19
இங்கிலாந்தின் நார்ஃபோக் (Norfolk) மாகாணத்தில் உள்ள தெட்ஃபோர்ட் (Thetford) நகரில், அகதிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
அகதிகள் தங்கியிருப்பதாகக் கருதப்படும் வீடுகளுக்குள் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். பாதுகாப்புக் கருதி அந்த வீடுகளில் இருந்தவர்கள் பொலிஸாரால் அப்புறப்படுத்தப்பட்டனர்.
போராட்டத்தின் போது ஒரு பெண் பொலிஸார், ஒருவரால் கடுமையாகக் கடிக்கப்பட்டார். மற்றொரு பொலிஸார் மீது கல் வீசப்பட்டது.
வன்முறை தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சஃபோல்க் (Suffolk) எல்லைக்கு அருகே உள்ள முன்னாள் இராணுவ தளமான ஆர்.ஏ.எஃப் பர்ன்ஹாம் (RAF Barnham) பகுதியை, சுமார் 3,750 அகதிகள் தங்கும் இடமாக மாற்ற முன்மொழியப்பட்டுள்ள திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தப் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
உள்ளூர் இளைஞர்களுக்கு வீடுகள் கிடைப்பதில் சிக்கல் நிலவும் சூழலில், அகதிகளுக்கு இலவச தங்குமிடம் வழங்கப்படுவதாக மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தனியாக வரும் ஆண்கள் அதிக எண்ணிக்கையில் தங்குவதால், பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு குறித்து அச்சம் கொள்வதாகச் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் திட்டங்கள் குறித்து தங்களுக்கு முறையான தகவல் அளிக்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தெட்ஃபோர்ட் நாடாளுமன்ற உறுப்பினர் டெர்ரி ஜெர்மி (Terry Jermy), இந்த வன்முறை நகரத்தின் நற்பெயரை பல தசாப்தங்கள் பின்னோக்கித் தள்ளிவிட்டதாகவும், சிறுபான்மையின மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
நார்ஃபோக் தலைமை பொலிஸ் அதிகாரி பால் சான்ஃபோர்டு (Paul Sanford) கூறுகையில், வன்முறை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீதான தாக்குதல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், சட்டமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்த வன்முறையைக் கண்டித்துள்ளதோடு, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.