• Fri. Jul 25th, 2025

24×7 Live News

Apdin News

தூத்துக்குடியில் ஜூலை 26-ல் நடைபெறும் விழாவில் ரூ.4,500 கோடி திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார் மோடி | Modi to inaugurate Rs 4500 crore projects in Thoothukudi on July 26

Byadmin

Jul 24, 2025


தூத்துக்குடி: தூத்துக்குடியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 26-ம் தேதி இரவு 8 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இதற்காக, மாலத்தீவில் இருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான தனி விமானத்தில் அன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வரும் பிரதமருக்கு, அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி, செட்டிநாடு கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விமான நிலைய பயணிகள் முனையம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடுகிறார்.

பின்னர், விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, தமிழகத்தில் மத்திய அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைத்துப் பேசுகிறார்.

மேலும், தஞ்சாவூர்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தில் 2-ம் கட்டமான சோழபுரம் முதல் சேத்தியாத்தோப்பு வரையில் ரூ.2,357 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை, ரூ.200 கோடி மதிப்பில் ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ள தூத்துக்குடி துறைமுகச் சாலை, ரூ.99 கோடியில் மதுரை – போடிநாயக்கனூர் இடையே மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில் பாதை, ரூ.650 கோடியில் நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி இடையிலான இரட்டை ரயில் பாதை, ரூ.283 கோடியில் ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் சந்திப்பு மற்றும் திருநெல்வேலி – மேலப்பாளையம் இடையிலான இரட்டை ரயில் பாதை என ரூ.3,970 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி திறந்துவைத்து, நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதேபோல, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கட்டப்பட்டு வரும் அலகு-3 மற்றும் அலகு 4-ல் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக ரூ.548 கோடியில் மின்பரிமாற்ற அமைப்பு கட்ட பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மொத்தம் ரூ.4,518 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் பங்கேற்கும் விழாவுக்காக தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், விமான நிலைய வளாகத்தை அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் வருகையை முன்னிட்டு விமான நிலைய வளாகம் முழுவதும் காவல் துறை மற்றும் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய பயணிகள் முனையம் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அப்பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பங்கேற்கும் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் விமான நிலைய மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் இணைந்து செய்து வருகின்றனர்.

விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்று இரவே தனி விமானம் மூலம் பிரதமர் திருச்சி புறப்பட்டுச் செல்கிறார்.

மோடியை சந்திக்கும் பழனிசாமி: தூத்துக்குடி விழாவில் பங்கேற்கும் பிரதமரை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. திருப்பத்தூர், சிவகங்கை தொகுதிகளில் பழனிசாமி 26-ம் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் வரும் 29-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, மாலத்தீவுக்கு புறப்பட்டார் பிரதமர்: இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய 2 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும், அந்த நாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவதாக பிரதமர் மோடி இங்கிலாந்து செல்லவுள்ளார். அங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லஸையும் சந்திக்கிறார். பின்னர் லண்டன் நகருக்கு அருகே அமைந்துள்ள பிரதமர் ஸ்டார்மரின் வீட்டில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், இரு நாடுகளிடையேயான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகிறார்.

இங்கிலாந்து பயணம் முடிந்ததும், வரும் 25, 26-ம் தேதிகளில் மாலத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள உள்ளார். மாலத்தீவின் சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்த பயணத்தின்போது மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். எண்ணற்ற, இந்திய ஆதரவு வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.



By admin