• Fri. Sep 20th, 2024

24×7 Live News

Apdin News

தேசத்தின் உரிமைக்காக புள்ளடியிடுங்கள்! | உங்களுக்களுக்காகவே அகதியானவனின் அன்பு மடல் | சண் மாஸ்டர் உருக்கம்

Byadmin

Sep 20, 2024


மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் உருக்கம்
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

தமிழ்நாடு சென்னையில் வசித்துவரும் இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் அவர்கள் தமிழ் மக்களுக்கு எழுதிய அவசர மடல் என்ற தலைப்பிலே உருக்கமானான கடத்தல் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார். அதனை முழுமையாகத் தருகின்றோம்.

அன்புள்ள தமிழ்ச் சொந்தங்களுக்கு….!

எமது மக்களுக்கு அனைத்துலக அரங்கில் நீதி கிடைக்க வேண்டும் என்ற இலட்சியத்திற்காக பணியாற்றிய எனக்கு சிறீலங்கா அரசு தந்த அகதி என்ற அவல வாழ்வோடு, மேலதிகமாக இந்திய அரசு தந்த சட்டரீதியற்ற குடியேறி என்ற அவலத்தையும் சுமந்துகொண்டு பெரும் வலியோடு எமது மண்ணிலிருந்து அகதியாய் துரத்தப்பட்டாலும் உங்கள் மீது கொண்ட பேரன்பு காரணமாக உலகம் முழுவதும் சிதறிவாழும் என்னைப் போன்ற பல இலட்சக்கணக்கான புலம்பெயர் அகதிகளில் ஒருவனாக எமது தேசத்தின் உறவுகளாகிய உங்களை நோக்கி காலத்தின் அவசியம் உணர்ந்து இந்த அவசர மடலை எழுதுகின்றேன்.

உறவுகளுடன் கூடிமகிழ்ந்து, முற்றத்து மாமர நிழலில் ஓய்வெடுக்கும் காலத்தில், நாடற்றவனாய் உறவற்றவனாய் அலையும் என்னை போன்றவர்களுகே தேசத்தின் உரிமையும் தேவையும் உணர்வோம். நாளை நீங்கள் எங்களைப் போல் ஆகிவிடக்கூடாது என்ற உரிமையுடனே இம்மடலை அனுப்புகிறேன்.

செப்டம்பர் 21ஆம் நாள் ஜனாதிபதித் தேர்தல் நடக்கவிருக்கிறது. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒற்றையாட்சி அரசமைப்பின் கீழ் நடைபெறும் தேர்தல் ஆகும். சிங்கள மக்களே பெரும்பான்மை என்பதால் சிங்களவர் மட்டும் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். மொத்தத்தில் ஓர் சிங்களவரின் வெற்றிக்கான இனநாயகத் தேர்தலே இது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, நாமல் ராசபக்சே, சஜித் பிரேமதாசா, அனுர குமார திசநாயக்கா, சரத் பொன்சேகா போன்ற சிங்களத் தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் யாரும் தமிழர்களுக்கு நடத்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி வேண்டும் என்பதைப் பற்றி வாய் திறக்காதவர்கள். தமிழர்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்காதவர்கள். அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் கூட்டாட்சி பற்றி அவர்கள் பேசவில்லை. இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் சிங்கள இனவாதம் என்பதை மூடி மறைக்கிறார்கள் இனச் சிக்கலைத் தீர்க்காமல் இலங்கைத் தீவுக்கு மீட்சி இருக்கப் போவதில்லை. இந்த தேர்தலில் இவர்களில் யாருக்காவது வாக்களிப்பது என்பது தமிழர்களுக்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பைத் தொடர்வதற்காக வழங்கப்படும் ஒப்புதல் வாக்கு மூலமாகவே அனைத்துலக சமூக கவனிக்கும்.

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு

முள்ளிவாய்க்காலில் எம் மக்கள் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த சிங்கள பெளத்த பேரினவாததின் இனவழிப்பு நடவடிக்கைகள் அத்துடன் நின்றுவிடவில்லை. கடந்த 15 ஆண்டுகளில் தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்குப் பகுதிகளில் பெளத்த விகாரைகளை நிறுவிப் பண்பாட்டை அழித்தொழித்து வருகிறார்கள். எடுத்துக்காட்டு திருகோணமலையில் 26 பெளத்த விகாரைகள், முல்லைத்தீவில் 67 விகாரைகள். முருகன், சிவன் கோவில்கள்கூட பெளத்த தொல்லியல் சின்னங்களாக மாற்றப்படுகின்றன. சிங்களக் குடியேற்றங்கள் தொடர்கின்றன. வடக்கிலும், கிழக்கிலும் சுமார் 65,000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து நிற்கிறது சிங்களப் படை. தொல்லியல் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம், வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் என்ற பெயரில் தமிழர் நிலங்களைப் பறிப்பதும் சிங்கள பெளத்தமயமாக்கலும் தொடர்கிறது. இதன் நோக்கம் என்ன? தமிழர்கள் தாயகம் என்ற அடிப்படைகளை அழித்து தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனமே கிடையாது என்ற நிலைமையை உருவாக்குவதாகும். இதைத் தான் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு என்கிறோம். இக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்குள் தான் நீங்கள் வாழ்கிறதை உணருங்கள். நாளை உங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள துளசி மாடங்களுக்குள் புத்தரை புகுத்துவார்கள்.

சிங்கள வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்

அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் குறித்தோ அவர்களுக்கான தீர்வு குறித்தோ எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. இது எமக்கு ஒன்றும் ஆச்சரியமான விடயம் இல்லை. சிங்கள தலைவர்கள் முக்கால் நூற்றாண்டாக, இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவில்லை. இனிமேல் வழங்குகின்ற நிலைப்பாட்டிலும் இல்லை. அவர்கள் எப்போதும் சிங்கள பௌத்த பேரினவாத மனோ நிலையில் இருந்தே, தங்களின் அரசியலை முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். அந்த நிலையை அவர்கள் இப்போது கூட மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. எந்த ஒரு வேட்பாளரின் தேர்தல் அறிக்கைகளிலும் இனப்பிரச்சினை என்ற ஒரு வார்த்தை கூட கிடையாது. ஆனால் இந்த இனப் பிரச்சினை இலங்கையில் மூன்று தசாப்த போரையும், அதனைச் சார்ந்த பேரழிவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. போருக்கு பின்னர் பொருளாதார பேரழிவுகளுக்கு காரணமாக இருந்திருக்கிறது. ஆனாலும் அதற்கு மூல காரணமாக உள்ள இனப் பிரச்சனையை தீர்த்து தமிழர்களுடன் இணக்கமாக வாழுகின்ற முடிவுக்கு சிங்கள மக்களே சிங்கள தலைவர்களோ வரவில்லை.
பிரச்சினை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளாமல், அதனைத் தீர்த்து வைக்க முடியாது. பிரதான சிங்கள வேட்பாளர்கள் இனப்பிரச்சினையை ஏற்றுக்கொள்ளவோ அதற்கு நியாயமான தீர்வை வழங்குகின்ற மனோநிலையோ இல்லாதபோது எவ்வாறு அதனைச் சார்ந்து வாக்குறுதிகளை முன் வைப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

பூகோள நலன்சார் அரசியல்

பூகோள அரசியலில் முக்கியத்துவம் பெற்ற எந்த ஒரு புள்ளிக்கும், மிகப்பெரிய பெறுமதி இருக்கும். இலங்கையும் அவ்வாறு தான். இலங்கைத் தீவின் அமைவிட முக்கியத்துவம் உலகப் பெரும் வல்லரசுகளையும், பிராந்திய வல்லரசுகளையும் அதனை நோக்கி எப்போதும் ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில் இலங்கை அரசியலை அரசை தங்களின் கைக்குள் வைத்துக் கொள்வதற்கு முனைகின்ற சக்திகள் பல இருக்கின்றன. கடந்த ஜனாதிபதித் தேர்தல்களிலும் இவ்வாறான தலையீடுகள் காணப்பட்டன. இந்த முறை அவ்வாறான தலையீடுகள் இல்லை என்று கூறுவதற்கு இல்லை. ஏனென்றால் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற பல நாடுகளுக்கு, இந்தப் பிராந்தியத்தை கையாளுவதற்கான திறவுகோலாக இலங்கை இருக்கிறது. இந்த திறவுகோல் எப்போதும் தங்களின் கையில் இருப்பதை வல்லமைமிக்க நாடுகள் விரும்புகின்றன. அதனை தங்களின் கைகளுக்கு கொண்டு வரக்கூடியவரை ஆட்சியில் அமர வைப்பதற்கு அந்த நாடுகள் முயற்சிப்பதில் புதுமை ஏதும் இல்லை.

அதனடிப்படையில் இன்று வரலாற்றில் ஒன்றும் இல்லாதவாறு அனைத்துலக வல்லாதிக்க சக்திகளும், அவற்றின் உளவுத்துறைகளும் இலங்கையிலே மையம் கொண்டிருக்கும் அளவுக்கு இலங்கை ஜனாதிபதித் தேர்தல் களம் கொதிநிலை அடைந்திருக்கும்போது, தமிழர்கள் நாம் விழிப்படையவில்லை என்றால் இலங்கைத் தீவில் தமிழர்கள் என்ற ஒரு இனம் வாழ்ந்தார்கள் என்ற தடயமே இல்லாமல் பேரினவாதிகள் அழித்துவிடும் ஆபத்தை உணர்ந்து தமிழ் மக்கள் அனைவரும் நெஞ்சுக்கு நீதியாக கொள்கையின் வழியே வாக்களிக்க வேண்டும்.

ரணில் – சஜித் – அனுர

தமிழீழ விடுதலைப் புலிகளை நான் தான் பிளவுபடுத்தினேன். அவர்களை உளவியல் ரீதியாக தோற்கடித்து யுத்தத்திற்கான களத்தை நானே திறந்து விட்டேன் என்று மார் தட்டிக் கொண்ட ரணிலின் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையின் நீட்ச்சியாகவே அனைத்துலகச் சர்வதேச விசாரணை என்ற விளிம்பில் இருந்த இனவழிப்பு நீதிக்கான கோரிக்கைகளை தானே இலங்கையின் உள்ளக பொறிமுறைக்குள் இழுத்து வந்து ஆட்சியாளர்களை காப்பாற்றினேன் என்று வெளிப்படையாகவே அவர் கூறுகிறார். ரணிலுக்கு நான் சளைத்தவன் அல்ல என ஆயிரம் புத்த விகாரைகளைக் கொண்டு வரும் சபதத்தோடு களமிறங்கிய சஜித்துக்கு கண்டி பௌத்த பீடத்தின் மேலாதிக்க சக்திகள் வாழ்த்து மழை பொழிந்தன. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தை நீதிமன்றம் வரை சென்று இரண்டாகப் பிளந்தவர். அடுத்தவர் அவர் பெயர் அனுர இவர்களுக்கு உண்மையில் எப்படி தமிழ் மக்கள் வாக்குப்போட முடியும் என்று இவர்களுக்காக வாக்கு கேட்டவர்களிடம் நீங்கள் கேள்வி கேட்டிருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

முள்ளிவாய்க்கால் அவலம் மனக்கண்ணில் நிழலாடவில்லையா ?

என் தமிழ்ச் சொந்தங்களே… !

சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு எந்த முகத்தோடு வருகிற மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் விளக்கு கொளுத்தப் போகின்றீர்கள். கார்த்திகை 27 இல் உங்கள் மாவீரக் குழந்தைகளுக்கு எப்படி அஞ்சலி செலுத்தப்போகின்றீர்கள். மே 18 இலும் கார்த்திகை 27 இலும் விளக்கேற்றி அஞ்சலிக்கின்ற எந்த ஒரு மானத் தமிழனும் நிச்சயம் சிங்கள இனவாத வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

தாயகத்தில் உள்ள எனது உறவுகளே சிந்தியுங்கள்.

எங்களை இனவழிப்புச் செய்த இனப் படுகொலையாளர்களுக்கே மீண்டும், மீண்டும் வாக்களித்து எம் மீதான தொடர்ச்சியான கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு வலுச்சேர்த்து தாய்நிலத்தை தொலைத்தவர்கள் என்றார் அபூர்வ இனம் என வரலாறு கடந்த ஒரு காலத்தில் மனித குலங்கள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் வியப்படையும் வகையில் நாம் சிங்கள தேசத்திற்கும் அவர்களின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் சில தமிழர் விரோதிகளுக்கும் தலையசைக்கும் சமூகமாக இருக்கப்போகிறோமா ? இல்லையேல் தமிழர்கள் ஒரு கிறுக்குப் பிடித்தவர்கள். அவர்கள் வீழ்த்தப்பட்ட சாம்பல் மேட்டிலிருந்தே துளிர்த்தெழுந்து அறிவுபூர்வமாக சிந்தித்து முடிவெடுக்கத் துணிந்துவிட்டார்கள் என நிரூபிக்கப் போகின்றோமா ?

இதுவரை கலாமும் இலங்கை ஜனாதிபதிகள் தமிழர்களுக்கு தந்த பரிசு என்பது பல இலசக்கணக்கான தமிழ் மக்களை கொடூரமாக கொன்றொழித்ததோடு,10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை அகதியாக்கிவிட்டு,தமிழர் தாயகத்தை எவ்வளவும் முடியுமோ அந்தளவிற்கு ஆக்கிரமித்ததுமே. எனவே சிங்கள பேரினவாதிகளின் அநீதிகள் அனைத்தும் தமிழ் மக்கள் நெஞ்சில் நிறுத்தி
பேரினவாதிகளை விட அவர்களின் தேர்தல் தரகர்களாக மாறிய எமது சில தமிழ்த் தலைவர்களின் துரோகத்தனமான பிரச்சாரங்களுக்குள் சிக்காமல் தமிழ் மக்களின் இருப்புக்காக வாக்களிக்க வேண்டும் என்று உங்களின் ஒருவனாக அன்போடும் அவசரத்தோடும் வேண்டிக்கொள்கிறேன்.

எனது உறவுகளே தெரிவு உங்கள் கைகளில்.

வெற்றிச் சங்கு எடுத்து இன அழிப்பாளர்களைச் சங்காரம் செய்வதும் அந்த இன அழிப்பாளர்கள் எங்களுக்கு மரணச் சங்கு ஊதுவதும் உங்கள் கைகளில்

அன்புடன்
சண் மாஸ்டர்

By admin