடைந்தார். ஆனால் அவரால் விமானத்தைத் தரையிறக்க முடிந்தது. அவருடன் இரண்டு பணியாளர்கள் உள்ளனர். கதவு மூடியே இருக்கும்படி நாங்கள் உறுதி செய்தோம்” என்றும் அவர் கூறுகிறார். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலிய ஊடகங்களின் தகவல்படி, விமானப் பயணத்தின்போது விமானி மற்றும் துணை விமானி இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, விமானம் அவசர சிக்னல் ஒன்றை அனுப்பியது. அதன் பின்னர் சிறிது நேரம் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும் ஏற்பட்டது.
FZ1073 என்ற விமானப் பயணம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபை சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. அதில் சுமார் 150 முதல் 180 பேர் வரை பயணித்தனர். அவர்களில் பெரும்பாலோர் இஸ்ரேல் குடிமக்களாக இருந்தனர்.
விமானங்களின் பயணத்தைப் பின்தொடரும் ஃப்ளைட்ரேடார்24 இணையதளத்தின் தகவலின்படி, புறப்பட்டு சுமார் இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு அந்த விமானம் முதலில் 7700 என்ற ஸ்க்வாக் குறியீட்டை அனுப்பியது. இது பொதுவான அவசர சிக்னலாகும்.
சில நிமிடங்கள் கழித்து, விமானம் 7500 என்ற குறியீட்டை அனுப்பியது. இது விமானத்தில் அனுமதியற்ற தலையீடு அல்லது கடத்தல் நடந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. பின்னர் அது மீண்டும் 7700 என்ற குறியீட்டை அனுப்பியது.
பட மூலாதாரம், EVN
காயமடைந்த தலைமை விமானியும் முதல் அதிகாரியும்
ஃப்ளைதுபை நிறுவனம், இந்தச் சம்பவத்தில் தலைமை விமானி, முதல் அதிகாரி இருவரும் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், உள்ளூர் நேரப்படி காலை 8.44 மணிக்கு அவசர தரையிறக்கத்திற்கான சிக்னல் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துக்குக் கிடைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து வெறும் ஒரு மணிநேரத்திற்குப் பிறகு, அந்த விமானம் ஓடுபாதையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
பயணிகள், சௌதி அரேபியாவுக்கு விமானம் மாற்றித் திருப்பப்படுவதற்கு முன்பு, ஒரு விமானி கத்திக் குத்தால் காயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்களிடம் தெரிவித்தனர். பிபிசி வெரிஃபை உண்மையானது என உறுதிப்படுத்திய ஒரு வீடியோ இஸ்ரேலிய ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அதில், ஒருவர் செல்ஃபி முறையில் வீடியோ பதிவு செய்து கொண்டு, “நாங்கள் இங்கே இருக்கிறோம். விமானத்தில் இருந்த பயங்கரவாதிகளை நாங்கள் இப்போதுதான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். விரைவில் தரையிறங்கப் போகிறோம். விமானி தவிர்த்து, விமானத்தில் உள்ள அனைவரும் பாதுகாப்பாகவும் காயமின்றியும் உள்ளனர்,” என்று கூறுவது காணப்படுகிறது.
பட மூலாதாரம், LightRocket via Getty Images
மீட்புப் பணியில் ஈடுபட்ட பிரிட்டிஷ் வம்சாவளி விமானி
அல்மோக் இட்டாலி என்ற பயணி ஊடகங்களிடம் கூறுகையில், விமானத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றுக்கொண்ட அந்த இரு விமானிகளும் அடுத்த விமானப் பயணத்தை இயக்குவதற்காக பணியில் இருந்த மாற்று (Relief) விமானிகள் என்று தெரிவித்தார்.
“அவர்களில் ஒருவர் பிரிட்டிஷ் விமானி,” என்று இட்டாலி கூறினார். மற்றொரு விமானி ஐரோப்பியர் என்றும், ஆனால் தான் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதை அவர் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.
விமானி அறையில் (Cockpit) துல்லியமாக என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், அந்த மாற்று விமானிகள் விமானத்தை நிலைப்படுத்தி, அதை சௌதி அரேபியாவில் பாதுகாப்பாக தரையிறக்கினர் என்று இட்டாலி கூறினார்.
பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், “இரண்டு விமானிகளின் முன்பாக ஒரு விமானி கத்திக்காயத்துடன் கிடந்தது என்பது முற்றிலும் உறுதியான விஷயம்,” என்று இட்டாலி கூறினார்.
இஸ்ரேலிய ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவை பிபிசி வெரிஃபை உண்மையானதாக உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், விமான இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் கேமராவிடம் பேசுகையில், “நாங்கள் விமானத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றோம். கத்தியால் ஆயுதம் ஏந்திய ஒருவர் விமானிகளில் ஒருவரை கத்தியால் தாக்கினார்,” என்று கூறுகிறார்.
அவர் மேலும், குற்றம் சாட்டப்படும் தாக்குதலாளியை விமானி அறையிலிருந்து வெளியேற்றியதாகவும், தற்போது எல்லாம் “நன்றாக” இருப்பதாகவும் கூறுகிறார்.
“ஒரு விமானி மிகக் கடுமையாக காயமடைந்துள்ளார். மற்றொரு விமானியும் காயமடைந்துள்ளார். ஆனால் அவர் விமானத்தை தரையிறக்க முயற்சித்து வருகிறார். அவருடன் இரண்டு பணியாளர்கள் உள்ளனர். கதவு தொடர்ந்து மூடியே இருக்குமாறு நாங்கள் உறுதிசெய்தோம்,” என்று அவர் கூறுகிறார்.
ஷார்ட் வீடியோ

விமானப் பயணத்தின்போது என்ன நடந்தது?
ஃப்ளைட்ரேடார்24 வழங்கிய தரவுகளின்படி, விமானம் சௌதி வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரெனத் தனது பாதையை மாற்றிய விமானம், வேகமாகக் கீழிறங்கத் தொடங்கியது. இரண்டு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் அது 17,000 அடிக்கும் அதிகமாக உயரம் குறைந்தது.
உள்ளூர் நேரப்படி காலை 8:21 மணிக்கு, விமானம் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. விமானம் திடீரென கீழிறங்கத் தொடங்கிய பத்து நிமிடங்களுக்குப் பிறகும், சுமார் ஏழு நிமிடங்கள் தொடர்ந்து அவசர நிலை சிக்னல்களை அனுப்பிக் கொண்டிருந்தது.
மேலும், 05:40 மணியளவில், அந்த விமானம் சுருக்கமான நேரத்திற்கு ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்தது. சில நிமிடங்கள் கழித்து, அது மீண்டும் சௌதி அரேபியாவை நோக்கித் திரும்பி, கீழிறங்கத் தொடங்கியது. அந்த விமானம் டெல் அவிவ் நகரிலுள்ள பென் குரியன் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது. ஆனால், அது வடகிழக்கு சௌதி அரேபியாவில் உள்ள தபுக் விமான நிலையத்தில் தரையிறங்கியது.
சம்பவத்தின்போது விமானம் கீழிறங்கத் தொடங்கிய நேரத்தில், தங்கள் உயிருக்கு ஆபத்து எனக் கருதி அச்சமடைந்ததாக பயணிகள் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்தனர். பெயரை வெளியிட வேண்டாமென்ற நிபந்தனையின் அடிப்படையில் பேசிய இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், விமானிகளுக்கு இடையிலான கைகலப்புக்குப் பிறகு அவசர நிலை சிக்னல்கள் அனுப்பப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
ஆயினும், எந்த விமானி வேண்டுமென்றே அவசரக்கால சிக்னலை அனுப்பினார் என்பதும் உடனடியாகத் தெளிவாகவில்லை. இஸ்ரேலிய ஒளிபரப்பு நிறுவனமான N12 News-இன் தலைமை அரசியல் ஆய்வாளர் அமித் சேகல், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், விமானப் பயணத்தின்போது இரு விமானிகளும் மோதிக் கொண்டதாகத் தோன்றுவதாகவும், இதன் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஷார்ட் வீடியோ

அவரது பதிவைப் பகிர்ந்த அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான தூதர் மைக் ஹக்கபீ, இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு முழுவதும், குறிப்பாக இஸ்ரேலில், மக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை உயர் எச்சரிக்கை நிலையில் வைத்ததாகக் கூறினார். மேலும், நிலைமை இதைவிட மோசமடையாமல் போனது அதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்தார்.
ஜெருசலேம் போஸ்ட் நாளிதழில் வெளியிடப்பட்ட செய்திப்படி, சாத்தியமான அவசர நிலையை எதிர்கொள்ளும் வகையில் இஸ்ரேல் விமானப் படை தனது எச்சரிக்கை நிலையை உயர்த்தியிருந்தது.
இந்தச் சம்பவம் விமானக் கடத்தலாகக் கருதப்படவில்லை என்று இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த விமானம் தொடர்பான விவகாரத்தை அதிகாரிகளுடன் விவாதித்ததாக மூன்று இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ராணுவத் தலைமைத் தளபதி ஐயால் சமீர், விமானப் படைத் தளபதி மற்றும் பிற ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை மதிப்பீடு செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
ஃப்ளைதுபை நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “பயணத்தின்போது இந்த விமானம் ஒரு சம்பவத்தை எதிர்கொண்டது. எங்கள் குழுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன” என்று உறுதிப்படுத்தினார்.
ஃப்ளைதுபை நிறுவனம் துபை, டெல் அவிவ் இடையே தினசரி விமான சேவைகளை இயக்குகிறது. இந்த வழித்தடம் இஸ்ரேல் குடிமக்களிடையே மிகவும் பிரபலமானது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு