சென்னை: தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங்குகளில் ‘இன்டர்லாக்கிங்’ வசதி இல்லாதது தெரியவந்துள்ளது. இந்த கேட்களிலும் ‘இன்டர்லாக்கிங்’ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் முக்கிய காரணமாக கூறப்பட்டாலும், இந்த கேட்டில் இன்டர்லாக்கிங் வசதி இல்லாதது மற்றொரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இது அதிக போக்குவரத்து இல்லாத ‘சி’ பிரிவு கேட் ஆகும். ஒருவேளை, இங்கு இன்டர்லாக்கிங் வசதி இருந்திருந்தால், ரயில் ஓட்டுநருக்கு சிக்னல் கிடைத்து ரயிலை நிறுத்தியிருக்கக்கூடும் என்று முன்னாள் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
பெரும்பாலான ரயில் விபத்துகளுக்கு ஆளில்லாத லெவல் கிராசிங் முக்கிய காரணமாக இருந்ததால், ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் முற்றிலும் நீக்கப்பட்டதாக கடந்த 2019-ல் அப்போதைய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களைவையில் தெரிவித்தார். கடந்த ஜனவரி வரை கேட் கீப்பருடன் கூடிய 497 லெவல் கிராசிங்குகள் நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் கேட் கீப்பருடன் கூடிய 16,586 லெவல் கிராசிங்குகள் உள்ளன.
இந்த நிலையில், தெற்கு ரயில்வேயில் 276 லெவல் கிராசிங்குகளில் இன்டர்லாக்கிங் வசதி இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரயில்வேயில் ஆளில்லாத ரயில்வே கேட்கள் இல்லை. கடந்த 2019 செப்டம்பரில் அவை முழுவதுமாக நீக்கப்பட்டன. தெற்கு ரயில்வேயில் மொத்தம் 1,643 லெவல் கிராசிங் கேட்கள் உள்ளன. அதில் 1,367 கேட்களில் இன்டர்லாக்கிங் வசதி உள்ளன. எஞ்சிய 276 லெவல் கிராசிங் கேட் களில் இன்டர்லாக்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் உள்ள 153 லெவல் கிராசிங் கேட்களும் இன்டர்லாக்கிங் வசதி செய்யப்பட்டு விட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடலூர் செம்மங்குப்பத்தில் நிகழ்ந்தது போல, மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, எஞ்சிய அனைத்து லெவல் கிராசிங்கிலும் இன்டர் லாக்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள், பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
‘இன்டர்லாக்கிங்’ என்பது என்ன? – ‘இன்டர்லாக்கிங்’ என்பது ரயில்வே கேட் மற்றும் சிக்னல்களை ஒருங்கிணைக்கும் சிக்னல் கட்டுப்பாட்டு முறை. முறையாக ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால் மட்டுமே, அந்த ரயில்வே கேட்டுக்கான பிரத்யேக சிக்னலில் பச்சை விளக்கு ஒளிரும். ரயில்வே கேட் முழுமையாக மூடப்படாவிட்டால், சிக்னலில் சிவப்பு விளக்கு ஒளிரும். திறந்திருக்கும் ரயில்வே கேட்டை ரயில்கள் கடந்து செல்ல அனுமதி கிடைக்காது. ரயில்வே கேட் மூடப்பட்டால் மட்டுமே ரயில் அதை கடந்து செல்ல முடியும்.