• Mon. Sep 30th, 2024

24×7 Live News

Apdin News

துயரவளை நாடி வந்திடாது என்றும் | நதுநசி

Byadmin

Sep 30, 2024


பெண்டீர் வந்து
போட்ட சண்டை
முடிந்து போன
ஆட்சிகள் காணீரோ?

தலைவர்கள் பலர்
தரணி சாய்ந்திட
நீர் சொல்லும்
மங்கையர் காரணம்.

அன்னையும் அவள்
தந்த அரவணைப்பும்
அவளின்றி வேறேது.
பரிதவித்த குழவிகளிடை.

காமத்தில் பெண்
காணும் சுகம்
வேறொன்றுக்கு நிகர்
இதுவரை இல்லை.

ஆற்றலும் அவளே
ஆர்ப்பரிப்பும் கூடவே
அவளுக்கு நிகர்
அவளன்றி வேறில்லை.

இருந்தும் பாருங்கள்
பாவம் அவள் வாழ்வு.
பழமான போதுமது
அழுகிப் போகின் வீண்.

சமூகம் வளர்ந்தேக
துணையாக வருவாள்.
கேட்டபடி வாழும் அந்த
பெண்ணிங்கே தெய்வம்.

அது விடுத்து
நடு வீதிக்கு வந்திட
வழி தந்திடும்
பெண் ஏதோ?

நேர்மறை வாதம்
பேச்சுக்கு பொருந்தும்
இருந்தும் பொருந்தாது
மனிதர் வாழ்வுக்கு.

நெறி சொன்ன மதம்
வழி மாறிப் போக
பலவுயிர் போகிறது
உடல் விட்டு பிரிந்து.

கேட்டால் சொல்லும்
காரணம் பாரும்
அது மதக் கலவரம்.
அமைதி எங்கே?

கோவிலுக்கு போக
அமைதி வரும்.
அந்த கோவிலை
தந்ததுமந்த மதம் தானே!

மாந்தர் வாழ்வை
கலவரம் ஆக்கி
சிதைத்து தந்தது
துயரம் பல.

பிறகெதற்கு அதன்
போதனைகள் நமக்கு.
அது தவறென
தெரிந்த பின்னும்.

அது போலிங்கு
வாழும் வகையில்
மங்கையர் பெறுவர்
போற்றும் வண்ணம்.

வளரும் பருவத்தில்
இடறும் பலருண்டு.
களைதல் விடுத்து
குறைகள் எதற்கு?

பல்லாயிரம் ஆண்டு
உருண்டோடி போகினும்
மண்ணின் மகவு
தமிழரிடை பெண்ணே!

மாற்றிட ஒரு
வேந்தன் வந்தாலும்
மாறிடாத உண்மை.
மங்கை மலராவாள்.

துயரவளை நாடி
வந்திடாது என்றும்.
அவளாக அதை தேடி
போகாத வரை.

நதுநசி

The post துயரவளை நாடி வந்திடாது என்றும் | நதுநசி appeared first on Vanakkam London.

By admin