“தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது, அனைத்துக் கட்சியினரும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள்” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
திருச்சியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த, அமமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து 360 டிகிரியில் பலமுறை தெரிவித்துவிட்டேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். அதிமுக கூட்டங்களில் பொதுச் செயலாளர் பழனிசாமி, கூட்டணியில் உள்ள கட்சி பெயர்கள் கூறும்போது, அமமுக பெயரை கூறாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அப்போது, கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் அமைச்சரவை யில் இடம் பெறுவார்கள். முதல்வர் வேட்பாளர் குறித்து அமித் ஷாவிடம் தான் கேட்க வேண்டும். ஸ்டாலினுடன் மக்கள் இல்லை என்பதை புரிந்து கொண்டு தான், ‘உங்களுடன் ஸ்டாலின்’ நிகழ்ச்சியை நடத்துகிறார்.
எங்கள் கூட்டணியை கண்டு திமுக அச்சத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் கஞ்சா, போதை மருந்து, கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. 210 இடங்களில் திமுக தோல்வியடையப் போகிறது. அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.பி அன்வர் ராஜா திமுகவுக்கு சென்றது வருத்தமாக உள்ளது” என்று அவர் கூறினார்.